முச்சந்தி

செங்கடல் வழியும் மூடப்படும் அபாயம்?… ஏமனின் ஹவுதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(உலக பொருளாதாரத்தினை மேலும் சீர்குலைக்கும் வகையில் முக்கிய கடல் வழிப்பாதையான சூயஸ் கால்வாய் செல்லும் செங்கடல் பகுதியில் ஏமனின் ஹவுதிக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே இப்போரால் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதால் உலக அளவில் கச்சாய் எண்ணெய் விலை உயர்ந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது)

வளைகுடாவில் போர் தீவிரம் அடைந்த நிலையில் கச்சாய் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் உலக பொருளாதாரத்தினை சீர்குலைக்கும் வகையில் முக்கிய கடல் வழிப்பாதையான சூயஸ் கால்வாய் செல்லும் செங்கடல் பகுதியிலும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே இப்போரால் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதால் உலக அளவில் கச்சாய் எண்ணெய் விலை உயர்ந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஹவுதிகளின் (Houthi) இந்த நேரடித் தாக்குதல் பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் செங்கடல் பகுதியில் ஹவுதி படை, வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ சூயஸ் கால்வாயை மூடுவதற்கான முயற்சிகளை எடுத்தாலோ அது உலக பொருளாதாரத்தின் நிலைமையை இன்னும் கவலைக்கிடமாக்கி விடும் என்பது தெளிவாகிறது. இது உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் மேலும் பாதிப்பை உண்டாக்கும்.

ஈரானுக்கு ஆதரவாக, ஏமனின் (Yemen) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தற்போதைய பிராந்திய போரில் இணைந்து, இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 2026 மார்ச் பிற்பகுதியில், ஏமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) இடைமறித்தது. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் ஏமனின் ஹவுதி கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் செங்கடல் வழியாக செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கும் இந்த தாக்குதல்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஈரான் ஆதரவு ஹவுதிகள்:

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள் ஏமனின் சனா நகரை 2014 முதல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் (Houthi rebels), காசா போரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லாவுடன் இணைந்து சமீபத்திய மத்திய கிழக்கு மோதல்களில் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

ஹவுதி படைகள் சவுதி அரேபியாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டு, தற்போது செங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து செயல்படுகிறார்கள்.
தொடர்ந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, போரில் நேரடியாக இணைந்துள்ளனர்.

ஹவுதிகள் ஈரானால் ஆதரிக்கப்படும் ஷியா முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஏமனின் சனா மற்றும் பிற முக்கியப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
செங்கடல் மற்றும் பாப் எல்-மண்டேப் கடல்வழிப் பாதையில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு, “அன்சார் அல்லா” (Ansar Allah) என்றும் அறியப்படுகிறது, இது தற்போது பிராந்தியத்தில் ஒரு முக்கிய ராணுவ சக்தியாக வளர்ந்துள்ளது.

அண்மையில் ஹவுதிகளின் தாக்குதலால் பல இஸ்ரேலிய நகரங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏமன் தலைநகர் சனா மற்றும் பிற பகுதியிலிருந்து இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளை இலக்காகக் கொண்டு ஹவுதிகள் ஏவுகணை வீச்சு நடத்தி வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவாகவும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடியாகவும் ஹவுதிகள் இந்த போரில் நேரடியாக இணைந்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய போர் விமானங்கள் ஏமனின் ஹொடைடா (Hodeidah) துறைமுகம் மற்றும் மின் நிலையங்கள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை தாக்கி தகர்த்தன. இந்த பரஸ்பர தாக்குதல்களில் ஹவுதி குழுவின் தலைவர்கள் மற்றும் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமனின் பிரிவுக்கும் – போருக்கும் காரணம் ?

ஏமன் ( Yemen )அதன் வடக்கு மற்றும் தெற்கிற்கும் ஐரோப்பிய காலனித்துவத்தின் பாரம்பரியத்திற்கும் இடையிலான மத மற்றும் கலாச்சார வேறுபாடுகளுடன் நீண்ட காலமாக போராடி வருகிறது. வடக்கில் அமெரிக்கா மற்றும் சவூதி ஆதரவு பெற்ற ஏமன் அரபுக் குடியரசும், தெற்கில் சோவியத் ஆதரவு பெற்ற ஏமன் மக்கள் ஜனநாயகக் குடியரசும் ஒன்றிணைந்து 1990 ஆம் ஆண்டில் நவீன ஏமன் அரசு உருவாக்கப்பட்டது.

1978 முதல் வடக்கு ஏமனை ஆட்சி செய்த ராணுவ அதிகாரி அலி அப்துல்லா சலே புதிய நாட்டின் தலைமையை ஏற்றார். ஆனால் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கும் இடையில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது கடினம், ஏனெனில் இரண்டு இடங்களுக்கு இடையிலான உறவுகள் கடினமாக உள்ளது. ஏமன் அரசாங்கத்தை கவிழ்த்த ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு கூட்டணிக்கு எதிராக போரிட்டு வந்தனர்.

அத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAI) ஆதரவு பெற்ற தீவிரவாத இஸ்லாமிய குழுக்கள் மற்றும் பிரிவினைவாதிகள் உள்ளிட்ட பிற போராளிகளின் தலையீடு, முழு நாட்டையும் சிக்கலாக்கியது.

2018 ஸ்டாக்ஹோம் ஒப்பந்தம் :

இந்த நெருக்கடிக்கு தீர்வாக, ஐ.நா. ஆதரவுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. 2018 ஸ்டாக்ஹோம் ஒப்பந்தம் உதவிக்கான முக்கிய மையமான துறைமுக நகரமான ஹொடெய்டாவில் ஒரு போர் நிறுத்தத்தை உருவாக்கியது. ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு இடையிலான உரசல் போரை நீட்டியதாக கூறப்படுகிறது.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சவூதி எண்ணெய் நிலையங்கள் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றபோது நிலைமைகள் மேலும் மோசமடைந்தன. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை என்று ஐ.நா கண்காணிப்பாளர்கள் முடிவு செய்தனர், அதே நேரத்தில் சவுதி தலைமையிலான கூட்டணி ஈரான் மீது குற்றம் சாட்டியது.

ஏப்ரல் 2022 இல் ஏமனின் புதிய நிர்வாகக் குழு ஹவுதி எதிர்ப்பு படைகளை ஒருங்கிணைக்க உதவியபோது அமைதி முயற்சிகள் வேகமடைந்தன. இது அனைவரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு களம் அமைத்தது.பிற்பகுதியில், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் கூட்டணிப் படைகளும் பல ஆண்டுகளில் தங்கள் முதல் நாடு தழுவிய போர்நிறுத்தத்தை ஒருங்கிணைத்தனர்.

இதன் பின் தலைநகர் சனாவில் இருந்து வணிக விமானங்களை மீண்டும் தொடங்க அனுமதித்தது மற்றும் சில எரிபொருள் கப்பல்கள் ஹொடெய்டாவில் நிறுத்த அனுமதிக்கப்பட்டன. போரிடும் கட்சிகள் பல முறை போர்நிறுத்தத்தை நீட்டித்தன, ஆனால் ஆறு மாத ஒப்பீட்டு அமைதிக்குப் பிறகு, அதை மீண்டும் புதுப்பிக்கத் தவறிவிட்டன. இந்த ஒப்பந்தம் முறிந்ததற்கு ஏமன் அரசும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது மீண்டும் கடுமையான சண்டைக்கு வழிவகுத்து, ஏமனை ஒரு முழு அளவிலான நெருக்கடிக்குள் தள்ளியது.

செங்கடல் பகுதி வர்த்தக கப்பல்கள்

ஹவுதி படையினர் கடந்த 2014 முதல் ஏமன் தலைநகர் சனாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சவுதி அரேபியாவுடன் மேற்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மேற்கு ஆசியா போரில் இருந்து இதுவரை விலகி இருந்த ஹவுதி படையும் தற்போது இணைந்திருப்பது போரை விரிவுபடுத்தி உள்ளது.

காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது செங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு கப்பல் போக்குவரத்து சீர்குலைந்தது. இவ்வழியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் விநியோகம் நடந்து வருகிறது.

நவம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை, ஹவுதிகள் செங்கடல் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வர்த்தக கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கி, 2 கப்பல்களை மூழ்கடித்து, 4 மாலுமிகளைக் கொன்றனர். தற்போது ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி படையும் களமிறங்கியதால் செங்கடல் வழித்தடம் தற்போது மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லெபனானில் ஹிஸ்புல்லா :

லெபனானில் ஈரானுக்கு ஆதரவாக உள்ள லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்தும் இஸ்ரேல் சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற மற்றொரு கிளர்ச்சிப் படையான ஏமனின் ஹவுதி அமைப்பும் போரில் களமிறங்கி உள்ளது.

ஈரானும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், ஏமனில் இருந்து ஹவுதி படை இஸ்ரேல் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகளை ஏவியது. இவை இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹவுதிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர், தெற்கு இஸ்ரேலில் உள்ள முக்கிய இஸ்ரேலிய ராணுவ தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக உறுதிபடுத்தினார்.

இதுதவிர, இஸ்ரேல் மீது தற்போது ஈரானும், ஹிஸ்புல்லாவும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இனி ஹவுதியும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தும். ஏற்கனவே இஸ்ரேலின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி, ஈரான் ஏவுகணைகள் இலக்குகளை தாக்கி வருகின்றன.

இந்த நிலையில் ஹவுதியும் சேரும் பட்சத்தில் இஸ்ரேலுக்கு அது மிகப்பெரிய சிக்கலையும் ஏற்படுத்தும். ஆகவே இந்த போரில் ஹவுதி படை இணைந்திருப்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *