இலங்கை

நாளுக்கு நாள் பாதுகாப்பின்மை அதிகரிப்பு; ஆபத்திலிருந்து மக்களை கைவிட்டுவரும் அரசு

நாளுக்கு நாள் நாட்டு மக்களின் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகின்றது. எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளன. இதனால் 2 கோடியே 20 இலட்சம் மக்கள் கடுமையான அழுத்தத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகி வருகின்றனர். சமூகத்தில் ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் தாய்மார்களுக்கென விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். யுனிசெப் அமைப்புடன் உடனடியாக கலந்தாலோசித்து விசேட நலன்புரித்திட்டமொன்றை ஆரம்பிக்கவேண்டும். அரசாங்கம் சர்வதேச நிதி நிறுவனங்களின் அடிமைகளாகாமல் உடனடியாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

அரசாங்கம் எவ்வளவுதான் கூறினாலும் கடுமையான உர பற்றாக்குறை ஏற்படுவதால், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கலந்தாலோசித்து, நெல், சோளம், தேயிலை உள்ளிட்ட அனைத்து பயிர்ச் செய்கைகளுக்கும் தேவையான உள்ளீடுகளை வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள். தற்போது விதைகளுக்கு தட்டுப்பாடு எழுந்து காணப்படுகின்றன. யூரியாவிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது. விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருள் கிடைத்தபாடில்லை. சில நாட்களில் சிறு போக பருவம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. இதற்குத் தேவையான எரிபொருள் உரியவாறு விவசாயிகளுக்கு கிடைத்தபாடில்லை. பயிர்களுக்கு உத்தரவாத விலை இல்லாமையினால், விவசாயிகள் மிகக் குறைந்த விலையில் தமது அறுவடைகளை விற்க வேண்டி காணப்படுகின்றன. முழு விவாசயத் துறையும் கடுமையான சரிவை சந்தித்துள்ளதால், இப்போதாவது ஐக்கிய நாடுகள் அமைப்புடன் கலந்தாலோசித்து விவாசய நடவடிக்கைகளை மீளக்கட்டியெழுப்பத் தேவையான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மீனவர்கள், தொழில்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் சகல தரப்பினரும் வீர்ச்சியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் அலட்சியமாக இருக்காமல், வீழ்ச்சியையும் சரிவுகளையும் சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்திற்கு பக்க பலத்தை சேர்க்கும் மக்களுக்காக வேண்டி முழுமையான நலன்புரி தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன்பால் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

சில நாட்களில் புத்தாண்டுக்கு தொழிற்சாலைகள் மூடுவதால் புத்தாண்டுக்கு பின் இந்த தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கத் தேவையான அடித்தளத்தை அமைப்பது அரசின் கடமையாகும். பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை இடைநிறுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி சமூகம், முதியோர் சமூகம், ஆபத்தான நிலையிலுள்ள தரப்பினர் ஆகிய அனைத்து குடிமக்களும் பாதுகாக்கப்படும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதார வலிமையை தக்கவைத்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமையாக அமைந்து காணப்படுகின்றன. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுமின்றி மக்களின் பொருளாதார, சமூக, நலன், கல்வி, சுகாதார, மீன்பிடி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நெருக்கடியிலிருந்து மக்களை காப்பாற்றும் பொறுப்பு அரசிடமே காணப்படுகின்றது. அவ்வாறே, எதிர்க்கட்சியாக எம்மால் மேற்கொள்ள முடியுமான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நாமும் தயார் என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *