இலங்கை

அந்த அநுர இன்றில்லை இந்த அநுர அன்றில்லை!; மொட்டு பொதுச் செயலாளர் சாகர விசனம்

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு மக்களுக்காக கதைத்த அநுரகுமார இப்போது நாட்டில் இல்லை. இப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருப்பர் எதிர்க்கட்சியில் இருந்த அநுரகுமாரவாக இருக்க வாய்ப்பில்லை என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் முன்னொரு காலத்தில் அனுரகுமார என்ற எதிர்க்கட்சி எம்.பியொருவர் இருந்தார். அவர் மக்களுக்காக கதைத்த, மக்களுக்காக சகல தியாகங்களையும் செய்யக்கூடியவராக இருந்தார். ஆனால் ஏழைமக்களின் துரதிஸ்டவசமாக அந்த அனுரகுமார என்ற எம்.பி இப்போது நாட்டில் இல்லை. இப்போது அனுரகுமார என்ற ஜனாதிபதியொருவரே இருக்கின்றார். இவர் முன்னர் இருந்த அனுரகுமாரவாக எங்களுக்கு தெரியவில்லை. எதிர்க்கட்சியில் அநுரகுமார இருந்த காலப்பகுதியில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணமான அரசாங்க வரிகளை நீக்குவதாக கூறியிருந்தார். ஆனால் இப்போது அரசாங்கத்தினால் பெட்ரோலுக்கு 132 ரூபாவும், டீசலுக்கு 110 ரூபாவும் வரியாக அறவிடப்படுகின்றது.

பல்வேறு நாடுகள் தற்போதைய உலக யுத்த நிலைமையில் எரிபொருளுக்காக மக்களிடம் அறவிடப்படும் வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள போதும், தற்போதைய ஜனாதிபதி இணங்கவில்லை என்றே தெரிகின்றது. தற்போதைய நிலைமையில் ஒரு லீட்டர் பெட்ரோலை 264 ரூபாவுக்கும், டீசலை 260 ரூபாவுக்கும் வழங்க முடியும். அன்று இருந்த எதிர்க்கட்சி எம்.பி அநுரகுமார இருந்தால் இதனை செய்திருப்பார்.

இதேவேளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் மின்கட்டண அதிகரிப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் காலத்தில் மின்வெட்டை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் ஈரான் யுத்தம் அல்ல. தரமற்ற நிலக்கரியை கொண்டுவந்து, டீசலில் அதிகளவில் மின் உற்பத்தியை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து, டீசல் மாபியாக்களுக்கு இடமளிப்பதே காரணமாகும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *