செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு 27 இல் ஆரம்பிக்கும் சாத்தியங்கள்; 21 ஆம் திகதி வழக்கு

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பிலான சாத்தியங்களை தீர்மானிப்பதற்கு எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி குறித்த வழக்கு அழைக்கப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இடம்பெற்ற போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவநாதன், அடுத்த கட்ட அகழ்வு பணிக்கான வேலைகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளதாக அறிவித்திருந்த நிலையிலும் ஏற்கனவே பெப்ரவரி 12ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இருந்து நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாதீடானது இன்றுவரை அனுமதி வழங்காத நிலையில் காணப்படுவது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த தவணையின் போது அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி என உத்தேசமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும் அன்றைய திகதியில் ஆரம்பிக்க முடியாத சூழல் இருப்பதாக நீதிமன்றத்தினுடைய அவதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அடுத்த கட்ட அகழ்வு பணி கிட்டத்தட்ட 27ஆம் திதி தற்காலிகமாக ஆரம்பிக்கப்படலாம் என்ற கலந்தாலோசனையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதோடு அது தொடர்பான விடயத்திற்கு பாதீடு தயார் நிலையில் உள்ளதா இல்லையா என்பதை ஆராய மீண்டும் வழக்கு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குறித்த புதைகுழியை பார்வையிடுவதற்கான அனுமதியை கேட்டிருந்த நிலையில், அவர்கள் காலை 9 மணிக்கு முன்னதாக அல்லது மாலை இரண்டு மணிக்கு பின்னராக குறித்த புதைகுழியை தரிசனம் செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. நிச்சயமாக எந்த நேரத்தில் அவர்கள் விஜயம் செய்ய உள்ளார்கள் என்ற விடயத்தை முற்கூட்டியே நீதிமன்றத்தில் அறிவிக்கும் படியும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
எதிர்வரும் 27ஆம் திகதி அகழ்வு பணி ஆரம்பிக்கிறதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்கு 21ஆம் திகதி குறித்த வழக்கு அழைக்கப்படும்.
அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புகளை ஆய்வு செய்வதற்கான பாதீடும், மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீடும் இரண்டும் ஒரேயடியாக அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டுக்குமே அனுமதி இன்னும் அளிக்கப்படாத நிலைமையில் இருக்கிறது என்றும் அதில் மனித எலும்புகளின் ஆய்வுக்கான பாதீட்டில் சிறிய திருத்தம் செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். இரண்டையும் சேர்த்து அனுமதி வழங்க வேண்டி சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.- என்றார்.
குறித்த வழக்கு விசாரணைகளின்போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், பாதிக்கப்பட்ட தரப்பினர்களின் சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரைஞ்சன், ரனித்தா ஞானராஜா, காணாமல் போனார் பற்றிய அலுவலக சட்டத்தரணி பூரணி மரியநாயகம்,காணாமல் போனார் பற்றிய அலுவலக பிரதிநிதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், பொலிஸார், முறைப்பாட்டாளர்கள், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![]()