பலதும் பத்தும்

வாகனம் ஓட்டிய தங்கமீன்; கின்னஸில் புதிய மைல்கல்

மீன்கள் பொதுவாகத் தொட்டியில் நீந்துவதைத்தான் பார்த்திருப்போம். ஆனால், ‘பிளப்’ (Blub) என்ற ஒரு தங்கமீன், தனக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாகனத்தை ஓட்டிச் சென்று உலக சாதனை படைத்துள்ளது.

கணினி பொறியாளரான தோமஸ் டி வுல்ப் (Thomas de Wolf) என்பவரால் உருவாக்கப்பட்ட, அசைவுகளைக் கண்டறியும் (Motion-sensing) பிரத்யேக வாகனத்தின் மூலமே இந்த வினோத சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இத்தாலியில் நடைபெற்ற ‘லோ ஷோ டெய் ரெக்கார்ட்’ (Lo Show dei Record) என்ற நிகழ்ச்சியில், கின்னஸ் நடுவர் சோபியா கிரீனாக்ரே முன்னிலையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

வாகனத்தின் மீதுள்ள தண்ணீர் தொட்டிக்குள் மீன் நகரும் திசையைக் கண்டறிந்து, அதற்கேற்ப சக்கரங்கள் இயங்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு நிமிடத்தில் குறைந்தபட்சம் 5 மீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ‘பிளப்’ 60 வினாடிகளில் 12 மீற்றர் (40 அடி) தூரத்தைக் கடந்து அசத்தியுள்ளது. வாகனம் வெவ்வேறு திசைகளில் நகர்ந்ததால், சக்கரங்களில் உள்ள வண்ணக் குறிகள் தரையைத் தொட்ட எண்ணிக்கையை வைத்து தூரம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டது.

இந்த வினோத முயற்சி குறித்துத் தோமஸ் டி வுல்ப் கூறுகையில், “எனது வேலை பொதுவாக சலிப்பானதாக இருக்கும். எனவே, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை மகிழ்விக்கும் வகையில் எதையாவது உருவாக்க விரும்பினேன்.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதைக் காட்டுவதே எனது நோக்கம்” எனத் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *