அமெரிக்க அழுத்தங்களுக்கு இணங்கி ஈரானிய மாலுமிகளை திருப்பியனுப்ப மறுக்கிறது இலங்கை ; பயிற்சி பெற்ற வீரர்களை போர்க்களம் அனுப்ப மறுப்பது நடுநிலை நகர்வல்ல

ஈரானின் 250க்கும் மேற்பட்ட மாலுமிகளைத் திருப்பி அனுப்புமாறு தெஹ்ரான் விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்து, இலங்கை அவர்களைத் தொடர்ந்து தமது பாதுகாப்பில் தடுத்துவைத்திருக்கிறது. இவ்விடயத்தில் இலங்கை அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இணங்கி நடப்பதைக் காணமுடிகிறது.
இலங்கையின் தீர்மானம் சட்டபூர்வமாக நியாயப்படுத்தக்கூடியதெனினும், போர்க்காலத்தில் பயிற்சி பெற்ற வீரர்களை ஈரானுக்குத் திருப்பியனுப்ப மறுப்பதனை, அதன் விளைவுகளின் அடிப்படையில் நோக்குகையில் எவ்வகையிலும் நடுநிலையான நகர்வாகக் கருதமுடியாது என இந்தியாவின் பிரபல பூகோள அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் பிரம்மா செல்லனே சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த 4 ஆம் திகதி அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பல் நடாத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ் டெனாவில் இருந்து மீட்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட மாலுமிகள் கொக்கல விமானப்படைத்தளத்திலும், ஈரானுக்குச் சொந்தமான ஐ.ஆர்.ஐ.எஸ் புஷேர் கப்பலில் இருந்து கொழும்புத் துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்ட 207 மாலுமிகள் வெலிசர கடற்படை முகாமிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னமும் ஈரானுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படாத நிலையில், இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் பேராசிரியர் பிரம்மா மேலும் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவினால் மூழ்கடிக்கப்பட்ட ஒரு போர்க்கப்பலில் (ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா) இருந்து தப்பியவர்கள் உள்ளடங்கலாக 250 க்கும் மேற்பட்ட ஈரானிய மாலுமிகளைத் திருப்பியனுப்புமாறு தெஹ்ரான் விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்து, அவர்களை இலங்கை தொடர்ந்து தமது பாதுகாப்பில் வைத்திருக்கிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக இந்தியா சுமார் 180 ஈரானிய மாலுமிகளை கடந்த 13 ஆம் திகதி விசேட விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பி அனுப்பிவைத்தது.
1907ஆம் ஆண்டு ஹேக் பிரகடனத்தின் சரத்துக்கு அமைவாக இலங்கை மேற்குறிப்பிட்ட தடுத்துவைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது. இந்த சர்வதேச சட்டத்தின் பிரகாரம் ஒரு நடுநிலை நாடு தனது எல்லைக்குள் நுழையும் போரில் ஈடுபட்டுவரும் நாடுகளின் இராணுவ வீரர்களை, அவர்கள் மீண்டும் போர்க்களத்துக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் காவலில் வைக்கமுடியும்.
ஆனால் இங்கு சட்டம் என்பது கதையின் ஒரு பகுதி மாத்திரமேயாகும். இலங்கையில் இடதுசாரி சார்புடைய ஜனாதிபதி ஆட்சிபீடத்தில் இருக்கும் போதிலும், நிதிநெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் அந்த நாடு அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இணங்கி நடப்பதைக் காணமுடிகிறது. ஈரானிய மாலுமிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் என வொஷிங்டன் இலங்கையிடம் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் இந்தத் தீர்மானம் சட்டபூர்வமாக நியாயப்படுத்தக்கூடியதாகவும், அபாயங்களைக் குறைக்கும் வகையிலான ஒரு தந்திரோபாயமாகவும் அமைந்திருக்கும் போதிலும், போர்க்காலத்தில் பயிற்சி பெற்ற வீரர்களை ஈரானுக்குத் திருப்பியனுப்ப மறுப்பதனை, அதன் விளைவுகளின் அடிப்படையில் நோக்குகையில் எவ்வகையிலும் நடுநிலையான நகர்வாகக் கருதமுடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
![]()