ஐ.எம்.எப்.ஐ சந்திக்க அனுமதி மறுப்பு; சஜித் கடும் விசனம்

எதிர்க்கட்சிக்கு ஐ.எம்.எப். பிரதிதிகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் தற்சமயம் பறிக்கப்பட்டுள்ளன. இந்த அழுத்தம் யாரிடமிருந்து வருகிறது என்று எமக்குத் தெரியாது. எதிர்க்கட்சி ஒருபோதும் ஐ.எம்.எப். பிரதிநிதிகள் சந்திப்பை புறக்கணிக்காது. எதிர்கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரிக்கை விடுக்கிறோம். என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம்,விளையாட்டில் ஊக்கப்பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
கஷ்டத்திலும் அழுத்தத்திலும் அதிர்ச்சியிலும் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல வாரங்களாக தற்போதைய அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுத்து வந்தோம். இன்றுவரை கோமா நிலையில் இருந்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் திடீரென வாக்குறுதிப் பட்டியலை முன்வைத்துள்ளது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசாங்கம் நீண்டதொரு வாக்குறுதிப் பட்டியலை முன்வைத்தது. 50 இலட்சம், 100 இலட்சம் என்றும், காணிகளைப் பெற்றுத் தருவோம் என்றும், ஒரு தகரம் போனாலும் 10 இலட்சம் தருவோம் என்றும் கூறியது.இன்று வரை அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே இன்று முன்வைத்த வாக்குறுதிகளையாவது சரியாக நிறைவேற்றுங்கள் இந்த நிவாரணப் பொதிகளைப் பெற்றுக் கொடுப்பதையிட்டு நன்றி தெரிவிக்கின்றோம். என்றாலும் இந்த நிவாரணங்களை மேலும் அதிகரித்து பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
இந்த அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி தரம் குறைந்தது என எதிர்கட்சி கூறியபோது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பல்வேறு கூற்றுகளை தெரிவித்தாலும், ஜனாதிபதி இன்றைய (நேற்றைய )தனது உரையில் நமது நாட்டிற்கு இறக்குமதி செய்த நிலக்கரி தரம் குறைவானது என்று ஏற்றுக் கொண்டார். இந்த மின் உற்பத்தி நிலையத்தை கண்காணிப்பதற்கு ஆளும் தரப்பு அமைச்சர்களும் அங்கு சென்றனர். அந்த தருணத்தில் எடுத்த புகைப்படங்களிலேயே இயந்திரங்களில் குறைந்த மெகாவோட் அளவே உற்பத்தியாகின்றன என்பது தெரிகிறது.
பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி அதிகரிக்க வேண்டும். உற்பத்தி மற்றும் சேவைகள் அதிகரிப்பதன் மூலம் பணப் புழக்கம் அதிகரிக்க வேண்டும். பணப்புழக்கம் குறைந்தால் வளர்ச்சி குறைந்து, வருமானம் குறைந்து, வாழ்க்கை தரம் குறைந்து மக்கள் வாழ்க்கையே சுருங்கிப் போகும். தற்சமயம் மக்கள் வாழ்க்கையை சுருக்கிவிட்டு ஸ்திரத்தன்மை அடைந்து விட்டோம் என மகிழ முடியாது. மத்திய கிழக்கிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ என்ன தான் நடந்தாலும் நாம் பெரும் தொகை கடனை திரும்பச் செலுத்த வேண்டியிருக்கிறது.
தேர்தலில் அரசாங்கம் வாக்குறுதியளித்தது போல் ஐ.எம்.எப்.புடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டை மாற்றியிருந்தால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இந்த போர் தொடர்ந்தால் இந்த நிபந்தனைகளின் கீழேயே செல்ல வேண்டும். நமது நாட்டிற்கு தேவையானது ஐ.எம்.எப். பாராட்டுதல் அல்ல, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முதுகெலும்பை நிமிர்த்தி புதிய ஐ.எம்.எப். இணக்கப்பாட்டை எட்ட வேண்டும். இது தொடர்பாக நான் கோரிக்கை முன்வைக்கிறேன்.
ஐ.எம்.எப். பிரதிநிதிகள் நாட்டுக்கு வருகை தந்த ஒவ்வொரு தருணத்திலும் நமது நாட்டிற்கு சலுகைகளைப் பெற்றுத் தருமாறே நாம் கோரிக்கை விடுத்தோம்., எதிர்க்கட்சி எப்போதும் ஐ.எம்.எப். முன்னிலையில் நாட்டு மக்களை பலிகொடுக்கவில்லை. எதிர்க்கட்சிக்கு ஐ.எம்.எப். பிரதிதிகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் தற்சமயம் பறிக்கப்பட்டுள்ளன. இந்த அழுத்தம் யாரிடமிருந்து வருகிறது என்று எமக்கு தெரியாது. எதிர்க்கட்சி ஒருபோதும் ஐ.எம்.எப். பிரதிநிதிகள் சந்திப்பை புறக்கணிக்காது. எதிர்கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதியை பெற்றுத் தருவதாக கூறினாலும் அரசாங்கத்திடம் இப்போது வரி மூலம் 1.4 ட்ரில்லியன் திரட்டப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளன. வழங்கும் நிவாரணப் பொதி போதுமானதாக இல்லை. இந்த நிவாரண பொதியில் எரிவாயு விலையால் கஷ்டப்படும் மக்கள் மறக்கப்பட்டுள்ளனர். 61 இலட்சம் மக்களில் 42 சதவீதமான சுமார் 25 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க இயலாமல் போய்விட்டது.
ஜனாதிபதி இங்கு வருவதற்கு முன்பே அரசாங்கம் மக்களுக்கு வரி அதிகரிப்பை இன்று (நேற்று)பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. வற் வரி 18% க்கு பிறம்பாக மேலும் 4-5% வரி அதிகரிக்கப்படவிருக்கின்றன. இதன் மூலம் நுகர்வோரை பிழிந்து வரிச்சுமை அதிகரித்து அரச வருவாயை அதிகரித்து அதிலிருந்து சொற்பமாக மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன. நிவாரணம் வழங்குவது நல்லதே என்றாலும் வழங்கும் இந்த நிவாரணங்களின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றார்.
![]()