இலங்கை

மத்திய கிழக்குப் போரில் ஹூதி கிளர்ச்சியாளர்கள்; இலங்கைக்கு கடுமையான நெருக்கடிகள் ஏற்படலாம்!;  எண்ணெய் விலையும் உயரலாம்

மத்திய கிழக்கு யுத்தம் மேலும் தீவிரமடைந்து, யேமனின் வடமேற்கு பகுதியையும் சனா நகரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதி அமைப்பினர் மத்திய கிழக்கு போரில் புதிதாக நேரடியாக தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் இலங்கைக்கு பல்வேறு கோணங்களில் கடுமையான தாக்கங்கள் நேரடியாக ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

இதன் பிரகாரம், பாப் அல் மந்தாப் நீரிணை வழியில் ஹூதி அமைப்பினர் போர் களத்திற்கு வருவதால் பல தாக்கங்கள் நமது நாட்டில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நீரிணை என்பது செங்கடல், மத்திய தரைக்கடல், அரேபியக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய அனைத்தையும் இணைக்கும் இடமாக காணப்படுவதனால், இந்த நீரிணை வழியாக நடைபெறும் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும்.

இதனால் எண்ணெய் விலை உயர்வு, கடல் வழி சரக்குகள் போக்குவரத்தில் தாமதங்கள் போன்றன ஏற்படலாம். இதனால் போக்குவரத்து கட்டணம், மின்சார கட்டணம் அதிகரித்து அன்றாட வாழ்க்கைச் செலவுகளும் அதிகரிக்கலாம். பாப் அல் மந்தாப் நீரிணையைத் தவிர்த்துச் செல்ல வேண்டுமெனில் நன்னம்பிக்கை முனையை பாறைக் குடாவைக் (Cape of Good Hope) கடந்து செல்ல வேண்டும். இதனால் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு கட்டணங்கள் அதிகரிக்கும். போர் அபாயக் கட்டணங்கள் கூட அதிகரித்து கடுமையான தாக்கங்கள் ஏற்படும்.

இறக்குமதி செலவுகளும் அதிகரித்து, ஏற்றுமதி இலாப விகிதங்கள் கூட குறையலாம். நமது பொருட்களை வாங்குவோர் வேறு விநியோகஸ்தர்களை தேடுவதால் போட்டித்தன்மை காரணமாக அபாயங்கள் ஏற்படலாம். ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி குறைந்து பணவீக்கம் அதிகரித்து, பொருட்களின் விலைகளும் அதிகரித்து, போக்குவரத்துக் கட்டணங்கள் கூட அதிகரித்து, செலவு சார்ந்த பணவீக்கத்தை நோக்கி நாடு சென்றடையலாம்.

கடல் மார்க்கங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறைவதால் விநியோக சங்கிலிகளும் பாதிக்கப்படலாம். அதிகரித்த இறக்குமதி விலை காரணமாக ஏற்றுமதி வருமானம் குறைவதாலும், நிதி குறைந்து ரூபாவின் மதிப்பு சரியலாம். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், உரம் போன்றவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டு எதிர்மறையான தாக்கம் உண்டாகலாம்.

ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் வணிக பாதையான இதன் வழியாக தினமும் 6-9 மில்லியன் பீப்பாய் எண்ணெயும், 8% LNG (எரிவாயு)உம் கடந்து செல்கின்றன. ஆண்டுதோறும் ஏராளமான கப்பல்கள் இதன் வழியாக சென்று வருகின்றன. இதனால் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகள் அதிகரிக்கலாம். அடிப்படை போக்குவரத்துக் கட்டணங்கள் சுமார் 30% ஆல் அதிகரித்து அனைத்து துறைகளும் பாதிக்கப்படலாம்.

கப்பல் போக்குவரத்துகள் குறைவதால் விநியோக சங்கிலிகளும் பாதிக்கப்படலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நமது நாட்டிலிருந்து செல்லும் ஆடை, தேயிலை போன்றவற்றின் உற்பத்தி செலவும் அதிகரிக்கலாம். இதனால் நமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் குறையும். இறக்குமதி செலவு அதிகரிப்பு காரணமாக அதிக டொலர்களும் எமக்கு தேவைப்படும். ஒட்டுமொத்த நிலைமையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, பொருட்கள் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும்.

அமைதிக் கடல் வலயமான இந்தியப் பெருங்கடல் யுத்த வலயமாக மாறலாம். இதனால் பல்வேறு நாடுகளின் அழுத்தங்கள் ஏற்படலாம். கொழும்பு துறைமுக முனையங்களை பல நாடுகள் கோரியிருப்பது கடுமையான பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளன. இதனால் அணிசேரா கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நேர்மறையான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியப் பெருங்கடல் யுத்த வலயமாக மாறினால் நமது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த ஹூதி தாக்குதல்கள் மூலம் நமது நாடு எதிர்காலத்தில் அதிக செலவுகளை ஏற்க வேண்டியிருக்கும் என்பதால் அரசாங்கம் இதுகுறித்து உடனடி செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்த நீரிணை மூடப்படுவதனால் ஏற்படும் பாதிப்பிற்கு அரசிடம் மாற்று செயற்திட்டம் அமைந்து காணப்பட வேண்டும். அரசாங்கம் இவற்றிற்கு தீர்வுகளை கொண்டிருக்க வேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் செயற்றிட்டமொன்று காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *