உலகம்

ஈரானுடன் இரு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் பச்சைக்கொடி

ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவர் சில முக்கிய நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளார்.

அதன்படி, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் உடன்பட வேண்டும் என்பதே பிரதான நிபந்தனையாகும்.

இது இரு தரப்பினருக்கும் பொருந்தும் வகையிலான ஒரு “இருதரப்பு போர்நிறுத்தம்” என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கீழ், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், ஈரானுக்கு எதிராக அனுப்பப்படவிருந்த அழிவு சக்தியை நிறுத்திவைக்குமாறு அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, ஈரானுக்கு எதிரான குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு நிறுத்திவைக்க நான் சம்மதிக்கிறேன்.

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் குடியரசு உடன்பட வேண்டும் என்பதே இதற்கான நிபந்தனையாகும். இது இரு தரப்பினருக்குமான ஒரு போர்நிறுத்தமாக இருக்கும்.

நாம் ஏற்கனவே எமது அனைத்து இராணுவ இலக்குகளையும் எட்டியுள்ளோம். அத்துடன், ஈரானுடனான நீண்ட கால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு உறுதியான உடன்படிக்கையை நோக்கிய பயணத்தில் நாம் வெகுதூரம் வந்துள்ளோம்.

ஈரானிடமிருந்து 10 அம்சங்கள் கொண்ட முன்மொழிவை நாம் பெற்றுள்ளோம், அது பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்குச் சாத்தியமான ஒரு அடிப்படையாக இருக்கும் என நாம் நம்புகிறோம்.

கடந்த காலங்களில் சர்ச்சைக்குரியதாக இருந்த பல விடயங்கள் குறித்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு வார கால அவகாசம் அந்த உடன்படிக்கையை இறுதி செய்து பூர்த்தி செய்ய உதவும். அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற ரீதியிலும், மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதியாகவும், இந்த நீண்ட காலப் பிரச்சினை தீர்வை நோக்கி நகர்வதை நான் கௌரவமாகக் கருதுகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டொனால்ட் ட்ரம்ப் தற்காலிக போர்நிறுத்தம் ஒன்றை அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளது.

இது இப்படி இருக்க ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்வழிப் போக்குவரத்திற்கு இரண்டு வார காலத்திற்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதாக ஈரான் தெரிவித்துள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த இடைநிறுத்தம் பயன்படுத்தப்படும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஈரானின் 10 அம்சக் கோரிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தீர்மானம் ஈரானுக்குக் கிடைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க “வெற்றி” என அது வர்ணித்துள்ளது.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையும் இது குறித்து சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளது.

தற்போதைய சூழல் ஈரானின் கையை ஓங்கச் செய்துள்ளதாகவும், இது ஈரானிய இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அந்தச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button