நிலக்கரி மோசடியில் அநுரவும் பங்காளி; சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதி தரமற்ற நிலக்கரி கொள்வனவு மோசடியில் பங்காளியாக உள்ளார் .எனவே வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மீது மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் மின்சக்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
அவிசாவளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற நிலக்கரி மற்றும் அதனால் ஏற்பட்ட நஷ்டங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பல விடயங்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் ஜனாதிபதி அந்த விடயங்களை அலட்சியப்படுத்துகின்றார் .நிலக்கரி விலைமனுகோரலில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை. உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்தே நிலக்கரி கொள்வனவு செய்யப்படுவதாக அவர் நியாயம் கற்பிக்கின்றார்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற நிலக்கரி மோசடி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மீது மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதியும் இந்த மோசடியின் பங்காளியாக உள்ளார். எனவே இந்த மோசடி தொடர்பில் அவரும் பொறுப்புக்கூற வேண்டியது அவசியம்
இறக்குமதிசெய்யப்பட்ட தரமற்ற நிலக்கரி தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பாராளுமன்ற குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் நான்கு பிரதான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 2024.09.21 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி குறிப்பிட்ட விடயங்கள் இன்று அவருக்கே எதிராக திரும்பியுள்ளது. அன்று குறிப்பிட்ட விடயங்களுக்கு ஜனாதிபதி இன்று பதிலளிக்க வேண்டும்.
இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்து அவற்றை பயன்படுத்தியதால் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இயந்திரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டும், இலங்கை மின்சார சபைக்கு நேரடியாக ஏற்பட்டுள்ள நிதி இழப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் எதிர்காலத்தில் மின்விநியோக துண்டிப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட நான்கு பிரதான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது ஜனாதிபதியின் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்துள்ளது. 75 ஆண்டுகால அரசியல் கட்டமைப்பை விமர்சித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊழல் மோசடிகளை முன்னிலைப்படுத்தியே செயற்படுகிறார்கள் என்றார்.
![]()