ஆக்கிரமிக்கப்படும் தெற்கு லெபனான்: மாற்றமடையும் இஸ்ரேலின் எல்லைகள்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(காசா மீது இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை போரின் கோர முகத்தை நினைவூட்டும் வகையில், லெபனானில் அதே பாணியிலான தாக்குதலை நடத்துகிறது. இஸ்ரேலின் நிதியமைச்சர், தெற்கு லெபனானை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகத் தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றுள்ளார். இஸ்ரேலின் எல்லைகளை மாற்றியமைப்பது அவசியம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்)
லெபனானின் தெற்கு எல்லைக்குள் சுமார் முப்பது கி.மீ வரையிலான பகுதிகளை ஆக்கிரமித்துத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேவேளை லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஒரு பெரும் தரைவழிப் படையெடுப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில் தெற்கு லெபனானைக் கைப்பற்றுவதற்கான இஸ்ரேலின் திட்டங்களை உலக நாடுகள் பலவும் கடுமையாகக் கண்டித்து வருகின்றன. காசா மீது இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை போரின் கோர முகத்தை நினைவூட்டும் வகையில், லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் அதே பாணியிலான தாக்குதலை நடத்தி வருகிறது.
தெற்கு லெபனான் ஆக்கிரமிப்பில்:
லெபனானின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் மீறப்படக்கூடாது என்று அமெரிக்க உட்பட பல நாடுகளும் இஸ்ரேலை எச்சரித்துள்ளன. இந்த மாதத் தொடக்கத்திலிருந்து இஸ்ரேலியத் தாக்குதல்களால் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1200 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 4000 ஆகவும் உயர்ந்துள்ளது. இதேவேளை லெபனான் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப்பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டிலும் வாரக்கணக்கில் நீடித்து வரும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேலின் தரைவழிப் படையெடுப்பு நெருங்கி வரும் நிலையில், அனைத்து மட்டங்களிலிருந்தும் மனிதாபிமான நெருக்கடி குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. லெபனான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சர்வதேச அளவில் நாடுகள் பலவும் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியதுடன் இப்போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்டங்களுக்கு இணங்கச் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளன.
அப்பாவி பொதுமக்களைப் பாதுகாக்குமாறும், உள்கட்டமைப்புகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அமைதி காக்கும் படைகள் மீதான தாக்குதல்களைத் தவிர்க்குமாறும் அனைத்துத் தரப்பினரையும் சர்வதேச நாடுகள் வலியுறுத்து வருகின்றன.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை பொதுமக்களின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது.
லெபனானில் பெரும் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும், நாட்டின் ஏற்கனவே மோசமாக உள்ள சூழலை மேலும் சீர்குலைக்கக் கூடியதுமான இத்தகைய தரைவழி நடவடிக்கைகளிலிருந்து இஸ்ரேலை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியுள்ளது.
லெபனான் உள்நாட்டுப் போர் :
தற்போதைய போர் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே தீவிரம் அடைந்துள்ளது. ஆனால் 1975 முதல் 1990 வரை லெபனானில் பல தரப்பினரிடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரால் 120,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது.
2012ஆம் ஆண்டு நிலவரப்படி, ஏறத்தாழ 76,000 மக்கள் லெபனானின் உள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர். தவிரவும் இப்போரின் காரணமாக ஒரு மில்லியன் மக்கள் லெபனானை விட்டு வெளியேறியதாகவும் மதிப்பிடப்படுகின்றது.
சுனி இசுலாமியருக்கும் சியா இசுலாமியருக்கும் இடையேயும், கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயும் நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் சிரியா, இஸ்ரேல் நாடுகளும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் ஈடுபட்டன.
1976இல் சிரியா மற்றும் அரபு நாடுகள் கூட்டமைப்பால் ஏற்பட்ட சிறு அமைதிக்குப் பிறகு மீண்டும் உள்நாட்டுச் சண்டை தொடர்ந்தது. முதன்மையாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் முதலிலும் பின்னர் இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த தென் லெபனானில் சண்டை கூடுதலாக இருந்தது. மே 17, 1983இல் அமெரிக்க ஐக்கிய நாடு ஆதரவு நல்கிய உடன்பாடொன்று லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்டது. ஆனால் சிரியா தனது படைகளை மீட்டுக் கொள்ளாததால் இந்த உடன்பாடு தோல்வியுற்றது என்று கூறப்படுகிறது.
லிட்டானி நதி இஸ்ரேல் வசம்:
நிகழ் காலத்தில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி ஊடுருவலால் அந்நாட்டு குழந்தைகள் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக யுனிசெஃப் (UNICEF) பேரதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் விடுத்த வெளியேற்ற எச்சரிக்கையால், லெபனானின் சுமார் 14 சதவீதப் பகுதிகளில் இருந்து 3,70,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால் ஒட்டுமொத்தத் தலைமுறையினரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என எச்சரித்துள்ளனர். மழலைகளின் அழுகுரல்களுக்கு மத்தியிலும் தொடரும் இந்த மோதல், உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இஸ்ரேலிய எல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள லிட்டானி நதி வரையிலான தெற்கு லெபனான் பகுதிகளைத் தனது இராணுவம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என்று இஸ்ரேல் அஅறிவித்துள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ‘லிட்டானி நதி வரையிலான பாதுகாப்பு பிராந்தியத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் என்று கூறியுள்ளார். பாலஸ்தீனியப் பகுதி மீதான போரின் போது, காசா மீது இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை போரின் கோர முகத்தை நினைவூட்டும் வகையில் தெற்கு லெபனானில் பல நகரங்களும் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன.
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், தெற்கு லெபனானை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகத் தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளார். இஸ்ரேலின் எல்லைகளை மாற்றியமைப்பது அவசியம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். லெபனான் நாட்டின் தெற்குப் பகுதிக்கு மிக முக்கிய இணைப்பாகத் திகழும் காஸ்மியே பாலம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை லெபனான் அதிபர் ஜோசப் அவுன், தரைவழிப் படையெடுப்பிற்கான ஒரு முன்னறிவிப்பு என்று அவர் வர்ணித்தார்.
ஹிஸ்புல்லா தாக்குதல் தீவிரம்:
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் பாரிய சேதங்களை விளைவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் அதிநவீன மெர்காவா (Merkava) டாங்கிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில், ஒரே நாளில் பல டாங்கிகள் உருக்குலைந்துள்ளதாக அந்த அமைப்பு உரிமை கோரியுள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தரைப்படை முன்னேற முயன்றபோது நடத்தப்பட்ட கொரில்லா தாக்குதல்கள் மற்றும் நவீன ஏவுகணைத் தாக்குதல்களால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 15 நாட்களில் மட்டும் லெபனானில் 75-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய மெர்காவா (Merkava) ரக டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவல்களின்படி, கடந்த புதன்கிழமை மட்டும் 21 மெர்காவா Merkava Tanks டாங்கிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலைக்குள் மேலும் 20 டாங்கிகள் எரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மார்ச் 2ஆம் திகதி முதல் இதுவரை இஸ்ரேலிய இராணுவத்தின் சுமார் 73 டாங்கிகள் ஹிஸ்புல்லாவினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக டெபெல் (Debel), அல்-கந்தாரா மற்றும் டாய்பே ஆகிய பகுதிகளில் இஸ்ரேலிய கவச வாகனங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2006 ஆண்டு லெபனான் போர்:
தற்போது இஸ்ரேலுக்கு தெற்கு லெபனானில் மரண அடி விழுந்நு வருகிறது. ஹிஸ்புல்லாவின் ஏவுகணையில் நிலைகுலைந்த பல மெர்காவா டாங்கிகள் செயலிழந்து வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களால் அதிரும் இஸ்ரேல் லெபனான் எல்லையில் பெரும் படைகளை குவித்து வருகிறது. கொடுமையாக அரங்கேறி வரும் இந்தத் தாக்குதல்களின் வீரியமானது, கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற லெபனான் போரை நினைவுபடுத்துவதாக சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அன்றைய காலத்தில் இஸ்ரேலிய தரைப்படைக்கு ஹிஸ்புல்லா கொடுத்த அதே நெருக்கடியை இப்போதும் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. பலத்த உயிரிழப்புகளை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் இந்தக் கடுமையான மோதல்களுக்கு மத்தியில், தெற்கு லெபனானில் தங்களது படை வீரர்கள் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு தெற்கு லெபனானில் மரண அடி விழுந்து கொண்டிருக்கிறது. மார்ச் 8ஆம் திகதிக்குப் பிறகு உயிரிழந்த இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தாக்குதலில் இதுவரை பல மெர்காவா டாங்கிகள் நிலைகுலைந்த அழிந்துள்ளன. இருப்பினும், டாங்கிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை விரிவான தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
நீண்ட நாட்களாகப் பொறுமை காத்து வந்த ஹிஸ்புல்லா, தற்போது இஸ்ரேலிய இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் ட்ரோன்களைப் (Drones) பயன்படுத்தி தாக்குதல்களைத் தொடுத்துள்ளது
இஸ்ரேலிய இராணுவத்தில் ஆள் பற்றாக்குறை
போர் தீவிரம் அடைந்துள்ள வேளையில், இஸ்ரேலிய இராணுவத்தின் ஆள்
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் படைகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அவசர சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்ப்
படாவிட்டால் இராணுவம் சுயசிதைவுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டு இராணுவத்தின் தலைமை அதிகாரி இயால் ஜமீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல முனைகளில் போர் நடந்து வரும் நிலையில் இராணுவத்தின் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடும் சிக்கல்கள் நிலவுவதாக எச்சரிக்கை சமிக்ஞைகளை முன்வைத்துள்ளார். இஸ்ரேலிய படைகளுக்கான தேவைகள் அதிகரித்து வரும் அதேவேளை, அடிப்படைப் பணிகளைக்கூட முன்னெடுக்க முடியாத நிலை விரைவில் ஏற்படக்கூடும் என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
![]()