அமெரிக்கப் படைகள் ஈரானில் களமிறங்குகிறதா?; 10 லட்சம் இராணுவத்தை தயார்படுத்தும் ஈரான்; அதிகளவில் குவியும் இளைஞர்கள்

மத்திய கிழக்கில் மோதல் 4வது வாரமாகத் தொடரும் சூழலில், போர் நிரந்தரமாக முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. இதற்கிடையே அமெரிக்கப் படைகள் நேரடியாக ஈரானில் களமிறங்கினால் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ஈரான் தயார் செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28ம் திகதி ஆரம்பித்த மத்திய கிழக்கு மோதல் 4வது வாரமாகத் தொடர்கிறது. அயத்தொல்லா கமேனியின் மரணத்திற்குப் பிறகு இந்த மோதல் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், போர் முடிவுக்கு வராமல் தொடர்கிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்க பரபரப்பு நிலவுகிறது. சர்வதேச அளவில் பாதிப்புகளும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க டிரம்ப் 10 நாட்கள் போர் நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அதுவரை 10 நாட்கள் தாக்குதல் நடத்தப் போவதில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். அதேநேரம் டிரம்ப் எப்போது என்ன செய்வார் என்பது யாருக்குமே தெரியாது. ஒரு பக்கம் இதுபோல போரை நிறுத்துவதாகச் சொல்லிவிட்டு, மற்றொரு பக்கம் தாக்குதலை ஆரம்பிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
குறிப்பாக இதுவரை ஈரானில் வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே நடந்து வந்த நிலையில், அங்கு அமெரிக்கா நேரடியாகவும் தனது 10,000 படைகளை இறக்கலாம் எனச் தெரிவிக்கப்படுகிறது .
குறிப்பாக, ஈரானின் கார்க் தீவை கைப்பற்றுவதற்காக இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்படுகிறதா என சி.என்.என் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 10 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ஈரான் அணிதிரட்டி வருகிறது. அங்கு ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு மையங்களிலும் அதிகளவில் இளைஞர்கள் குவிந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படைகள் முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்டு போருக்குத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் ராணுவம் என இரண்டிலுமே பொதுமக்கள் ஆர்வத்துடன் திரள்வதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானில் ஒருவேளை அமெரிக்கப் படைகள் களமிறக்கப்பட்டால் அது அவர்களுக்கு வரலாறு காணாத ஒரு நரகத்தை உருவாக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அங்கு ஆயிரக்கணக்கான கடற்படையினர் உள்ள நிலையில், வான்வழிப் பிரிவின் கூடுதல் வீரர்கள் இன்னும் சில நாட்களுக்குள் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டிரம்ப் சொன்னாலும் அதை ஈரான் திட்டவட்டமாக மறுக்கிறது. பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று சொல்லும் ஈரான், அமெரிக்க வீரர்கள் தங்கள் மண்ணில் இறங்கினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதற்காகவே ஈரான் தனது ராணுவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
![]()