இலங்கை

சரத் வீரசேகர மீண்டும் இனப் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை பெயரிடுவதாக அறிவித்துள்ளார். மலட்டுக் கொத்து, மலட்டு சத்திர சிகிச்சை என்பவற்றை அடிப்படையாக வைத்து ஏற்படுத்திய இனப்பிரிவினையை மீண்டும் உருவாக்க இவர்கள் முயற்சிக்கின்றனர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக தெரிவித்தமைதொடர்பில் விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2020 காலத்தில் மக்கள் ஆணையை பெற்று ஆட்சியை அமைத்து பொலிஸ் அமைச்சராக செயல்பட்ட சரத் வீரசேகர, இன்று முஜிபுர் ரஹ்மான் உயிரத்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவித்தாலும், அன்று அவர் இது தொடர்பாக எடுத்த சட்ட நடவடிக்கைகள் என்ன ? உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை கைது செய்வோம் என்று கூறியே அன்று இவர்கள் ஆட்சிக்கு வந்தனர். இப்போது முஜிபுர் ரஹ்மானுக்கு ஐ.எஸ் தொடர்புகள் இருப்பதாகவும், அவை ஆணைக் குழு அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றார், அவ்வாறு பெயர் இடம்பெற்றிருந்தால் அதனை வெளிப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் ?. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியிட்ட புத்தகம் குறித்த விமர்சனத்தால் தான் இந்த நாணயமற்ற விமர்சனம் இவர் மீது வந்தது.

முஜிபுர் ரஹ்மான் நாட்டின் நலனுக்காக பல்வேறு துறைகள் தொடர்பிலும் நிபுணத்துவமான கருத்துக்களை முன்வைக்கும் மக்கள் தலைவர் என்பதனால், இன்றும் அவரை இலக்கு வைத்து மலட்டுக் கொத்து, மலட்டு சத்திர சிகிச்சை என்பவற்றை அடிப்படையாக வைத்து ஏற்படுத்திய இனப்பிரிவினையை மீண்டும் உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்த அடிப்படைவாதம் நாட்டிற்கு பொருத்தமல்ல. புத்த பெருமானார் போதித்த தர்மத்திற்கு அமைவாக இன வேற்றுமையை ஏற்படுத்தாமல் இன மத சமூக பிரிவுகளிடையே ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இலங்கையின் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டியது ஆட்சி அதிகாரம் அல்லது அரசியல் அடையாளத்தைக் காக்கும் வகையில் அல்லாமல் உண்மையை அறிந்துகொண்டு செயல்படுவதன் மூலமேயாகும். எனவே உண்மையை மையமாக வைத்து செயற்பட வேண்டும். இனவாதத்தை அடிப்படையாக வைத்து நாட்டை அழிக்கும் இந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *