மத்தய கிழக்கு யுத்தத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது மனித குலத்துக்கு ஆபத்தானது….. சின்னத்தம்பி குருபரன்

உலகில் தற்போது ஆயுத யுத்தம், உயிராயுத யுத்தம், மௌனாயுத யுத்தம், ஊடக யுத்தம் எனப் பல்வேறு வகையான யுத்தங்கள் நாளாந்தம் நடந்து கொண்டிருக்கின்றன. இவை ஒவ்பொன்றும் பற்றி முந்தைய கட்டுரைகளில் பதிவிட்டிருக்கிறேன். இந்த யுத்தங்களில் அணுவாயுத யுத்தம், உயிராயுத யுத்தங்களுடன் யுத்தச் செயற்பாடுகளுக்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது பாரிய பேரழிவை ஏற்படுத்துவனவாக அமைகின்றன. மத்திய கிழக்கில் காசா தொடக்கம் ஈரான், லெபனானுக்கு எதிரான யுத்தம்வரை ஜெனிவா ஒப்பந்தம், பிராந்திய ரீதியிலான் ஒப்பந்தம், எண்மான (Digital) தொழினுட்ப, செயற்கை நுண்ணறிவு தொடர்பான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள், நாடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் என்பவற்றை மீறி இஸ்ரயேலும் அமெரிக்காவும் யுத்தத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் காசா, ஈரான், லெபணான் போன்ற நாடுகளில் பாரிய பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றன. தற்போதைய மத்திய கிழக்கு மோதல்களில் (குறிப்பாகக் காசா மற்றும் லெபனான் பகுதிகளில்) செயற்கை நுண்ணறிவு முன்னெப்போதும் இல்லாத வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைச் “செயற்கை நுண்ணறிவின் முதல் யுத்தம்” எனச் சில பாதுகாப்பு நிபுணர்கள் குறிப்படுகின்நனர். இஸ்ரயேல் பாதுகாப்புப் படையினர் (IDF) இந்தத் தொழிநனுட்பத்தைப் பயன்படுத்துவதில் மிகவும் முன்னணியில் உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் அசுர வேக வளர்ச்சிக்கு ஏற்ப, அவற்றைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் உலக நாடுகளும் இலங்கையும் பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள முக்கிய சட்டங்கள், ஒழுங்குவிதிகளாகப் பின்வருவனவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. தரவுப் பாதுகாப்புச் சட்டம் (Data Protection Laws). இது டிஜிட்டல் உலகில் தனிப்பட்ட தரவுகள், தகவல்களை நிறுவனங்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பதை இச் சட்டம் குறிப்பிடுகிறது.
2. இலங்கையின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (No. 9 of 2022): இது இலங்கையில் தனிநபர்களின் டிஜிட்டல் தரவுகளைப் பாதுகாப்பதற்கான முதன்மைச் சட்டமாகும். தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்தல், சேமித்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை இது கட்டாயமாக்குகிறது.
3. GDPR (General Data Protection Regulation): இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டமாக இருந்தாலும், இணையம் வாயிலாக உலகெங்கும் உள்ள நிறுவனங்கள் ஐரோப்பிய குடிமக்களின் தரவுகளைக் கையாளும் போது இதைப் பின்பற்ற வேண்டும். இதுவே உலகளாவிய தரவு நிலையாக்கச் சட்டமாகவும் கருதப்படுகிறது.
4. கணினி குற்றங்கள் சட்டம் (Computer Crimes Act). டிஜிட்டல் கருவிகள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களைத் தடுக்க இந்தச் சட்டம் உதவுகிறது.
5. இலங்கையின் கணினி குற்றங்கள் சட்டம் (No. 24 of 2007): இதன்படி, அங்கீகாரமற்ற முறையில் கணினித் தரவுத் தளங்கள், செயலிகள், மின்னஞசல் தரவுகளை இடைமறித்து அணுகுதல் (Hacking), தரவுகளைத் திருடுதல், திருத்துதல், இணைய வழியில் மோசடி செய்தல் போன்ற செயற்பாடுகளைத் தண்டனைக்குரிய குற்றங்களாக வரையறுக்கிறது.
செயற்கை தொழில்நுட்பம் புதியது என்பதனால், இதற்கான சட்டங்கள் அண்மைக் காலங்களில் உலகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
1. EU AI Act (ஐரோப்பிய ஒன்றிய AI சட்டம்): இதுவே உலகில் AI-க்காக உருவாக்கப்பட்ட முதல் விரிவான சட்டமாகும். AI பயன்பாடுகளை அவற்றின் “ஆபத்து” (Risk) அடிப்படையில் வகைப்படுத்துகிறது. உதாரணமாக, மக்களின் சமூக மதிப்பீட்டை (Social Scoring) கணக்கிடும் AI பயன்பாடுகளுக்கு இது தடை விதிக்கிறது.
2. போலி வீடியொக்கள் (Deepfakes), பதிப்புரிமைச்(Copyright) சட்டம்: இது AI மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள், பிறரின் படைப்புகளை AI பயன்படுத்துவது தொடர்பான பதிப்புரிமைச் சட்டங்கள் தற்போது பல நாடுகளில் திருத்தப்பட்டு வருகின்றன.
3. இணையப் பாதுகாப்பு (Cyber security). இது இணையதளங்கள், சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யச் சில சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act – Sri Lanka): அண்மையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், இணையத்தில் தவறான தகவல்களைப் பரப்புதல், தனிநபர்களைத் துன்புறுத்துதல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பதிவுகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இணைய வழி, டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காகப் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கபட்டும் வருகின்றன. அத்தோடு சட்டத் திருத்தங்கள், குற்றங்களுக்கான தண்டனை வழங்குவது தொடர்பாகவும் பல போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்தச் சட்டங்களுக்குள் பல ஓட்டைகள் இருப்பதனாலும் ஐக்கிய நாடுகள் சபை முதல் பிராந்திய அமைப்புக்கள் வரை பலவீனமான அமைப்புக்களாக இருப்பதனால் தனி மனிதர் முதல் நாடுகள், நாடுகளின் அதியுச்ச தலைவர்கள்வரை சட்டங்கள், விதிகள், ஒழுங்குகள், ஒப்பந்தங்கள், ஏற்பாடுகள் யாவற்றையும் மீறிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் அண்மைக் காலங்களில் அமெரிக்கா, இஸ்ரயேல், இரசியா போன்ற நாடுகள் மிக மோசமாக மீறிக் கொண்டிருக்கின்றன.
அதிலும் ஒரு நாட்டின் ஆள்புல எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்திவிட்டு, நியாயம் கற்பிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மிகப் பெரிய வல்லரசு நாட்டின் சனாதிபதி ரொனாலட் ட்ரம்ப புத்தி பேதலித்தவர் போல் விளையாட்டுத் தனமாக, கோமளி போல் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பது வேடிக்கையாக அமைகின்றது. இதற்காக அவரைத் தெரிவு செய்த மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டியவர்களாக உள்ளது.
தற்பொழுது மத்திய கிழக்கில் நடக்கும் யுத்தத்தில் அமெரிக்கா, இஸ்ரயேல் போன்ற நாடுகள் சர்வதேச சட்டங்களை மீறி மனித குலத்துக்கு எதிராகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் பாரிய அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவுக்கு அமெரிக்காவின் மூளையாக இஸ்ரேலியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
இதனை இஸ்ரயேல் பாதுகாப்புப் படையினர் (IDF) முதன் முதலில் காசா யுத்தத்தில் பயன்படுத்திப் பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர். காசாவில் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக (Target Identification) செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கள் பயன்படுத்தக்பட்டன. AI மெனபொருள் அமைப்புகள் மிகக் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான இலக்குகளை (Targets) அடையாளம் காணப் பயன்படுத்தப்படுத்தப்பட்டன.
அவற்றுள், ‘The Gospel’ (Habsora): இது சுயமாக இயங்கக்கூடிய தன்னாட்சி அமைப்பு. ஒரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சேகரிக்கப்பட்ட உளவுத்துறைத் தகவல்களைப் (ட்ரோன் காட்சிகள், இடைமறிக்கப்பட்ட செய்திகள், செயற்கைக்கோள் தரவுகளபகுப்பாய்வு செய்து, எதிரிகளின் இருப்பிடங்களை மிக வேகமாகப் பட்டியலிடுகிறது. மனிதர்களால் வாரக்கணக்கில் செய்யப்படும் வேலையை இது சில மணிநேரங்களில் செய்து முடிக்கிறது.
‘Lavender’ (லவெண்டர்). இது மனித இலக்குகளை (போராளிகளை) அடையாளம் காணும் ஒரு
தரவுத்தளம் ஆகும். இது காசாவில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் அலைபேசித் தரவுகள், குரல் ஒலிப்பதிவுகள், சமூக வலைதளத் தொடர்புகளை வைத்து “இலக்குகளாகப்” பட்டியலிட்டது. காசாவில் உள்ள போராளிகளைத் துல்லியமாகக் கண்டறிவதற்கு இவ்வமைப்பு பயன்படுத்தப்பட்டது. இது பொதுமக்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, போராளிகளாக இருக்க வாய்ப்புள்ளவர்களின் பட்டியலை “Rating” முறையில் வழங்குகியது.
Where’s Daddy?: ஒரு நபர் எப்போது தனது வீட்டிற்குச் செல்கிறார் என்பதைக் கண்காணிக்கும் அமைப்பு. குடும்பத்துடன் இருக்கும் போது தாக்குதல் நடத்துவதை இது எளிதாக்குகிறது. இதனைக் குடும்பத்தோடு அழிக்கும் தொழில்நுட்பமாகப் பயன்படுத்துகின்றனர். ‘Lavender’ இலக்கைத் தீர்மானித்தால், ‘Where’s Daddy?’ என்ற அமைப்பு அந்த நபர் எப்போது வீட்டிற்கு வருகிறார் என்பதைக் கண்காணித்து உடனுக்குடன் தகவல்களை வழங்கும்.
இவ்வாறு செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கூடாகப் பெறப்பட்ட தரவுகள், தகவல்களைக் கொண்டு ஆளில்லாக் கருவிகள் மற்றும் ட்ரோன்கள் (Drones & Robotics) மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைந்து, நுண்ணிய புகைப்படக் கருவிகள் மூலம் எதிரிகளைக் கண்டறிந்து காசாவில் தாக்குதல்களை நடத்தின. இதனையே ஈரான், லெபனான் போன்ற நாடுகளிலுள்ள இலக்குகளைத் தாக்குவதற்குரிய நுட்பமாக அமெரிக்கா, இஸ்ரயேல் ஆகிய நாடுகள் பயன்படுத்துகின்றன.
வான்பரப்பில் சுற்றிக்கொண்டே நகரும் இலக்குகளைத் தாமாகவே அடையாளம் கண்டு மோதி வெடிக்கக்கூடிய சுற்றுப்பயண வெடி மருந்துகளும் (Loitering Munitions) பயன்படுத்தப்படுகின்றன. அத்தோடு சோதனைச் சாவடிகளிலும், டிரோன் புகைப்படக் கருவிகளிலும் மக்கள் கூட்டத்தைக் கண்காணித்து, தேடப்படும் நபர்களைக் கண்டறிய AI பயன்படுத்தப்படுகிறது. போர் நடைபெறும் பகுதிகளில் உள்ளவர்களின் சமூக ஊடகப் பதிவுகளைப் பகுப்பாய்வு செய்து, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் அல்லது அவர்களின் மனநிலை என்ன என்பதை அறியச் சமூக ஊடகப் பகுப்பாய்வுகள் உதவுகின்றன.
இனங்காணப்பட்ட இலக்குகளையும், சமூக ஊடகங்கள் மூவம் பதிவு செய்யப்பட்ட குரல்களுக்கு உரியவர்களையும் தாக்கி அழிப்பதற்கு ஆளில்லா விமானங்களும் வங்கர் பூஸ்டர் குண்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கள் மூலம் திரட்டப்படும் உளவுத் தகவல்களில் 85 வீதம் துல்லியமும் 15 வீதம் தவறுகள், பிழைகள் கொண்டனவாகவும் உள்ளன. AI தவறான நபரை இலக்காக அடையாளம் காட்டினால், அது அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கும் (Collateral Damage) வழிவகுத்துவிடும். ஒரு மனிதனின் உயிரைத் தீர்மானிக்கும் முடிவை ஒரு அல்கோரிதம் (Algorithm) மென்பொருளிடம் ஒப்படைப்பது சரியா என்ற கேள்வி உலகளவில் எழுப்பப்பட்டு வருகின்றன.
இம்மென்பொருள் முன்பு காசாவிலும் (Gaza) தற்போது ஈரான், தெற்கு லெபனான் பகுதிகளிலும் அடையாளப்படுத்தப்பட்ட இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கு அமெரிக்க, இஸ்ரேலியப் படையினரால் பயன்படுத்தப்படுவதாகப் பல்வேறு சர்வதேச ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் (Amnesty International) தெரிவித்துள்ளன. மத்திய கிழக்கு யுத்தத்தில், குறிப்பாக காசா பகுதியில், செயற்கை நுண்ணறிவு தவறாக அல்லது பொறுப்பற்ற (Misuse) முறையில் பயன்படுத்தப்பட்டதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மிகப்பெரியவை. இது போரை ஒரு “தொழிற்சாலை முறைப் படுகொலை” (Mass-produced targets) போல மாற்றியுள்ளதாகப் பல சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Lavender அமைப்பின் அல்கோரிதம் மென்பொருள் (Algorithm) போராளிகளைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்ட சாதாரண மக்களை “இலக்காக” வகைப்படுத்தி இலக்கினை இனங்காட்டுகிறது. இதில் காணப்படும் 15 வீதமான தவறான கணிப்புகள் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் குறிவைக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தன. Where’s Daddy? மென்பொருள் அமைப்பில் குறித்த நபர், அல்லது போராளிகள் எப்போது தங்களின் வீட்டிற்குச் செல்கிறார்கள் என்பதைக் கண்காணித்து, அவர்கள் குடும்பத்துடன் இருக்கும்போது தாக்க அனுமதிக்கிறது.
இஸ்ரயேல் பாதுகாப்புப் படையினர் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் (குழந்தைகள், முதியோர், நோயாளிகள், கற்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் உட்பட) ஒரே தாக்குதலில் கொன்றனர். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தியே ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதொல்லா அலி கொமெய்னி உட்படப் பல முக்கியத்தர்கள் கொல்லப்பட்டனர். The Gospel (Habsora) மென் பொருள் அமைப்பு மிக வேகமான முறையில் “இலக்குகளை” (Targets) உருவாக்கியது. தரவை விட வேகமே முக்கியமாகக் கருதப்பட்டது. இதனைப் பயன்படுத்தி இஸ்ரயேல் பாதுகாப்புப் படைகள் காசாவில் 60 வீதத்துக்கும் மேற்பட்ட வீடுகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், சிவில் கட்டமைப்புக்களைத் தரைமட்டமாக்கின.

மத்திய கிழக்கு யுத்தத்தில் பயன்படுத்தப்படும் ‘Lavender’ (லவெண்டர்) போன்ற AI அமைப்புகள், யுத்த தர்மத்தையும் சர்வதேச சட்டங்களையும் தலைகீழாக மாற்றியுள்ளன. ‘Lavender’ என்பது (The AI Target Generator) இஸ்ரேலிய உளவுத்துறையின் ஒரு பிரிவான ‘Unit 8200’ உருவாக்கிய ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள். இதன் முதன்மை நோக்கஙஜகளாக இலக்குகளைப் பட்டியலிடுதல், தரவுச் சேகரிப்பு, மக்களின் சமூக ஊடகப் பதிவுகள், அலைபேசி தொடர்புகள், அவர்கள் செல்லும் இடங்கள் (GPS), வாட்ஸ்அப் குழுக்களறின் உரையாடல்களை ஓட்டுக் கேட்டல் போன்ற தரவுகளை இது பகுப்பாய்வு செய்து பாதுகாப்புப் படைக்கு வழங்குகிறது. ஒரு நபர் போராளி அமைப்பைச் சேர்ந்தவரா என்பதை 1 முதல் 100 வரை புள்ளிகளைக் (Scoring) கொண்டு மதிப்பிடுகிறது. ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பவர்கள் “தாக்கப்பட வேண்டிய இலக்குகளாகத்” தானாகவே வகைப்படுத்தப்படுத்தித் தரவுகள், தகவல்களைப் பாதுகாப்பு படையினருக்கு வழங்க அவர்கள் குறித்த இலக்கைத் தாக்கி அழிக்கின்றனர். ஒரு நபரின் அனுமதியின்றி அவர்களின் தரவுகள், தகவல்களைத் திருடுவதும், தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டபதும், குரலைப் பதிவு செய்வதும் சர்வதேச சட்டங்களை மீறிய செயலாகும். இதனையே மத்திய கிழக்குப் யுத்தத்தில் அமெரிக்காவும் இஸ்ரயேலும் பயன்படுத்துகின்றன.
மனிதச் செயற்பாடுகள் இன்றித் தன்னிச்சையாகச் (Autonomous Drones) சுற்றும் ட்ரோன்கள் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிப்பது யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் அதிர்ச்சி, அச்சம், பீதி, பயம் போன்ற உளவியல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தின. போதுமான தெளிலின்மை, மனித மேற்பார்வை குறைதமை (Lack of Human Oversight) என்பவற்றால் AI ஒரு நபரைத் “தீவிரவாதி” என அடையாளப்படுத்தினால், இராணுவ அதிகாரிகள் அதனை ஆழமாக ஆராயாமல் 20 வினாடிகளில் தாக்குதலுக்கு அனுமதி வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை AI தொழினுட்பத்தை ஒரு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ போலப் பயன்படுத்தியதைக் காட்டுகிறது. யுத்த களத்தில் உள்ள மக்களின் அலைபேசி எண்கள் அல்லது புலனக் (Whats app) குழுக்களை அடிப்படையாகக் கொண்ட துல்லியமற்ற தரவுகளைக் (Inaccurate Data) கொண்டும் AI முடிவெடுக்கிறது. ஒரு போராளி இருந்த குழுவில் தற்செயலாக ஒரு சாதாரண நபர் இருந்தாலும், அவரையும் “இலக்காக” AI கருதியது.
ஒர் அடிமட்டப் போராளியைக் கொல்வதற்குப் 15 முதல் 20 பொதுமக்கள் வரை கொல்லப்படலாம் என்ற “அனுமதிக்கப்பட்ட உயிரிழப்பு” (Collateral Damage Quota) விகிதத்தை AI னெபொருள் அமைப்புகளில் நிர்ணயித்தது வகை தெபகையற்ற உயிரிழப்புகளையும் (Collateral Damage) சேதங்களையும் ஏற்படுத்தின. AI என்பது ஒரு கருவி மட்டுமே தவிர அதனை இயக்குபவர்களின் ‘நெறிமுறைகள்’ (Ethics) சரியாக இல்லாதபோது, அது ஒரு துல்லியமான ஆயுதமாக இருப்பதற்குப் பதிலாக ஒரு பேரழிவு இயந்திரமாக மாறியிருக்கிறது. மத்திய கிழக்கு யுத்தத்தில் AI யின பயன்பாடு சர்வதேச மனிதநேயச் சட்டங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை (UN) வெறும் அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொண்டு, எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் ஊள்ளது.
ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அமைப்புத் தவறுதலாக ஒரு மருத்துவமனையையோ அல்லது அப்பாவி மக்களையோ தாக்கினால், அதற்கு யார் பொறுப்புக்கூறவது. நிரலாக்கத்தை (Coding) செய்தவரா? அல்லது அதற்குரிய பரிந்துரையைச் செய்த அதிகாரியா? என்பதில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது. பொதுமக்களின் அலைபேசி மற்றும் தனிப்பட்ட தரவுகளை ஒட்டுமொத்தமாகச் சேகரித்து அவர்களை “இலக்குகளாக” மாற்றுவது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. தொழில்நுட்ப நிறுவனங்கள் (Big Tech) வழங்கும் கிளவுட் கம்ப்யூட்டிங், அல்காரிதம் மென்பொருள்கள் யுத்தத்தை ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட செயலாக மாற்றியுள்ளன. இது போரின் கொடூரங்களைக் குறைப்பதற்குப் பதிலாக, மிகக் குறுகிய காலத்தில் அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்த வழிவகுத்திருக்கிறது.
