ஒவ்வொரு மாதமும் சபைக்கு ஜனாதிபதி அநுர வருவது ஏன்?; காரணம் கூறுகிறார் மரிக்கார் எம்.பி.

அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படும் போதெல்லாம் ஜனாதிபதி ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்துக்கு வந்து அரசாங்கத்தை தூய்மைப்படுத்துகிறார் .அரசாங்கத்தை தூய்மைப்படுத்தும் பிரதான தூய்மைப் பணியாளராகவே ஜனாதிபதி உள்ளார்.என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாடடின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, அதனால் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் கூறிய போது ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர் ஜனாதிபதி உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
தரமற்ற நிலக்கரி தொடர்பில் நாங்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து குறிப்பிட்டோம். நாங்கள் குறிப்பிட்ட போது அரசாங்கம் அதனை கவனத்திற் கொள்ளவில்லை. இன்று உண்மை வெளிவந்ததன் பின்னர் ‘ நிலக்கரியை சாப்பிட்டு பார்த்தா வாங்க முடியும்’ என ஜனாதிபதி கேட்கின்றார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி மூலம் .பிணைமுறி மோசடியால் ஏற்பட்ட நஷ்டத்தை விடவும் தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் அரசுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது அவசர நிலக்கரி கொள்வனவுக்கு செல்லும் போது 420 மில்லியன் ரூபாநஷ்டம் ஏற்படும். இந்த தொகைய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடமிருந்தா அறவிடுவது?
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நாம் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அப்போதைய அரசாங்கமான பொதுஜன பெரமுன தோற்கடித்தது.ஆனால் நீதிமன்றம் கெஹலிய ரம்புக்வெல்லவை தண்டித்தது. தற்போதைய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் விடயத்திலும் இதுதான் நடக்கும் என்றார்.
![]()