உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையால் தற்போது பலர் பெரும் குழப்பத்திலுள்ளனர்

உதய கம்மன்பிலவின் புத்தகம் வெளியீட்டு நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் அமர்ந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது என்றும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் என்றும் பதில் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவினால் வெளியிடப்பட்ட புத்தகம் தொடர்பிலும், முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவினால் முஜிபூர் ரஹ்மான் பிரதான சூத்திரதாரி என்று கூறியுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புத்தகங்களை அச்சிட்டு உண்மைகளை மூடி மறைக்க முடியாது. இந்த தாக்குதல் தொடர்பில் பலமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது உதய கம்மன்பில குழப்பமடைகின்றார். இதன்போது பிரதான சூத்திரதாரி எங்கே இருக்கின்றார் என்ற கேள்விகள் எழுகின்றன. இதன் பின்னால் ஏதேவொன்று உள்ளது. இந்த விடயத்தில் குழப்பமடைவர்கள் இருக்கின்றனர். சலே கைது செய்யப்படும் போது அவர்களே குழப்பமடைந்தனர். அத்துடன் புத்தகம் வெளியிடப்பட்ட போது பிரதான சூத்திரதாரிகள் அமர்ந்திருந்த இடங்களை பார்த்தோம். இதனால் நீதிமன்றத்தினால் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். எந்த புத்தகங்களை கொண்டு வந்தாலும் இந்த விசாரணைகளை மூடி மறைக்க முடியாது. அது முறையாக நடக்கும் என்றார்.
![]()