அமைச்சர் சந்திரசேகர் கப்பம் பெறுகின்றார்; சாணக்கியன் எம்.பி.குற்றச்சாட்டு

கடற்றொழில் அமைச்சர் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு கப்பம் பெறுகின்றார். எனவே அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையேல் அடுத்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடற்றொழில் அமைச்சருக்கு எதிராகக் கொண்டு வர நேரிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா. சாணக்கியன் எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27 / 2 இல் கீழ்விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு எச்சரித்த சாணக்கியன் எம்.பி. மேலும் பேசுகையில்,
சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வடக்கு மாகாணத்துக்கு வருகின்றார். சகல தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றார். அங்கு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன . ஆனால் அரசாங்கத்தின் பிரதிநிதியாக செயற்படும் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
கடற்றொழில் அமைச்சர் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதில்லை. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இவர் அனுமதி வழங்கியுள்ளார்.அதேபோல் அவர்களிடமிருந்து கப்பம் பெறுகின்றார். இவரது முறைகேடுகள் தொடர்பில் பலர் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.இவரது கப்ப விடயங்களை நாங்கள் வெளிப்படுத்தும் போது இவர் பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு எம்மீது குற்றஞ்சாட்டுகிறார். போலியான விடயங்களை கூறுகின்றார்
எனவே கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக உரிய நடவடிக்கையை உடனடியாக எடுங்கள் இல்லையேல் அடுத்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவருக்கு எதிராகக் கொண்டு வர நேரிடும் என்றார்.
![]()