இலங்கை

புலிகள் நடத்திச்சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்க்க முயற்சி – கம்மன்பில ஆவேசம்

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் நேற்று வியாழக்கிழமை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்னையானை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்ட விடயம் பொய் என்பது ஒரு வருடத்துக்கு பின்னர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவருடகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மீது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை.

பிள்ளையான் விடுதலை புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை தவறு. இராணுவத்தில் இணையாமல் அவர் ஆயுதமேந்தி விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை சட்டவிரோதமானது என்றே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்தார்கள்.

அதேபோல் அவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான விடயங்களும் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.

காணாமலாக்கப்பட்ட உபவேந்தர் விவகாரத்தில் பிள்ளையானை கைது செய்ய முடியாது. ஆகவே அவரை விடுதலை செய்யுமாறு நாங்கள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தோம்.

பிள்ளையான் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரும் வரையில் பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன்.

விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச் சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்ப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *