இலங்கை

இந்த அரசுடன் தமிழர்கள் சேர்ந்து செல்ல முடியுமா?;  தமிழரசுக் கட்சி எம்.பி. சிறிநாத் கேள்வி 

தொல்லியல் துறையில் சிறுபான்மை இனத்தவர்கள் நிராகரிக்கப்பட்டு சான்றுகள், ஆதாரங்கள் போலியாக புனையப்படும் நிலைமையில் சிறுபான்மை இன மக்கள் எந்த நம்பிக்கையில் இந்த அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க முடியும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது சிறிநாத் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கு போர் நிலைமையால் எமது நாட்டில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. குறிப்பாக எரிபொருள் விலையேற்றம், மின் கட்டண உயர்வு என்பன மக்களுக்கு விலைவாசி ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வந்துள்ளமைக்கு வரவேற்கின்றோம்.

இதேவேளை மக்கள் பல்வேறு விடயங்களில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கின்றனர். அதாவது மீனவர்களுக்கு வழங்கப்பட்டதை போன்று விவசாயிகளுக்கும் நிவாரணங்களை வழங்க வேண்டும். நெல்லுக்கு சரியான விலை கிடைக்காமையினால் பெருமளவில் செலவு செலவு செய்து நஷ்டப்படும் நிலைமையே காணப்படுகின்றது. அத்துடன் தொழிற்துறையிலும் மின் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தனியார்துறையில் இந்த நெருக்கடிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இன்னும் அரசாங்கம் இந்த விடயத்தில் வினைத்திறனாக செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் எமது மாவட்டம் தொடர்பில் கூறும் போது தொல்லியல் விடயங்கள் தொடர்பில் அமைச்சர் வழங்கிய பதில் ஏற்புடையதாக இல்லை. தொல்லியல் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் பேரினவாத செயற்திட்டங்களாகவே அமைகின்றன. குறிப்பாக கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நெடியகல் மலையில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் முறைப்பாட்டை செய்திருந்தோம். ஆரம்பத்தில் தொல்லியல் திணைக்களத்தின் எவ்வித அனுமதியும் இன்றி அது அமைக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த கூட்டத்தில் அது தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் கட்டப்பட்டதாக கதை மாற்றி எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் சிறுபான்மை இன மக்கள் எவ்வாறு இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்வது என்பது கேள்வியாக உள்ளது.

இதேவேளை திருகோணமலை கோணேஸ்வரத்தில் லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட மணியொன்றை பொருத்த முடியாத நிலைமை மூன்று வருட காலமாக உள்ளது. இதற்காக தொல்லியல் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் 58 கடைகள் எந்தவிதமான அனுமதியும் இன்றி அதற்கான வேலைகளை செய்கின்றன. அங்கு கோயிலில் ஊழியர்கள் தங்கும் அறையை அமைப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள பல வருடங்களாக காத்திருக்க வேண்டிய நிலைமைம ஏற்பட்டுள்ளது. உண்மையில் இந்த சட்டம் பெரும்பான்மை இனத்தவர்களால் தங்களுக்கு ஏற்றவாறு தங்களுடைய நலனுக்கு ஏற்றவகையில் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தொல்லியல் துறையில் தமிழை அல்லது இந்து மதத்தை அல்லது சிறுபான்மை இன மதங்களை அடிப்படையாகக் கொண்டு நிபுணர்கள் சேர்க்கப்படவில்லை. சான்றுகள், ஆதாரங்கள் போலியாக புணையப்பட்டவையாக இருக்கின்றன. இவ்வாறான நிலைமையில் சிறுபான்மை இன மக்கள் எந்த நம்பிக்கையில் இந்த அரசாங்கத்துடன் பயணிக்க முடியுமென்று கேட்டுகின்றேன். கடந்த கால அரசாங்கங்கள் எவ்வாறு தவறுகளை இழைத்தனவோ அவ்வாறு இந்த அரசாங்கமும் இருந்துவிடக் கூடாது. அனைவரும் சமமாக வாழக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *