தேன் மழை – ஸ்வீட் சிக்ஸ்டி…. ச.சுந்தரதாஸ்

முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கி தொடர்ந்து பனித் திரை, இதயத்தில் நீ , பூஜைக்கு வந்த மலர் , தேன் மழை ஆகிய படங்களை ஜெமினி கணேசன் நடிப்பில் இயக்கி வெற்றி கண்டவர் முக்தா சீனிவாசன். ஆனாலும் ஜெமினியுடனான அவர்களின் திரைப் பட உறவு முறிய காரணமாக தேன் மழை படம் அமைந்தது. 1966ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் வெற்றி பெற்ற போதும் முக்தா, ஜெமினி இப் படத்துக்கு பிறகு அவர்கள் இணையவில்லை .
இதற்கு காரணமானவர் வேறு யாருமில்லை சோ தான்!
தேன் மழை படத் தயாரிப்பு தொடங்கிய போது அதற்கு கதை, வசனம் எழுத அமர்த்தப்பட்டவர் சோ. ஆரம்பத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரையும் சுற்றி கதை அமைக்கப் பட்ட போதும் படத்துக்கு சோ எழுதிய நகைச்சுவை வசனங்கள் ராமசமி, சீனிவாசன் சகோதரர்களை கவரவே படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையமைக்கும் படி சோவை கேட்டுக் கொண்டார்கள். சோவும் அதன் படியே கதை, வசனங்களை அமைத்தார். இந்த மாற்றத்தை பற்றி ஜெமினிடம் சீனிவாசன் சொன்ன போது ஜெமினி அதனை ஏற்றுக் கொண்டார். இதனால் தங்கு தடையின்றி படப்பிடிப்பு நடந்தது.
தூக்கத்தில் நடக்கும் நோய்க்கு உள்ளான பாஸ்கர் ஒரு கொலையை செய்து விட்டதாக நாகலிங்கம் மிரட்டுகிறான். அப்பாவியான பாஸ்கரும் பயந்து, நடுங்கி நாகலிங்கத்தின் தாளத்துக்கு ஆடுகிறான். நிர்மலா , பாஸ்கர் இருவரும் காதலர்கள் என்பதை அறிந்த நாகலிங்கம்
அக் காதலை வரவேற்கிறான். காரணம் கல்யாணம் மூலம் கிடைக்கும் சீதனம் அனைத்தையும் பாஸ்கரை மிரட்டி தானே அபேஸ் செய்யலாம் என்ற எண்ணம்தான். இதனிடையே வாசு, வேணு என்ற இரு நண்பர்களும் அரைக் கிறுக்குத்தனமாக திட்டம் போட்டு இந்திரா என்ற பணக்கார பெண்ணை ஏமாற்றி பணம் பண்ணப் பார்க்கிறார்கள். இது விஷயமாக அவர்கள் பண்ணும் கிறுக்குத்தனங்கள், அசட்டுத்தனங்கள் தான் படத்தின் காமெடி ! நாகலிங்கத்திடம் இருந்து உண்மையை வரவழைக்க வாசு, வேணு பண்ணும் ரகளையில் ரசிகர்களின் சிரிப்பொலி அடங்க நீண்ட நேரம் எடுத்தது. அந்த வகையில் வசனகர்த்தா சோவுக்கு வெற்றிதான்.
படம் முழுவதும் நாகேஷ், சோ, மனோரமா இவர்கள் பண்ணும் ரகளைத்தான் ரசிகர்களை கட்டிப் போட்டது. குறிப்பாக மனோரமா நாகேஷ், சோ இருவருக்கும் ஈடு கொடுத்து நடித்திருந்தார்.
நகைச்சுவைக் காட்சிகளை பொருத்த்க்க வரை சோ வின் வசனங்கள் காட்சிக்கு காட்சி சிரிப்பை ஏற்படுத்துகிறது. இவர்களுக்கு நடுவில் கதாநாயகன் ஜெமினியின் பாத்திரம் உற்சாகமின்றி, சோர்வாக காட்சியளிக்கிறது. கடைசி சண்டைக் கட்சியில் தான் வீறு கொண்டு எழுந்து எதிரியை தாக்குகிறார். கதாநாயகி கே. ஆர். விஜயா தான் கதாநாயகனுக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதலைத் தருகிறார்! வில்லனாக வரும் சுந்தரராஜன் வேடத்துடன் பொருந்துகிறார். அவர் வில்லனாக நடித்த முதல் படமும் இதுதான். இவர்களுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி, சச்சு, எஸ். ராமராவ், காந்திமதி , முத்துலெஷ்மி ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்துக்கான பாடல்களை வாலி , ஆலங்குடி சோமு, பாண்டுரங்கன் ஆகியோர் இய ற்றினார்கள். இசையை வழங்கியவர் டி . கே. ராமமூர்த்தி. விழியால் காதல் கடிதம், நெஞ்சே நீ போய் சேதியை சொல்லு பாடல்கள் இனிமையாக இசைத்தன. விஸ்வநாதனிடம் இருந்து பிரிந்து தனித்து இப் படத்துக்கு இசையமைத்த ராமமூர்த்தி புது முயற்சியாக இதில் சரளா என்ற பாடகியை அறிமுகப் படுத்தினார். என்னடி செல்லக் கண்ணு எண்ணம் எங்கே போகுது என்ற பாடல் சரளாவின் குரலில் இனிமையாக ஒலித்தது. எம் . கர்ணன் ஒளிப்பதிவில் விழியால் காதல் கடிதம் பாடல் அழகாக படமாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் தான் முதல் தடவையாக தொப்புள் தெரியும் விதத்தில் ஆடை அணிந்து பாடல் காட்சி தமிழில் காண்பிக்கப்பட்டது . காட்சியில் தோன்றி ஆடிப் பாடி நடித்தவர் சச்சு! முக்தா சீனிவாசனும், கர்ணனும் இக் கைங்கரியத்தை அறுபதாண்டுகளுக்கு முன் செய்திருந்தார்கள்.
முக்தா ராமசாமி படத்தை தயாரிக்க , அவரின் தம்பி முக்தா சீனிவாசன் டைரக்ட் செய்தார். சீரியஸ் படமாகத் தொடங்கி காமெடி படமாகி ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தளித்தது தேன் மழை .
ஆனாலும் முக்தா , ஜெமினி திரையுலக தொடர்புக்கு இப் படம் சோ மூலம் வேட்டு வைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் கால கட்டத்தில் சோ நாடகம் ஒன்றை மேடையேற்றி இருந்தார். அந்த நாடகத்துக்கு காமராஜ் , ஜெமினி இருவரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார்கள் . மேடையில் ஜெமினி பேசிக் கொண்டிருக்கும் போது காமராஜுக்கும், சோவுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டு நிகழ்ச்சி நடுவே காமராஜ் எழுந்து புறப்பட்டு விட்டார். அவரை சமாதானப் படுத்தும் படி ஜெமினி சொல்லியும் சோ கேட்கவில்லை. இது ஜெமினிக்கு சோ மீது மன வருத்தத்தை ஏற்படுத்தியது. தேன் மழை படப்பிடிப்பின் போது இந்த மனக் கசப்பு ஜெமினி மூலம் வெளிப்பட்டது.
தேன் மழை ஷுட்டிங்கின் போது காட்சிக்கான வசனங்களை சோ ஜெமினியிடம் படித்து காட்ட அவற்றை கேட்ட ஜெமினி இது எல்லாம் வசனமா என்று வசனத் தாள்களை தூக்கி எறிந்தார். அவ்வளவுதான் சோவுக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது. ஜெமினியுடன் தகராறு பண்ணத் தயாராகும் போதே சீனிவாசன் சோவின் கையைப் பிடித்துக் கொண்டார்.
இப்போது நீ கோபித்துக் கொண்டால் படத்தை எங்களால் முடிக்க இயலாது . அந்த நடிகர் எங்களுக்கு முக்கியம் , அவர் இல்லாமல் படத்தை முடிக்க முடியாது என்பது உனக்கே தெரியும். ஆகையால் இந்த நிகழ்ச்சியை மறந்து விடு என்று சொன்னார்கள். அதன் பின் சோவும் அந்த நிகழ்வை பெரிது படுத்தாமல் விட்டு விட்டார்.
ஆனால் இந்த சம்பவத்துக்கு பிறகு தங்களின் எந்தப் படத்துக்கும் முக்தா சகோதரர்கள் ஜெமினியை ஒப்பந்தம் செய்யவில்லை. சோ தொடர்ந்து அவர்களின் படங்களில் நடித்தார். அது மட்டுமன்றி சோ பின்னர் ஜெமினியுடனும் ஏராளமான படங்களில்நடித்தார் . அது மட்டுமன்றி முக்தா பிலிம்ஸின் சில படங்களுக்கு தொடர்ந்து கதை வசனமும் எழுதினார். முக்தா சகோதரர்கள், சோ ஆகியோர் தொடர்ந்து இணைந்து செயலாற்ற காரணமான படம் தேன் மழை !
![]()