தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது…. நியூசிலாந்து சிற்சபேசன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ல் நடைபெறவுள்ளது. அதனால், அரசியல்களம் பரபரப்பாகியுள்ளது.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது. அதனை, இந்தியத் தேர்தல் ஆணையமே வெளியிடுகின்றது. மொத்தமாக 234 தொகுதிகள் உள்ளன. அதிலே 4,500 வரையான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் தொடர்பான பணிகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கிவிடுகின்றது. நியாயமான முறையிலே தேர்தலை நடாத்துவதற்கான முனைப்பைக் கூர்மைப்படுத்துகின்றது. முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கான கண்காணிப்புக்களைத் தீவிரப்படுத்துகின்றது.
ஆளும்தரப்புக்குச் சாதகமாகச் செயற்படுவதான கோதாவில், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அதிரடியாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.
)
வாக்குக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கையைத் தடுப்பதான கோதாவில், “ரெய்டு” நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மாநிலமெங்கும், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரச்சார செலவினங்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றன. மேலதிகமாக, வீடியோவிலும் பதிவு செய்யப்படுகின்றது. இவ்வாறாக, வேட்பாளர்களின் செலவு “கண்கொத்திப் பாம்பாக” தொடர்ச்சியாகக் கவனிக்கப்படுகின்றது.
75,000 வரையான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 25,000 வரையான துணை இராணுவப்படையினர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படலாமென ஊகிக்கப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு அணிகள் தேர்தல் களத்திலே உள்ளன.
மேலதிகமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், ஜெயலிதாவின் தோழியாக அறியப்பட்ட சசிகலாவும் இணைந்து மேலுமொரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். அஃது, உட்கட்சிப் பிளவுகளினால் தேர்தலில் போட்டியிடுகின்ற தரப்பாகும். அதனுடைய இலக்கு வெற்றி பெறுவதல்ல. மாறாக, வாக்குகளைப் பிரிப்பதேயாகும்.
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியிலே காங்கிரஸ், வைகோவின் மறுமலர்ச்சி திமுக, தொல். திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்கசிய கம்யூனிஸ்ட் கட்சி, விஜய்காந்தின் தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட தரப்புக்கள் உள்ளன.
மொத்தமுள்ள 234 தொகுதிகளிலே, திராவிட முன்னேற்றக் கழகம் 164 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகின்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதிலேகூட, 12 தொகுதிகளிலே திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்தவகையிலே, திமுகவின் உதயசூரியன் சின்னத்திலே 176 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மறுவளத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியிலே பாரதிய ஜனதாக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி அணி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், ஜிகே.வாசனின் தமிழ் மாநிலக் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்கள் உள்ளன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 166 தொகுதிகளிலே நேரடியாகப் போட்டியிடுகின்றது. எஞ்சிய, 68 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. அதிலேகூட, ஆறு தொகுதிகளிலே, அதிமுகவின் இரட்டைஇலைச் சின்னத்திலேயே கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்தவகையிலே, அதிமுகவின் இரட்டைஇலைச் சின்னத்திலே 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சீமானின் நாம் தமிழர் கட்சியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தமிழக சமூகம் சாதிக் கட்டமைப்புக்களைக் கொண்டதாகும். அதனால், சாதி அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
சமூகநீதி தொடர்பில் உரத்துக் குரலெழுப்புகின்ற திராவிட முன்னேற்றக் கழகமும் அதற்கு விதிவிலக்கல்ல. பட்டியலினம், பழங்குடியினர், ஆதிதிராவிடர், நாடார், வன்னியர், முதலியார், முக்குலத்தோர், யாதவர், கொங்குவேளாள கவுண்டர், ரெட்டியார், வெள்ளாளர் என சாதி அடிப்படையிலேயே திமுகவும் வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்றது. ஆனால், சமூகநீதி என்னும் ஆலாபனையான சொற்தொடருக்குள்ளே ஒளிந்து கொள்கின்றது. சமூகநீதி அடிப்படையிலே பல்வேறு சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளித்துள்ளதாகச் சொல்கின்றது.
மறுவளத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படையாகச் செயல்படுகின்றது. சாதி அடிப்படையிலே வாக்களிக்கும் மனநிலையை ஏற்றுக்கொள்கின்றது. வார்த்தை ஜாலங்களுக்குள் ஒளிந்துகொள்வதில்லை. அதனால், கொங்கு மண்டலத்திலே கவுண்டர் சமூகத்தினருக்கும், வடதமிழ்நாட்டில் வன்னியர்களுக்கும், தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் மற்றும் நாடார் சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் அளித்து வேட்பாளர்களைத் தெரிவு செய்திருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழலிலே, அரசியல்கட்சிகளின் பிரச்சாரங்கள் வேகமெடுக்கின்றன.
பொதுக்கூட்டம், தெருப்பிரசாரம், ரோட்ஷோ, நடைப்பயிற்சி என்ற கோதாவில் பிரச்சாரம், சமூகவலைத்தள அலப்பறை என ஒவ்வொரு கட்சியும் பல்வேறு யுக்திகளையும் பயன்படுத்துகின்றன.
தேர்தல் பிரசாரங்களின் அமளிதுமளிகளுடன் போட்டிபோட்டுக் கொண்டு கருத்துக் கணிப்புக்களும் வெளியாகின்றன. அவற்றை, சுயாதீனமான அமைப்புக்கள் வெளியிடுகின்றனவா அல்லது அரசியல் கட்சிகளே ஏற்பாடு செய்கின்றனவா என்னும் கேள்வியை எளிதில் கடந்து போகமுடிவதில்லை. காரணம்: இந்திரன் சந்திரன் “ரேஞ்சுக்கு” கருத்துக்கணிப்புக்கள் கதை அளக்கின்றன. “அம்புலிமாமா” கதை கேட்கின்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன. அதனால், வாக்காளர்களைத் திசைதிருப்பும் யுக்தி வெள்ளிடைமலையாகின்றது.
தமக்கு சாதகமான கருத்துக் கணிப்பை அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றன. மற்றவைகளை நிராகரிக்கின்றன. எதிர்த்தரப்பின் சதி எனப் புறணி பேசுகின்றன.
ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகளிலே ஓரணி வெற்றிநடை போடத்தொடங்கினால், மற்றைய அணிகள் ஒதுங்கிவிடுவதில்லையே. அதேபோன்று, அனைத்துக் கட்சிகளும் வெற்றிபெறுவோம் என்னும் நம்பிக்கையுடன் பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. அதனால், தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது.
![]()