இலங்கை

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த கிளிநொச்சி, காத்தான்குடி மாணவர்கள்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி, மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்ட மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் அதிகூடிய புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதுடன் 8,300 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

பௌதீகவியல் (கணிதம்) பிரிவில் கிளிநொச்சி மாவட்ட மாணவனும், வர்த்தக பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட மாணவனும், உயிரியல் விஞ்ஞான பிரிவில் கொழும்பு மாவட்ட மாணவனும், கலைப் பிரிவில் குருநாகல் மாவட்ட மாணவனும், பொறியியல் தொழினுட்பவியல் பிரிவு மற்றும் உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் பிரிவு ஆகியவற்றில் கம்பஹா மாவட்ட மாணவர்களும் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்றதுடன், அதன் பெறுபெறுகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியானது.

பௌதீகவியல் (கணித) பிரிவு

இந்த பெறுபேறுகளின் பிரகாரம் பௌதீகவியல் (கணித) பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தேவேந்தன் திருகுமரன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். அத்துடன் இந்தப் பிரிவில் குருணாகலை மலியதேவ வித்தியாலய மாணவன் தருஷ கிம்ஹான கம்லத் இரண்டாமிடத்தையும் பாணந்துறை ஸ்ரீ சுமங்கல ஆண்கள் பாடசாலை மாணவன் வினுர பிரசாத் டி மெல் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

வர்தகப் பிரிவு

வர்த்தகப் பிரிவில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் சுபைதீன் மொஹமட் ஃபர்தான் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதுடன், அந்தப் பிரிவில் கொழும்பு மியூசியஸ் கல்லூரி மாணவி செனாதி திஹஸ்னா சுமனசேகர இரண்டாமிடத்தையும் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய மாணவன் திலீப சந்தெரஸ் கருணாரத்ன மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவு

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் டிலான் சஞ்சன அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதுடன், ஹொரணை தக்ஷிலா மத்திய மகா வித்தியாலய மாணவன் கிரிஷான் சசிந்து நம்தர இரண்டாமிடத்தையும், திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்ஷனா கோணேஷ் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கலைப் பிரிவு

கலைப் பிரிவில் குருநாகல் வயம்ப நோயல் கல்லூரி மாணவன் அசிந்த மிஹிரங்க ரத்நாயக்கஅகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதுடன், இந்த பிரிவில் கொழும்பு தேவி பாலிகா கல்லூரி மாணவி ஆலியா ஷெய்னா இரண்டாமிடத்தையும் கொழும்பு மியூசியஸ் கல்லூரி மாணவி மெதுசாரி தினேத்யா ரணதுங்க மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பொறியியல் தொழினுட்பவியல் பிரிவு

பொறியியல் தொழினுட்பவியல் பிரிவில் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய மாணவன் ஹேஷான் அனுஜய வனிகசூரிய அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன், இந்தப் பிரிவில் மஹவ விஜயபா தேசிய பாடசாலை மாணவன் சிதிஜ துலான் பண்டார இரண்டாமிடத்தையும் மத்துகம சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மகா வித்தியாலய மாணவன் ரிவீன் வின்சர மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் பிரிவு

உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் பிரிவில் கம்பஹா வெயாங்கொட பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலய மாணவி இஷானி மனோதா அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதுடன், இந்தப் பிரிவில் கம்பஹா ரத்னாவலி பாலிகா வித்தியாலய மாணவி விஹங்கா இமாஷா கந்தேஆரச்சி இரண்டாமிடத்தையும் இப்பாகமுவ மத்திய மகா வித்தியாலய மாணவி ஜயத்மா அமந்தி விஜேசிங்க மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை இந்தப் பரீட்சை பெறுபெறுகளுக்கமைய பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 66 வீதமானவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இம்முறை பரீட்சைக்கு தோற்றிய 281,810 மாணவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் பரீட்சைக்கு தோற்றியோரில் 8,300 பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர். இவர்களில் 7,477 பாடசாலை பரீட்சாத்திகளும், 823 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குவர்.அதேவேளை, 30,000க்கும் அதிகமானவர்கள் மூன்று பாடங்களிலும் டபிள்யூ பெறுபெறுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்வேறு காரணங்களால் 111 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பாடப்பிரிவு ரீதியாகப் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பிக்கத் தகுதி பெற்ற மாணவர்களின் வீதங்கள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களுக்கமைய உயிரியல் விஞ்ஞான பிரிவில் பாடசாலை விண்ணப்பதாரர்கள் 59.56 வீதமானவர்களும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 58.43 வீதமானவர்களும், பௌதீகவியல் (கணிதம் பிரிவில் பாடசாலை விண்ணப்பதாரர்களில் 63.9 வீதமானவர்களும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களில் 61.59 வீதமானவர்களும், வர்த்தக பிரிவில் பாடசாலை விண்ணப்பதாரர்கள் 72.02 வீதமானவர்களும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களில் 66.29 வீதமானவர்களும், கலை பிரிவில் பாடசாலை விண்ணப்பதாரர்கள் 67.57 வீதமானவர்களும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களில் 63.57 வீதமானவர்களும், பொறியியல் தொழினுட்பவியல் பிரிவில் பாடசாலை விண்ணப்பதாரர்களில் 64.85 வீதமானவர்களும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் 62.6 வீதமானவர்களும் மற்றும் உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் பிரிவில் 71.76 வீதமானவர்களும் அத்துடன் ஏனைய பாடப் பிரிவில் 55.39 வீதமானவர்களும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாகாண ரீதியான பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றோரின் வீதத்தில் மேல் மாகாணம் முதலிடத்தில் உள்ளது. இதன்படி மேல் மாகாணத்தில் 69.42 வீதமானோரும், வடமேல் மாகாணத்தில் 68.48 வீதமானோரும், வட மாகாணத்தில் 66.91 வீதமானோரும், கிழக்கு மாகாணத்தில் 66.32 வீதமானோரும், தென் மாகாணத்தில் 65.69 வீதமானோரும், சப்ரகமுவ மாகாணத்தில் 64.97வீதமானோரும், ஊவா மாகாணத்தில் 63.53 வீதமானோரும், மத்திய மாகாணத்தில் 63.04 வீதமானோரும் மற்றும் வடமத்திய மாகாணத்தில் 60.91 வீதமானவர்களும் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் இம்முறை பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மாணவிகளாவர். இருப்பினும், உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் மாத்திரம் மாணவர்கள் அதிகளவில் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *