உலகம்

இஸ்ரேலில் புதிய சட்டம் நிறைவேற்றம் ; பாலஸ்தீனர்களுக்கு கட்டாய தூக்குத் தண்டனை

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு அனுமதி அளிக்கும் புதிய சட்டமூலம் இஸ்ரேலிய நாடாளுமன்றமான ‘க்னெசட்’ (Knesset) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தீவிர வலதுசாரிக் கட்சியினரால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையானது அவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் வருகை தந்து இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக “ஆம்” (Yes) என வாக்களித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் (West Bank) இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்படும் பாலஸ்தீனர்களுக்கு ‘தூக்குத் தண்டனை’ வழங்குவதை இந்த சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ், இஸ்ரேலிய நீதிமன்றங்கள் தனது சொந்த நாட்டுப் பிரஜைகளுக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க அதிகாரம் பெற்றுள்ளன.

இந்த சட்டம் ஏற்கனவே முடிவடைந்த வழக்குகளுக்குப் பொருந்தாது. இனிவரும் காலங்களில் பதியப்படும் புதிய வழக்குகளுக்கு மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த சட்டமானது இனவாதத் தன்மையுடையது என்றும், மிகவும் கொடூரமானது என்றும் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும், இவ்வாறான தண்டனைகள் தாக்குதல்களைத் தடுக்க உதவாது எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்போது இஸ்ரேலிய உயர் நீதிமன்றத்தில் பல சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *