இலங்கை

குருக்கள்மடம் பிரதேசத்தில் மனிதப் புதைகுழி இருப்பதாக கூறப்படும் பகுதியில் அகழ்வு ஆரம்பம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் பிரதேசத்தை அகழ்வு செய்யும் பணிகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது.

இந்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2014ம் ஆண்டு வழக்கு இடைநிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பின்னர் 2017ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் இவ்வழக்கு விசாரணை மீள ஆரம்பிக்கப்பட்டு 2025ம் ஆண்டு குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான பிரதேசம் அகழ்விற்கான கட்டளை கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டு கடந்த மாரச் 9 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது நேற்று திங்கட்கிழமை(மார்ச் 30)குறித்த பகுதியை அகழ்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் நிமித்தம் நேற்றைய தினம் இந்த மனிதப் புதைகுழி அமைந்துள்ள பிரதேசம் எனச் சந்தேகிக்கப்படும் பகுதியில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

1990ம் ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொண்டு திரும்பிய 167 ஹஜ் யாத்திரிகர்கள் குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பினால் கடத்தி காணாமலாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த மனிதப் புதைகுழி பகுதி அகழப்படுகின்றது.

இந்த அகழ்வின் போது களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், இந்த வழக்கின் சட்டத்தரணிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், களுவாஞ்சிக்குடி பொலிஸார், மட்டக்களப்பு பொலிஸ் குற்றத் தடயவியல் பிரிவு, அகழ்வாரய்ச்சித் திணைக்களம், காணாமல்போனோர் அலுவலகத்தினர், பாதுகாப்புப் பிரிவினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் இந்தப் பிரதேசத்திற்கு வந்திருந்தனர்.

முதற்கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்கும் முகமாக ஸ்கான் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த பிரதேசம் 5 மீற்றர் அகலமும் 5 மீற்றர் நீளமும், 9 மீற்றர் ஆழத்திலும் அகழப்பட்டு ஐந்து அல்லது ஏழு நாட்களுக்கு அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த அகழ்வுப் பணிகளுக்காக தடயவியல் மானுடவியல் விசேட நிபுணர்களான சட்ட வைத்திய அதிகாரிகளான வைத்தியர் தரங்க டீ சில்வா, வைத்தியர் செ.பிரணவன், வைத்தியர் கே.ஏ.கிரியுல்ல தலைமையிலான 11 பேர் அடங்கிய குழுவினரும், இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக மண்முனை தென் எருவில்ப்பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *