இலங்கை

அமைச்சர் சந்திரசேகரால்;  யாழில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

யாழ்ப்பாண மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவிருக்கின்றோம் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களையும் பிரதேசமட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களையும் பார்க்கின்ற போது அந்தக் கூட்டங்களில் குழப்பமான நிலை ஏற்படுகின்றதே தவிர எந்தவிதமான முடிவுகளும் எடுக்கப்பட்டதாக இல்லை. மக்களுக்கு ஆரோக்கியமான சபைகளாக நிறுவனங்களாக அவை இல்லை என்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

எதற்கும் முன்னோடியாக முன்னுதாரணமாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இருக்க வேண்டும்.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் 18 க்கும்  மேற்பட்ட விடயங்கள் பேசப்பட்டது. ஆனால் பேசப்பட்ட விடயங்கள் வெளியில் வந்திருக்கிறதா? ஊடகங்களில் வந்திருக்கின்றதா? நல்ல விடயங்கள் வெளியில் பேசப்பட்டு இருக்கின்றதா என்று தேடிப்பார்த்தால் அது கிடையாது. இங்கு நடைபெறுகின்ற வாய்ச்சவடால் விடுகின்ற செயற்பாடுகளை மாத்திரம் காணக்கூடிய நிலை காணப்படுகிறது

இங்கு இருக்கின்ற ஊடகவியலாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்வது, யாழ்ப்பாணம் என்பது முக்கியமான மாவட்டம். கல்வியில் முன்னேற்றமான மாவட்டம். சமூக ஒழுங்கு அமைப்பிலும் முன்னேற்றமானது. மாவட்டத்தில் இருக்கின்ற ஊடகவியலாளர்களாகிய உங்களிடம் நாம் கேட்பது அதனுடைய பெருமைகளை மாவட்டத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் விதத்தில் செய்திகளை வெளியிடுங்கள் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில், ஊடகவியலாளர்கள் வருவதற்கும் அறிக்கையிடுவதற்குமான அனுமதி மாத்திரமே இருக்கின்றது.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அந்த விதி இல்லை.இதுவரைக்கும் கடைப்பிடிக்கப்பட்ட அந்த நடைமுறைகளை மாற்றுவதற்கு நாங்கள் தீர்மானிக்கவில்லை. இருந்த போதும் அது ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அதற்காக வேண்டி புகைப்படக் கருவிகளை ஒரிடத்தில் வைத்துவிட்டு அறிக்கையிடுவதற்கு உங்களால் முடியும். அதன் பிறகு இது சம்பந்தமான கூட்டத்தின் முடிவிலே பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி உங்களுக்கு தேவையான கேள்விகளை கேட்டுக்கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும்.

ஊடக நிறுவனங்கள் ஊடாக கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு மாவட்டத்தில் இருக்கின்ற எல்லா ஊடகங்களோடும் தொடர்பில் இருக்கின்றார்களா அவர்களுடைய அங்கத்தவர்களாக இருக்கின்றார்களா என்று கேள்வியும் இருக்கின்றது. அது சம்பந்தமாகவும் நாங்கள் பரிசீலிக்கிறோம். மேலதிகமாக அடுத்த முறையில் இருந்து அதற்கான ஒழுக்க கோவையை தயாரிப்பதற்கு தீர்மானத்துள்ளோம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button