இலங்கை

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை தமக்கு உகந்த அரசியல் கருத்துருவாக்கத்துக்காக பிரயோகிப்பது அப்பட்டமான மீறல்

தமக்கு உகந்த ஒரு அரசியல் கருத்துருவாக்கத்தை மேற்கொள்வதற்காகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவது என்பது அப்பட்டமான துஷ்பிரயோகமாகும். இதனூடாக ஒரு அசாதாரண பாதுகாப்புச்சட்டம் அரசியல் கருவியாக மாற்றப்படுகிறது. இங்கு தடுப்புக்காவல் என்பது ஆதாரங்களின் அடிப்படையிலன்றி, அரசியல் தேவையின் பிரகாரமே தீர்மானிக்கப்படுகிறது. தமக்கு வேண்டிய சந்தர்ப்பங்களில் குற்றச்சாட்டுக்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன. அக்குற்றங்களை நிரூபிக்கமுடியாதபோது அவை அமைதியாகக் கைவிடப்படுகின்றன என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசனம் வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் கைது நடவடிக்கைகள் குறித்து பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேலும் கூறியிருப்பதாவது:

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னால் உள்ள அரசியலை நாம் அதன் உண்மையான பெயரால் அழைப்போம்.

தேசிய பாதுகாப்புக்கு உடனடியான மற்றும் நிரூபிக்கக்கூடிய பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தாலன்றி, பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் என்பது பாதுகாப்பு தொடர்பானது அல்ல. மாறாக அது ஆதாரங்கள் இல்லை என்பதையும், நீதித்துறை பரசீலனையைத் தவிர்க்கும் முயற்சியையுமே பிரதிபலிக்கிறது.

குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருந்தால், அவற்றை நீதிவான் முன்னிலையில் சமர்ப்பியுங்கள். அதுதான் சட்டம். இந்த நாட்டில் நம்பகமான ஆதாரங்களுடனான ஒரு வழக்குக்கு எந்தவொரு நீதிமன்றமும் தடையாக இருந்ததில்லை. அவ்வாறிருக்கையில், நீதிமன்றங்களைத் தவிர்ப்பது ஏன்? ஏனெனில் இன்னமும் கட்டமைப்பு ரீதியான மாற்றம் நிகழவில்லை. மாறாக நீதிமன்ற மேற்பார்வையிலிருந்து தப்பிப்பதற்கான ஒடுக்குமுறைக் கருவிகள் தொடர்ந்து பிரயோகிக்கப்படுகின்றன.

அரசாங்கங்கள் மாறினாலும், மறுசீரமைப்பு குறித்து தொடர்ந்து வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத்தடைச்சட்டம் ஒரு இலகு கருவியாக நீடிக்கிறது. நீதிமன்றங்களைப் புறந்தள்ளி, முதலில் கைதுசெய்துவிட்டு, பின்னர் அதனை நியாயப்படுத்துவதே இவர்களது உத்தியாக இருக்கிறது.

தமக்கு உகந்த ஒரு அரசியல் கருத்துருவாக்கத்தை மேற்கொள்வதற்காகப் பயங்கரவாதத்தடை;சட்டத்தைப் பயன்படுத்துவது என்பது அப்பட்டமான துஷ்பிரயோகமாகும். இதனூடாக ஒரு அசாதாரண பாதுகாப்புச்சட்டம் அரசியல் கருவியாக மாற்றப்படுகிறது. இங்கு தடுப்புக்காவல் என்பது ஆதாரங்களின் அடிப்படையிலன்றி, அரசியல் தேவையின் பிரகாரமே தீர்மானிக்கப்படுகிறது. தமக்கு வேண்டிய சந்தர்ப்பங்களில் குற்றச்சாட்டுக்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன.

அக்குற்றங்களை நிரூபிக்கமுடியாதபோது அவை அமைதியாகக் கைவிடப்படுகின்றன. இந்த நடவடிக்கையினால் தனிநபர் சுதந்திரம் பறிபோகிறது. உரிய சட்ட நடைமுறைகள் ஓரங்கட்டப்படுகின்றன. அத்தோடு நீதிக்கட்டமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைக்கப்படுகிறது. இது சட்ட அமுலாக்கம் அல்ல. மாறாக சட்டத்தின் ஆட்சியைப் பலிகொடுத்து மேற்கொள்ளப்படும் கருத்துருவாக்கமாகும்.

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னர், சுமார் ஒரு வருடத்துக்கு முன்பதாகவே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார். அவர் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக்கூறி பாராளுமன்றத்தில் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் ஓராண்டின் பின்னர், அந்தக் காரணங்களுக்காகவன்றி, முற்றிலும் தொடர்பற்ற வேறொரு குற்றச்சாட்டுக்காக அவர் நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்குக் காரணமான அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்ன நடந்தது? ஆதாரங்களுக்கு என்ன நடந்தது? அன்று பேசிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இன்று மௌனம் காக்கிறார்.

இந்தத் துரதிஷ்டவசமான தேசிய பேரழிவை அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எவரும் அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களால் ஏற்பட்ட வலி உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோருகிறதே தவிர, அரசியல் சந்தர்ப்பவாதத்தை அல்ல.

இந்தக் கொள்கை சகலருக்கும் பொருந்தவேண்டும். சுரேஷ் சலே அல்லது வேறு எவருக்கும் எதிராக ஆதாரங்கள் இருந்தால், அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நிரூபியுங்கள். அதனைவிடுத்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்மீது இவ்வாறு தொடர்ந்து தங்கியிருப்பது இச்சட்டம் நீதிக்கானது அல்ல, மாறாகக் கட்டுப்பாட்டுக்கானது என்பது உண்மையை வெளிப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *