உலகம்

லெபனான் அரசுடன் மட்டும் பேச்சுவார்த்தை… ஹிஸ்புல்லாவுடன் இல்லை; இஸ்ரேல் முடிவு

அமெரிக்கா வொஷிங்டனில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள லெபனான் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது, ஹிஸ்புல்லா அமைப்புடன் போர் நிறுத்தம் குறித்து எவ்வித விவாதமும் நடத்தப்போவதில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லாத சூழலில், இஸ்ரேலியத் தூதுவர் யெச்சியல் லெயிட்டர் மற்றும் லெபனான் தூதுவர் நடா ஹமாதே ஆகியோர் பங்கேற்கும் இந்தச் சந்திப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், ஹிஸ்புல்லாவை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதும் இஸ்ரேல், ஹிஸ்புல்லாவுடன் அமைப்பை ஆயுதமற்றதாக்குவதையே தனது பிரதான இலக்காகக் கொண்டுள்ளதால் சமரசம் செய்யப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.

மறுபுறம், பேச்சுவார்த்தைக்கான இராஜதந்திர ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இன்றும் தடையின்றித் தொடர்ந்து வருகின்றன.

கடந்த சில நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது என இஸ்ரேலும் அமெரிக்காவும் தெளிவுபடுத்தியுள்ளன.

இதற்குப் பதிலடியாக, லெபனான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ஈரான் எச்சரித்துள்ளது.

அத்துடன், இஸ்ரேலுக்கு எந்தவித விட்டுக்கொடுப்புகளையும் வழங்க வேண்டாம் என ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் லெபனான் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய பதற்றமான மற்றும் சிக்கலான அரசியல் சூழலுக்கு மத்தியில் வொஷிங்டனில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *