முறையற்ற வெளியுறவுக் கொள்கை மூலம் ஈரானை அவமதிக்கும் இலங்கையின் பதில்கள்

இலங்கை அரசாங்கம் முறையற்ற வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகின்றது என்றும், ஈரான் தூதுவர் கூறிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பதிலளிப்புகள் ஈரான் அரசாங்கத்தை அவமதிப்பது போன்றே அமைந்துள்ளது என்றும் முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,
நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நட்பு நாடுகளை அவமதிக்க மாட்டோம். அதாவது ஈரான் கப்பல் இலங்கையின் அழைப்புக்கமையவே வந்தது என்று ஈரான் தூதுவர் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படைத் தளபதியினால் ஈரான் கடற்படைத் தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படியே அந்தக் கப்பல் இலங்கை நோக்கி வந்துள்ளது. ஆனால் இராஜதந்திர ரீதியில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கூறுகின்றார். ஈரான் தூதுவர் பொய்கூறுவதை போன்றே கூறுகின்றார். ஆனால் அது முற்றிலும் உண்மையாகும்.
இதேவேளை இலங்கை நட்பு நாடு என்றும் நாங்கள் எரிபொருளை வழங்க தயார் என்றும் தூதுவர் கூறியுள்ளார். அதேபோன்று ஹோர்முஸ் ஜல சந்தியில் இலங்கைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் கப்பலுக்கு எவ்வித இடையூறையும் செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஈரானில் இலங்கை பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களை முழுமையாக பாதுகாப்பதாகவும் கூறியுள்ளார்.
பல்வேறு வழிகளிலும் எமது நாட்டுக்கு உதவியளிக்கும் நாட்டை இப்படியா நாங்கள் நடத்துவது.
தூதுவர் கூறுவதை முற்றிலும் பொய்யென நிராகரிப்பதா? அது பொய்யா? அது முற்றிலும் உண்மையே. நாங்கள் அந்த நாடுகளிடம் உதவி கேட்கும் போது அவர்கள் பதிலளிக்கும் போது, அதனை நிராகரிப்பது அறிவுபூர்வமான வெளியுறவுக் கொள்கை அல்ல. வெளியுறவுக்கொள்கைகளை முறையாக முன்னெடுக்க வேண்டும். இது வெளியுறவுக்கொள்கையை சரியாக பேணுவது அல்ல. ஈரான் அரசாங்கத்தை அவமதிப்பதாகும். ஈரான் அரசாங்கத்தின் உயர் மட்ட பிரதிநிதியாகவே இலங்கையிலுள்ள தூதுவர் இருக்கின்றார். அவருக்கு கன்னத்தில் அறைந்ததை போன்று இவ்வாறு செய்யக் கூடாது என்றார்.
![]()