உலகம்

அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம்; இங்கிலாந்து பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்

இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வளைகுடாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், ஹார்முஸ் நீரிணை நிரந்தரமாகத் திறக்கப்படுவதை உறுதிசெய்யும் முயற்சியாக பிராந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்துப் பிரதமர் அங்கு செல்கிறார்.

நேற்று இரவு எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள இங்கிலாந்துப் பிரதமர் , இந்த முன்னேற்றம் இப்பிராந்தியத்திற்கும் உலகிற்கும் ஒரு நிம்மதியான தருணத்தை வழங்கும் என்று ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

நமது பங்காளர்களுடன் இணைந்து, இந்தப் போர்நிறுத்தத்தை ஆதரித்து நிலைநிறுத்தவும், அதனை ஒரு நீடித்த ஒப்பந்தமாக மாற்றவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களை ஆதரிக்கத் தவறியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஸ்டார்மர், எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்திற்கு அடிப்படையான முக்கிய நீர்வழிப்பாதையை மீண்டும் திறப்பதற்கு நட்பு நாடுகள் எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பது குறித்து பன்னாட்டுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

வளைகுடா பயணத்தின் போது பிரதமர் ஸ்டார்மர், மோதலுக்கு ஒரு நீடித்த தீர்வைக் கொண்டுவருவதற்கும், மேலும் அச்சுறுத்தல்களிலிருந்து பிரித்தானியாவையும் உலகப் பொருளாதாரத்தையும் பாதுகாப்பதற்கும், போர் நிறுத்தத்தை ஆதரித்து நிலைநிறுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகள் குறித்து விவாதிப்பார் என்றும் இங்கிலாந்துப் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *