தாக்குதலை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை; இஸ்ரேல் இராணுவத் தளபதி அறிவிப்பு

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பு மீதான தாக்குதல்களை எவ்வித சமரசமுமின்றித் தொடரப்போவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஈயால் ஜமீர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் எவ்வித இடைநிறுத்தமும் இன்றித் தொடரும் என ஜமீர் குறிப்பிட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
“நாங்கள் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பைத் தொடர்ந்து தாக்குவோம். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், எவ்வித இடைவெளியுமின்றித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேலிய இராணுவத் தரப்பிலிருந்து வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, பிராந்தியத்தில் மோதல்கள் மேலும் தீவிரமடைவதைக் காட்டுகின்றது.
![]()