நான் முஸ்லிம் என்பதால் சஹ்ரானுடன் என்னை சிக்கவைக்க முயற்சி

நான் முஸ்லிம் என்ற காரணத்தினால் என்னை சஹ்ரானுடன் சிக்கவைக்க முயற்சிக்கிறார்கள். சஹ்ரானுக்கு பின்னால் சிலர் இருப்பதாக நான் மாத்திரமல்ல, பல அரசியல்வாதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.அவர்கள் தொடர்பில் எதுவும் கதைப்பதில்லை. எங்களை அச்சுறுத்தி, எங்களது வாயை மூடச்செய்து, இந்த விசாரணையை மூடிமறைக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
சஹ்ரானின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இழுக்கு ஏற்பட்டதுடன் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இது தொடர்பான விசாரணை இடம்பெற்றுச் செல்லும்போது பல்வேறு விடயங்கள் வெளிவந்தன.வெளிவந்த விடயங்களின் மூலம் சஹ்ரான் உள்ளிட்ட குழுவுக்கு இவ்வாறான பாரிய தாக்குதலை மேற்கொள்ள யாருடைய உதவியும் இல்லாமல் மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் பாரியளவில் எழுந்தது.
தற்போது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் ரவி செனவிரத்ன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சி வழங்கும்போது, சஹ்ரானுக்கு பின்னால் சிலர் இருக்கிறார்கள் எனத் தெரிவித்து, துண்டு சீட்டொன்றில் யாருடையதோ பெயரையும் எழுதிக்கொடுத்தார்.
அதேபோன்று இந்த தாக்குதல், சதித் திட்ட நடவடிக்கை என முன்னாள் சட்டமாஅதிபர் தப்புல லிவேராவும் தெரிவித்திருந்தார். அவ்வாறு தெரிவித்துவிட்டு பின்னர் அவர் விசாரணைக்கு செல்லாமல் தலைமறைவாகவும் இருந்தார். பின்னர் அவர் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு நீதிமன்றத்தால் ரிட் மனு ஒன்றையும் பெற்றுக்கொண்டார். அதேபோன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கி பலரின் வாக்குமூலங்களில், இந்த சஹ்ரானின் தாக்குதலுக்கு பின்னால் சிலர் செயற்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. அதனால் சஹ்ரானுக்கு பின்னால் இருந்து செயற்பட்டவர்களும் இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்கள். அதனால் இவர்களையும் கைது செய்யவேண்டும். இவர்கள் சுதந்திரமாக இருப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றே தெரிவிக்கப்பட்டது. அதனாலே இவர்களை கண்டுபிடிக்குமாறு நாங்களும் தெரிவித்து வந்தோம்.
கோத்தபாய ராஜபக்ச,தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது பிரதான தொனிப்பொருளாக இருந்தது, தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாகும். கத்தோலிக்க சபைக்கும் அது தொடர்பில் வாக்குறுதியளித்தார்கள். இறுதியில் அவர்கள் பிரதான சூத்திரதாரியாக ரிஷாத் பதியுதீன்,அவரது சகோதரர் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரையே பெயரிட்டார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லை என பின்னர் நீதிமன்றத்தால் ஒப்புவிக்கப்பட்டு, ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் விடுதலை செய்யப்பட்டனர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான வழக்கு மாத்திரம் தற்போது நீதிமன்றில் விசாரிக்கப்படுகிறது. அதுவும் மிகவும் பலவீனமான நிலையிலே இருக்கிறது.
கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பதாக ஏற்றுக் கொண்டவர்கள் தற்போது, பிரதான சூத்திரதாரி என ஒருவரும் இல்லை என்கின்றார்கள் . இதுதான் தற்போதுள்ள பிரச்சினை.இந்த கருத்துக்கு எதிரான கருத்தை நான் தெரிவிக்கும்போது, நான்தான் பிரதான சூத்திரத்திரதாரியென தெரிவிக்கிறார்கள். அவர்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயற்படுவதை எதிர்க்கிறார்கள்.
நான் முஸ்லிம் என்ற காரணத்தினால் என்னை சஹ்ரானுடன் சிக்கவைக்க முயற்சிக்கிறார்கள். சஹ்ரானுக்கு பின்னால் சிலர் இருப்பதாக நான் மாத்திரமல்ல, பல அரசியல்வாதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.அவர்கள் தொடர்பில் எதுவும் கதைப்பதில்லை.
சஹ்ரானுக்கு உதவி செய்த தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் இருப்பார்களாக இருந்தால், அது தொடர்பில் தேடுமாறே நாங்கள் தெரிவிக்கின்றோம். மாறாக சஹ்ரானுடன் இதனை முடித்துக்கொள்ளுமாறு அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தத் தாக்குதலால் தனிப்பட்ட முறையில் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன். எனது மகனுக்கு பாடசாலைக்கு செல்ல முடியாமல் போனது. எமது பெண்களுக்கு கலாசார ஆடை அணிய முடியாமல் போனது. அந்தளவுக்கு நாங்கள் பாதிக்கப்பட்டோம். அதனாலே சஹ்ரானுக்கு உதவி செய்த யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்துக்குமுன் நிறுத்துமாறு தெரிவிக்கிறோம். அவ்வாறு இல்லாமல் எங்களை அச்சுறுத்தி, எங்களது வாயை மூடச்செய்து, இந்த விசாரணையை மூடிமறைக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்றார்.
![]()