இலங்கை

பிள்ளையான் கைது குறித்து பொய்யுரைத்த ஜனாதிபதி; மன்னிப்பு கோர வேண்டும்! உதய கம்மன்பில வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்காக பிள்ளையானை கைது செய்ததாக ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொய்யுரைத்துள்ளார்கள். இவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் நான் வெளியிட்ட புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருதரப்பில் போலியான கையடக்க ஆவணப்படிவத்தை தயாரித்து பரிமாற்றம் செய்கிறார்கள்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நான் செயற்படவில்லை. அவ்வாறு செயற்பட்டிருந்தால் எனக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டதாகவும், அவர் பல விடயங்களை வெளிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி உட்பட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் குறிப்பிட்டார்கள்.

பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு விடயங்களை குறிப்பிட்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக பிள்ளையானை கைது செய்துள்ளோம் என்று குறிப்பிட்ட பொய்க்கு ஜனாதிபதி உட்பட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *