மோட்டார் சுந்தரம் பிள்ளை – ஸ்வீட் சிக்ஸ்டி…. ச.சுந்தரதாஸ்


அறுபது வருடங்களுக்கு முன் சிவாஜி நடித்த பெரும்பாலான படங்களில் அவர் இளைஞனாக, காதலனாக வந்து ஆடிப் படி , நடித்து ரசிகர்களை கவர்ந்து கொண்டிருந்தார். ஒரு சில படங்களில் வயதான வேடங்களில் நடித்த போதும் பெரும் குடும்பஸ்தனாக அவர் நடித்ததில்லை. ஆனால் 1966ம் ஆண்டு அவர் இரண்டு மனைவிகளுடன் பதின்மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாக ஒரு படத்தில் நடித்து அசத்தி இருந்தார். அந்தப் படம்தான் மோட்டார் சுந்தரம் பிள்ளை.
இந்திய மொழிகள் பலவற்றில் படம் எடுத்து உன்னத நிலையில் இருந்த எஸ் எஸ் வாசனின் ஜெமினி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்தது . ஏற்கனவே சிவாஜி நடிப்பில் இரும்புத்திரை படத்தை எடுத்திருந்த நிலையில் ஆறாண்டுகள் கழித்து இப் படம் உருவானது.
ஆங்கிலப் படம் ஒன்றைத் தழுவி இந்திய சூழலுக்கு ஏற்ப எழுதப் பட்ட கதையை சிவாஜியிடம் சொன்ன போது முதலில் அதில் நடிக்க அவர் மறுத்து விட்டார். இதனால் வாசன் அதனை ஹிந்தியில் கிரகஸ்தி என்ற பேரில் படமாக்கினார். 1963ல் வெளியான இப் படத்தில் அசோக்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். அப் படத்தைப் பார்த்த பிறகு தமிழில் நடிக்க சிவாஜி உடன் பட்டார்.
சௌகார் ஜானகி சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க அவரின் 13 பிள்ளைகளில் ஒருவராக ஜெயலலிதாவும், காஞ்சனாவும் நடித்தனர். முரடன் முத்து படத்திலேயே சிவாஜிக்கு ஜோடியாகி இருக்க வேண்டிய ஜெயலலிதா அது நடக்காத நிலையில் இதில் மகளாக நடித்தார்.
பெரிய குடும்பஸ்தனும், கடும் உழைப்பாளியுமான சுந்தரம் ஐந்து நாட்கள் பட்டணத்தில் தங்கி தனது மோட்டார் தொழிலை நடத்துகிறார். வார இறுதியில் இரு நாட்கள் இல்லம் திரும்பி குடும்பத்துடன் பொழுதை செலவிடுகிறார். இவ்வாறு கால் நூற்றாண்டு கடக்கிறது. ஒரு மகளுக்கு திருமணமாகி விட , மற்றைய இரு மகள்களும் காதலர்களை தாங்களே தேர்ந்தெடுக்க அவர்களுக்கும் திருமண நாள் குறிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் சுந்தரத்துக்கு பட்டணத்தில் ஒரு மனைவியும், குழந்தைகளும் இருப்பது தெரிய வருகிறது. குடும்பமே இதை அறிந்து ஆடிப் போகிறது. ஆனால் அசராமல் இருப்பவர் வேறு யாரும் அல்ல சுந்தரம் தான். எல்லோரும் அவரை குற்றவாளியாக பார்க்க அவரோ நிதானமாக தன் நிலை விளக்கம் கொடுக்கிறார் . அதுதான் மீதி படம்.
எந்த வேடத்தை கொடுத்தாலும் தன் நடிப்பால் ரசிகர்களை பிரமிக்க வைக்க கூடிய சிவாஜிக்கு இப் படத்தில் கிடைத்த சுந்தரம் பாத்திரம் லட்டு மாதிரி. காட்சிக்கு காட்சி அதை அனுபவித்து செய்திருந்தார். எந்த இடத்திலும் குரலை உயர்த்தவும் இல்லை, மிகை நடிப்பும் இல்லை. ஆஹா!
