உலகம்

லெபனான் முழுவதும் 100 இடங்களில் தாக்குதல்; டிரம்ப் விளக்கம்; ஆத்திரத்தில் ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 14 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பு இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இல்லை; அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் அமைதி நிலவினாலும், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மோதலை ஒரு “தனிச் சண்டை” (Separate Skirmish) என்றும் டிரம்ப் வர்ணித்துள்ளார்.

இதனால், லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியுள்ளது உறுதியாகியுள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, இஸ்ரேலிய ராணுவம் லெபனான் முழுவதும் தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

வெறும் 10 நிமிட இடைவெளியில் லெபனானின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசின.

குறிப்பாகப் பெய்ரூட் (Beirut) நகரின் மையப்பகுதிகள் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு (Bekaa Valley) ஆகிய பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டளை மையங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதலில் இதுவரை 112-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் நிம்மதியடைந்திருந்த பொதுமக்கள், இந்தத் திடீர் தாக்குதலால் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

லெபனான் பிரதமர் நவாப் சலாம், அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் சூழலில் அப்பாவிப் பொதுமக்கள் மீது இஸ்ரேல் இத்தகைய தாக்குதலை நடத்துவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், இஸ்ரேலின் செயலால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தனது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யப் போவதாக எச்சரித்துள்ளது. “இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லை எனில், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்படும்” என ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற சில கப்பல்களை ஈரான் கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இந்தச் சிக்கலான சூழல், வரும் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை ஒரு மிகப்பெரிய சவாலாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *