இலங்கை

வெளிப்படைத்தன்மை வாய்ந்த ஆட்சி நிர்வாகத்தை பாதுகாக்க தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை வலுப்படுத்துங்கள்

வெளிப்படைத்தன்மை வாய்ந்த ஆட்சி நிர்வாகத்தைப் பாதுகாப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் நிலவும் இடைவெளிகளைக் களைந்து, பணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

அண்மையகாலங்களில் வலுவிழந்துவரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கரிசனைகளை வெளிப்படுத்திவரும் நிலையில், இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கரு ஜயசூரிய மேலும் கூறியிருப்பதாது:

தகவல் அறிவதற்கான நாட்டுமக்களின் உரிமையை உறுதிப்படுத்துவதன் ஊடாக ஜனநாயகத்தை மேலும் விரிவானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றக்கூடிய ஒரு சட்டம் இருக்கிறது என்றால், அது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மாத்திரமேயாகும்.

அர்ப்பணிப்பு மிகுந்த ஊடகவியலாளர்கள், விழிப்புணர்வுள்ள பிரஜைகள் மற்றும் சமூக நலன்விரும்பிகளின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தின் ஊடாகவே பொறுப்புக்கூறல் தொடர்பான மற்றும் ஊழலுக்கு எதிரான பொதுமக்களின் கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் சுமார் ஒரு தசாப்தகாலமாக இச்சட்டத்தினால் பல்வேறு நன்மைகளைப் பெற்றதன் பின்னர், தற்போது இந்தச் சட்டம் பலவீனமடைவதற்கு இடமளிக்கக்கூடாது. வெளிப்படைத்தன்மை வாய்ந்த ஆட்சி நிர்வாகத்தைப் பாதுகாப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் நிலவும் இடைவெளிகளைக் களைந்து, பணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் அப்பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *