உலகம்

ஈரானில் ஆட்சி மாற முன் அமெரிக்காவில் ஆட்சி மாறுமா?; ட்ரம்பை வெளியேறக் கோரி இலட்சக்கணக்கில் திரண்டு அமெரிக்கர்கள் பெரும் போராட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி முறைக்கும் அவரது கொள்கைகளுக்கும் எதிராக அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் பிரம்மாண்டமான போராட்டங்கள் வெடித்துள்ளன. “No Kings” (மன்னர்கள் தேவையில்லை) என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டத் தொடர், இம்முறை மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.

இதற்கு முன்னர் நடைபெற்ற பேரணியில் சுமார் 70 இலட்சம் மக்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுடன் நிலவும் போர் பதற்றம், கடுமையான மத்திய அரசாங்க குடியேற்ற சட்டங்கள் அமல்படுத்தப்படல்,

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு, குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் மினசோட்டா மாகாணத்தில் மத்திய குடியேற்ற அதிகாரிகளால் இரண்டு அமெரிக்கப் பிரஜைகள் கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ட்ரம்ப் தனது நிறைவேற்று அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்தின் சில பிரிவுகளைக் கலைக்க முயல்வதாகவும், தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராகச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள லிங்கன் நினைவிடத்திற்கு அருகிலும், நியூயோர்க்கின் டைம்ஸ் சதுக்கத்திலும் பெரும் திரளான மக்கள் திரண்டனர். இதனால் நியூயோர்க்கின் முக்கிய வீதிகளை மூடுவதற்கு நேரிட்டது. மினசோட்டாவில் நடைபெற்ற பேரணியில் பிரபல பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் கலந்துகொண்டு தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

அத்துடன், போராட்டக்காரர்கள் ட்ரம்ப் மற்றும் பிற அதிகாரிகளின் உருவ பொம்மைகள் மற்றும் பதாகைகளை எடுத்துச் சென்றதுடன் அவர்களை பதவியிலிருந்து நீக்கக் கோரி வேண்டுகோள் விடுத்தனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ மற்றும் ஹூஸ்டன் போன்ற பெருநகரங்களில் மட்டுமன்றி, ஷெல்பிவில் மற்றும் ஹோவெல் போன்ற சிறிய நகரங்களிலும் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதைக் காண முடிந்தது.

ட்ரம்ப் ஒரு “சர்வாதிகார மன்னரைப்” போலச் செயல்பட முயற்சிப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், தான் ஒரு மன்னர் அல்ல என்றும், நாட்டை மேன்படுத்துவதற்கு இத்தகைய கடினமான முடிவுகள் அவசியம் என்றும் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் இந்தப் போராட்டங்களை “ட்ரம்ப் வெறுப்புக்கான சிகிச்சை அமர்வுகள்” (Trump Derangement Sessions) என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு மேலதிகமாக பாரிஸ், லண்டன் மற்றும் லிஸ்பன் போன்ற உலகின் முக்கிய நகரங்களில் வசிக்கும் அமெரிக்கப் புலம்பெயர்ந்தோரும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலங்களை நடத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *