ஏற்கனவே அதிகரித்ததற்கும் மேலாக மின் கட்டண உயர்வுடன் மின்வெட்டும் வருகிறது!; புத்தாண்டுக் காலம் நாட்டு மக்களுக்கு நல்லதாக இருக்கமாட்டாது என்கிறார் சம்பிக்க

மீண்டும் மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கும், வரட்சியை காரணம் காட்டி மின்வெட்டை அமுல்படுத்தவும் அரசாங்கம் தயாராகி வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலம் நாட்டு மக்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்காது. அதாவது மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அநுரகுமார அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் விலைகள், போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டண அதிகரிப்பும் இதனுடன் இணையும் போது மேலும் பாதிப்புகள் ஏற்படும். இந்நிலையில் ஜுன், ஜுலை மாதத்தில் வறட்சி ஏற்படும் என்ற கருத்துக்களை மக்களிடையே பரப்ப முயற்சிக்கின்றனர். அதாவது நிலக்கரி மோசடியால் அதனை சீர்செய்ய மின்வெட்டுக்கு போக வேண்டியுள்ளது. இதற்காக வறட்சியை காரணமாக காட்ட முயற்சிகின்றனர்.
மின்சார சபை நான்கு நிறுவனங்களால் பிரிக்கப்பட்டுள்ளமையினாலும், தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்டுள்ள பிரச்சினையினாலும் மற்றும் டீசல் நெருக்கடி காரணத்தினாலும் பெப்ரவரியில் கூறிய எதிர்வுகூறல்களை ஆராய்ந்து மீண்டும் ஜுன் மாதத்திற்கு முன்னர் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிடப்படுகின்றது. அத்துடன் ஏப்ரல் 20ஆம் திகதியளவில் 19 நிலக்கரி கப்பல்கள் வரவுள்ளதுடன், அதன்பின்னர் நிலக்கரி கப்பல்கள் வராது. இதனால் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படலாம் என்பதுடன் எரிபொருள் பயன்பாடு அதிகரிக்கும் நிலைமையே காணப்படுகின்றது.
இப்போதே நீர்த் தேக்கங்களில் நீர் வரத்து குறைவாக இருப்பதாக காட்ட ஆரம்பித்துள்ளனர். நன்றாக நிரம்பியிருந்த நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பை 50 வீதமாக குறைத்துள்ளனர். இந்த நேரத்தில் நீர் மின் உற்பத்தியையும் முன்னெடுப்பதில் சிக்கல்கள் இருப்பதாக தமக்கு நெருக்கமான வர்த்தகர்களுக்கு பிரிமியம் ஊடாக லாபம் சம்பாதிக்க வசதிகளை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர் என்றார்.
![]()