ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுகிறது; சுங்க வரியை ஈரான் அறவிடும்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மதிப்பளித்து, இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் உத்தியோகபூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சரின் அப்பாஸ் அரக்சி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அயராது உழைத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருக்கு ஈரான் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ஈரானின் ஆயுதப் படைகள் தங்களது தற்காப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். இது ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா முன்வைத்த 15 அம்சத் திட்டம் மற்றும் ஈரானின் 10 அம்சத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஏற்றுக்கொண்டமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் அப்பாஸ் அரக்சி குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபையின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் இந்த இரண்டு வாரக் கால போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்க ஈரானுக்கும் ஓமனுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதாவது ஹோர்முஸ் வழியாகச் செல்ல உலக நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், அதற்குக் குறிப்பிட்ட தொகையை ஈரான் மற்றும் ஓமனுக்கு சம்பந்தப்பட்ட கப்பல்கள் சுங்க கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இது தொடர்பாகப் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடம் இருந்து இந்த நாடுகள் சுங்க கட்டணத்தை வசூலிக்கலாம். இந்த நிதி ஈரானின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்” என்றார்.
போரினால் ஈரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த நிதி மீண்டு வரப் பயன்படும். அதேநேரம் ஓமன் இந்த நிதியை எதற்காகப் பயன்படுத்தும் என்பது குறித்து உடனடியாக எந்தவொரு அறிவிப்பும் இல்லை.
பேச்சுவார்த்தைகளில் நேரடியாகப் பங்குபெற்ற ஒரு அதிகாரியே இந்த தகவல்களைத் தெரிவித்தார். அதேநேரம் கூடுதல் தகவல்களைச் சொல்ல தனக்கு அதிகாரம் இல்லை என்றும் அந்த அதிகாரி மறுத்துவிட்டார். ஹார்முஸ் ஜலசந்தியின் பிராந்திய உரிமைகளை ஈரானும் ஓமனும் கூட்டாகப் பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
![]()