ஒரு இலக்கை AI பரிந்துரைத்தவுடன், ஒரு மனித அதிகாரி அதைச் சரிபார்க்கச் சராசரியாக 20 வினாடிகள் மட்டுமே செலவிடுகிறார். அந்த நபர் உண்மையில் ஆயுதம் ஏந்தியவரா அல்லது தவறுதலாக அடையாளம் காணப்பட்டவரா என்பதை ஆராய அவகாசம் வழங்கப்படுவதில்லை. இந்த அமைப்பில் சுமார் 15 வீதம் தவறுகள், பிழைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 100 பேர் கொல்லப்பட்டால் அதில் 15 பேர் தீவிரவாத அமைப்புகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத அப்பாவிகளாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த “அனுமதிக்கப்பட்ட தவறு என்பது சட்டரீதியான குற்றமாகும்.
உயர் அதிகாரிகளைத் தாக்க விலையுயர்ந்த “துல்லியமான ஏவுகணைகளைப்” (Smart bombs) பயன்படுத்தும் இராணுவம், ‘Lavender’ அடையாளம் காட்டும் சாதாரண வீரர்களைத் தாக்க மலிவான “ஊமை வெடிகுண்டுகளைப்” (Dumb bombs) பயன்படுத்துகிறது. இது சுற்றியுள்ள பொதுமக்களையும் தாக்கி அழிக்கிறது.
ஒரு போராளி இராணுவ முகாமில் இருக்கும்போது தாக்குவதை விட, அவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் அருக்குமபோது தாக்குவது “எளிது” என Where’s Daddy? மென்பொருள் அமைப்பு திட்டமிடுகிறது. அதனால் ஒரு தனிநபரைத் தாக்கும்போது, ஒட்டுமொத்த குடும்பமும் கொல்லப்படுகிறது. இதனை ஜெனீவா ஒப்பந்தம், சர்வதேச நீதிமன்றத் (ICC/ICJ) தீர்ப்பு வரையறைகள் என்பவற்றை மீறப் பொது மக்களையும் இராணுவத்தையும் வேறுபடத்திப் பார்க்கத் தவறி, மனிதனின் இறுதி (Meaningful Human Control) முடிவெடுக்கும் அதிகாரத்தை இயந்திரத்திடம் ஒப்படைத்தல். கூட்டுத் தண்டனை (Collective Punishment) வழங்குதல், ஒரு நபருக்காக ஒரு கட்டிடத்தையோ, குடும்பத்தையோ அழிப்பது குற்றமாகும் என வரையறுத்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான “பொறுப்புக்கூறல்” என்பது மிகப்பெரிய சட்ட ஓட்டையாகும். AI ஒரு தவறான இலக்கை அடையாளம் கண்டு, பாடசாலை, மருத்துவமனை, சமூகப் பொதுக் கட்டடங்கள் தாக்கப்பட்டால் அதற்கு அல்காரிதம் மென்பொருளை உருவாக்கிய பொறியாளர் பொறுப்பாளரா? வெறும் 20 வினாடிகளில் அதற்குக் கட்டளை பிறப்பித்த இராணுவ அதிகாரியா? அல்லது அந்த AI அமைப்பை இயக்கிய அரசாங்கமா? என்பதில் தெளிவின்மை இருப்பதால், நாடுகள் AI-ஐ ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு போர்க் குற்றங்களில் இருந்து தப்பிக்க முயல்கின்றன. மத்திய கிழக்கில் நடக்கும் இந்த மோதல், உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது. “மனித நேயமும், தார்மீகமும் இல்லாத இயந்திரங்கள் போரை நடத்தும்போது, அது வெற்றியைத் தேடித் தராது, மாறாக ஒட்டுமொத்த மனித நேயத்தின் அழிவிற்கே வழிவகுக்கும்.
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தங்கள் தொழினுட்பத்தைப் பயிற்றுவிக்க மற்றவர்களின் உழைப்பை (தரவுகளை) அனுமதியின்றிப் பயன்படுத்துவதாகக் கூறித் தற்போது சர்வதேச அளவில் பல முக்கிய சட்டப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் தீவிரமடைந்துள்ள சில முக்கிய வழக்குகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
பதிப்புரிமை மீறல் வழக்குகள் (Copyright Lawsuits). தமது அனுமதியின்றித் தங்களது கட்டுரைகள், புத்தகங்கள், கலைப் படைப்புகளை AI-க்கு பயிற்சியளிக்கப் பயன்படுத்தியதாகப் பல நிறுவனங்கள் மற்றும் கலைஞர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
The New York Times vs OpenAI & Microsoft. தனது மில்லியன் கணக்கான செய்திக் கட்டுரைகளை ChatGPT-க்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தியதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ வழக்குத் தொடர்ந்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்க நிலவரப்படி, இந்த வழக்கில் AI அமைப்புக்கள் தகவல்களை அப்படியே “நினைவு வைத்து” வெளியிடுவது (Regurgitation) குறித்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

கலைஞர்கள் vs. Midjourney & Stability AI. சொரா அன்டர்சன் (Sarah Andersen) போன்ற கலைஞர்கள், தங்களது ஓவியப் பாணிகளை (Art Styles) அனுமதியின்றித் திருடி AI மூலம் படங்களை உருவாக்குவதாகக் கூறி கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
Getty Images vs. Stability AI. உலகப் புகழ்பெற்ற புகைப்பட நிறுவனமான கெட்டி இமேஜஸ், தனது 12 மில்லியன் புகைப்படங்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக வழக்குத் தொடர்ந்தது. இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், 2025-இல் லண்டன் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், AI மாதிரிகள் படங்களை நேரடியாகச் சேமித்து வைப்பதில்லை என்பதால் பதிப்புரிமை மீறல் இல்லை என்று கூறியிருந்தாலும், வர்த்தக முத்திரை (Trademark) விவகாரங்களில் சில தடைகளை விதித்திருந்தது
இசை மற்றும் குரல் தொடர்பான போராட்டங்களும் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. Scarlett Johansson vs. OpenAI தனது குரலைப் போன்ற ‘Sky’ என்ற குரலை ChatGPT இல் பயன்படுத்தியதாகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் குற்றம் சாட்டினார். இது “தனிநபர் அடையாள உரிமை” (Right of Publicity) தொடர்பான விவாதத்தை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது.
இசை நிறுவனங்கள் vs. Suno & Udio: சோனி மியூசிக் (Sony Music) மற்றும் யுனிவர்சல் மியூசிக் (Universal Music) போன்ற நிறுவனங்கள், AI மூலம் இசையை உருவாக்கும் செயலிகளுக்கு எதிராக 2024-இல் வழக்குத் தொடர்ந்தன. இவை மனிதக் கலைஞர்களின் பாடல்களைப் பயிற்றுவிப்புத் தரவுகளாகப் பயன்படுத்துவதை எதிர்க்கின்றன.
2026 இல் New York Times vs OpenAI செய்தித் தரவுத் திருட்டு விசாரணைகள் நிலுவையில் உள்ளன. Artists vs Midjourney ஓவியப் பாணி திருட்டுத் தொடர்பான பல கோரிக்கைகள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், முக்கிய விசாரணைகள் தொடர்கின்றன. Authors vs Anthropic. படைப்பாளிகளின் புத்தகங்களைப் பயன்படுத்தயமைக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க 1.5 பில்லியன் டொலர் மதிப்பிலான இழப்பீட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறான வழக்குகளும் தீர்ப்புகளும் AI நிறுவனங்கள் எதிர்காலத்தில் தகவல்களைப் பயன்படுத்திப் பணம் கொடுக்க வேண்டுமா?, கல்வி, ஆராய்ச்சிக்கு அனுமதி கிடைக்குமா?, AI உருவாக்கும் படங்களுக்கு அல்லது பாடல்களுக்குப் பதிப்புரிமை கிடைக்குமா? போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தீர்மானிக்கும்.
உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான இத்தனை பிரச்சிகைளும் கேள்விகளும் இருக்கையில் அமெரிக்க, இஸ்ரயேல் போன்ற நாடுகள் யுத்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது பாரிய பேரழிவை ஏற்படுத்த இருக்கின்றன. உலக நாடுகள் இதனைத் தட்டிக் கேட்காமல் இனிமேலும் கண்ணை மூடிக் கொண்டிருப்பது உலக நாடுகளின் பொருளாதாரத்தை அதல பாதாளத்துக்குக் கொண்டு செல்வதை யாராலும் தடுக்க முடியாது போகலாம். இதில் உலக நாடுகள் மாத்திரமின்றி தமது நாட்டினதும் சர்வதேசத்தினதும் நலன் கருதி அமெரிக்க மக்களும், இஸ்ரேலிய மக்களும் ஒன்று திரண்டு மன நோயாளிகளான ரொனால்ட் ட்ரம்ப், பெஞ்சமின் நெத்தன்னியாகு இருவரையும் பதவியில் இருந்து நீக்குவதற்கு இலங்கை, வங்களாதேசம், நெபாளம் போன்று நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லையெனில் செயற்கை நுண்ணறிவு காலந்த மத்திய கிழக்கின் மீதான யுத்தம் உலக நாடுகளில் அரசியல், பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்துவிடும்.
தேடிப் போயக் கொல்லும் பில்லி, சூனியம், பேய், பிசாசு பற்றியெல்லாம் முன்பு நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்றதொரு அரக்கனாகச் செயற்கை நுண்ணறிவைத் தவறாகப் (Misuse) பயன்படுத்தி மத்திய கிழக்கு யுத்தத்தில் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்கா, இஸ்ரயேல் பொன்ற நாடுகளின் பாதுகாப்புப் படையினர் நாடுகளின் அதியுச்ச தலைவர்கள் முதல் சாதாரண கூலித் தொழிலாளி வரை அலைபேசிகளை ஒட்டுக் கேட்டும், குரல் பதிவு செய்தும், சமூக வலைத்தளங்களை இடைமறித்தும், குறித்த நபரின் குரல், அளடையாளம் என்பவற்றைக் கொண்டு உரிய நபரை ட்ரோன், ஆளில்லா விமானங்கள் மூலம் தேடிச் சென்று வங்கர் பூஸ்டர் குண்டுகளால் தாக்கி அழிப்பது உலகத் தவைர்கள், பிரபல்யமானவர்களுக்கு ஆபத்தாக முடிந்துவிடும். இவ்வாறுதான் காசா, லெபனான், யெமன் போன்ற நாடுகளின் தீவிரவாதக் குழுக்களின் தலைவர்களும், ஈரானின் அதியுச்ச ஆன்மீகத் தலைவர் முதல் அமைச்சர்கள், படைத் தளபதிகள் முக்கியஸ்தர்கள் வரைக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அத்தோடு பல பொதுக் கட்ட்டங்கள் தாக்கப்பட்டமையால் சிறுவர்கள் உட்படப் பல ஆயிரக் கணக்கானோர் இறந்தும், காயப்பட்டும் இருக்கின்றனர். இந்த அடாவடித்தனமான யுத்தத்தால் எலக நாடுகள் யாவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ரொனால்ட் ட்ரம்ப் இந்த யுத்தத்தை வரைவில் முடிவுக்குக் கொண்டு வராமல் அடாவடித்தனமான அரசியல் கோமாளி போல யுத்தம் செய்தால் உலக ஒழுங்கு மாறி, இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா பாதுகாத்து வந்த ஏகபோக வல்லரசுக்கான இடம் இரசியா, சீனா போன்ற நாடுகளுக்குக் கைமாறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நாட்டின்மீது அக்கறை கொண்ட தேசாபிமானிகள் சர்வதேசத்தை உதாசீனம் செய்யும் ட்ரம்ப், நெத்தன்னியாகு இருவருக்கும் கடிவாளமிட்ட ஓரம்கட்டுவதற்து நாடு தழுவிய போராட்டங்களை மேற்கொள்வதே சிறந்த தீர்வாக அமையும்.
![]()