கம்மன்பிலவின் புத்தகத்தால் விசாரணைகளுக்கு இடையூறு; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

உதய கம்மன்பில வெளியிட்ட புத்தகத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில விடயங்கள் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியிருப்பதுடன் , நீதிமன்ற நடவடிக்கைகளையும் தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
உதயகம்மன்பில அண்மையில் வெளியிடப்பட்ட நூல் வெளியீட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரிக்கு உதவி வழங்கியவர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்கள். சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டது உண்மை. எழுதத் தெரியாத பிள்ளையான் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நூல் வெளியிட்டிருந்தார்.
உதய கம்மன்பில தற்போது நூல் வெளியிட்டுள்ளார். பிள்ளையானுக்காக சிறந்த சட்டத்தரணிகள் முன்னிலையாகாத போது உதய கம்மன்பில முன்னிலையாகியுள்ளார்.
சானி அபேசேகர, செனவிரத்ன மற்றும் அருண ஜயசேகர பற்றி மாத்திரம் ஏன் எதிர்க்கட்சியினர் பேசுகின்றார்கள்?குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்? விசாரணைகளை மேற்கொண்ட சானி அபேசேகரவை கைது செய்து சுமார் 2 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர் . ஆனால் ஒரு வாக்குமூலம் கூட அவரிடமிருந்து பெறவில்லை.குண்டுத் தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்ட சானி அபேசேகர உட்பட விசாரணை அதிகாரிகளை கோத்தபாய தந்திரமான முறையில் பழிவாங்கினார்.
பெட்டியில் வைக்கப்பட்டுள்ள அறிக்கையை வெளியிடுமாறு எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இதுவரைகாலமும் பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அறிக்கையை ஜனாதிபதி தான் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கையளித்து விசாரணைகளை மேற்கொள்ள பணித்தார்.ஜனத் டி சில்வா ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய 10 பேருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி உதய கம்மன்பில வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில விடயங்கள் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதுடன் , நீதிமன்ற நடவடிக்கைகளையும் தவறாக வழிநடத்தும் வகையில் அமைஇந்துள்ளன.எனவே அது அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
![]()