சிவாஜிக்கு இணை சௌகார் ஜானகி , பாத்திரத்துக்கு நியாயம் செய்கிறார். அவருடனே பயணிக்கிறார் பண்டரிபாய். ஜெயலலிதா சிவாஜியின் மகளாக வந்து ரவிச்சந்திரனுடன் டூயட் பாடுகிறார். காஞ்சனாவுக்கு ஜோடி சிவகுமார் ஆனால் டூயட் இல்லை. நாகேஷுக்கு ஜோடி சச்சு டூயட்டும் உண்டு.
படத்தில் மணிமாலா, டி . எஸ் . முத்தய்யா , சைலஸ்ரீ, வி . நாகையா, சுந்தரராஜன், ஆகியோரும் நடித்தனர்.
வாசன் நடத்திய ஆனந்த விகடன் வார இதழில் ஆசிரியராக பணியாற்றியவர் தேவன். இவர் படைத்த தொடர்களில் ஒன்றான துப்பறியும் சாம்பு வாசகர்களின் வரவேற்பை நாவலாகும். அப்பாவியான சாம்பு எதோ ஒரு காரியத்தை அசட்டுத் தனமாக செய்ய அங்கே ஒரு குற்றம் வெளிப்பட்டு குற்றவாளியும் அடையாளம் காணப்படுவான். தேவன் மறைந்து சில ஆண்டுகள் கழித்த பின் அவருடைய சாம்பு பாத்திரத்தை நாகேஷ் மூலம் இப் படத்தில் நடமாட விட்டிருந்தார் வாசன்.
அதே போல் வாசனின் விகடனில், ஜெமினி நிறுவனத்துடனும் நீண்ட காலம் இணைந்து பயணித்தவர் கொத்தமங்கலம் சுப்பு . இப் படத்தில் மூன்று பாடல்களை இயற்றியிருந்தார். பக்திப் பாடலான மனமே முருகனின் மயில் வாகனம், காமடி பாடலான குபு குபு குபு நான் என்ஜின் , சரச பாடலான காதல் என்றல் என்ன பாடல்கள் மனதை கவர்ந்தன. வாலியின் காத்திருந்த கண்களே பாடல் ஸ்வீட். படத்துக்கு இசை வேறு யார் எம் .எஸ் . விஸ்வநாதன் தான்!
வேப்பத்தூர் கிட்டு வசனங்களை எழுதியிருந்தார். இதமான வசனங்கள். எம் . உமாநாத் படத் தொகுப்பை கவனிக்க , எல்லப்பா ஒளிப்பதிவு செய்திருந்தார். எல்லோரும் வாசனிடம் நிரந்தரமாக பணியாற்றியவர்கள். தென்னிந்தியாவில் முதல் கலர் லேப்பை அறுபதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிய வாசன் அதன் பின் தான் தயாரித்த வாழ்க்கைப் படகு, மோட்டார் சுந்தரம் பிள்ளை இரண்டு படங்களையும் ஏனோ கலரில் தயாரிக்கவில்லை.
படம் அறுபது ஆண்டுகளுக்கு முன் உருவானது. ஒரே வீட்டில் ஏராளமான குழந்தைகளுடன் வாழும் அன்றைய வாழ்க்கை படத்தில் காண்பிக்கப் படுகிறது. பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. இன்றைய தலைமுறைக்கு தெரியாத வாழ்க்கை அமைப்பு!
ஆரம்ப காலம் தொட்டு ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த பெரும்பாலான படங்களை வாசன் தான் இயக்கி வந்தார். இந்த படத்தில் டைரக்ஷன் எஸ் .எஸ் . பாலன் என்று காட்டப்பட்டது. தன் மகனை டைரக்டராக இப் படத்தில் களம் இறக்கினார் வாசன். படமும் தொய்வின்றி விறுவிறுப்பாகவே நகர்கிறது.
ஆனாலும் பிரதானமான சில காட்சிகள் வாசனால் இயக்கப்பட்டது . படம் முதலில் ஹிந்தியில் வந்து பின்னரே தமிழானது. ஹிந்தியில் இருந்து காட்சிக்கு காட்சி தமிழில் படத்தை எடுத்திருந்தார்கள். ஹிந்திப் படத்தை கிஷோர் ஷாஹு இயக்கியிருந்தார். ஆக பாலன் மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தை இயக்கியிருந்தாலும் எல்லாப் புகழும் கிஷோர் ஷாஹு வுக்கே ! படம் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

![]()