இலக்கியச்சோலை

நூல் விமர்சனம்…. ‘கனகர் கிராமம்’… டெ.க.அரவிந்தராஜ்

நூல் : கனகர் கிராமம்
ஆசிரியர் : செங்கதிரோன் (த. கோபாலகிருஷ்ணன்)
பக்கங்கள் : 654

தலைப்பிலே குறிப்பிடப்பட்டிருப்பதுபோல இது ஒரு அரசியல் சமூக வரலாற்று நாவல். குறிப்பாக கிழக்கு மாகாண வரலாற்று ஆவணம் என்றும் சொல்லலாம்.

அதிலும் அம்பாறை மாவட்ட பொத்துவில் கிராமத்தை மையப்படுத்தி அந்த மக்களின் வாழ்வியல், கலாசாரம், பண்பாடு, பிரச்சனைகள், அரசியல் என்று ஒரு ஆழமான அலசலாக இந்நூல் அமைகின்றது.

நூலாசிரியரின் நோக்கம் மிகத் தெளிவானது. கிழக்கின் வாழ்வியலை அல்லது அவர்களின் அரசியல் உணர்வுகளை ஆவணப்படுத்த வேண்டும். அத்துடன் எவ்வாறு அம் மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்ற தன்னுடைய கருத்தை வரலாற்றுரீதியான ஆதாரங்களின் துணைகொண்டு மிக ஆணித்தரமாக எடுத்துரைக்க வேண்டும். அதை நேரடியாக ஒரு கட்டுரை பாங்கில் கூறாமல் கதை மாந்தர்களின் ஊடாக ஒரு நாவலாகவே வடித்துள்ளார். அதுவே இந்த நீண்ட நூலை வாசிப்பதற்கும் புரிந்து கொள்வதற்குமான ஒரு தூண்டலாக அமைகின்றது. அந்த முயற்சியில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார் என்று உறுதியாகக் கூறலாம்.

இந்நூல் தொடர்பான ஆசிரியரின் வரலாற்றுப் பார்வைக்கு நிச்சயமாக எதிரான கருத்துக்கள் இருக்கும். ஆனால் கிழக்கின் அரசியல் சிக்கல்கள் மற்றும் உணர்வுகள் தொடர்பான புரிதலிற்காக அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. கதை கோகுலன் என்ற மையக் கதாபாத்திரத்தைச் சுற்றி அவனது நினைவுகளின் மீட்டலாக அமைகின்றது. அந்தக் கோகுலன்தான் நூலாசிரியர் என இந்த நூலின் அறிமுகக் கூட்டத்தில் தெரிந்து கொண்டேன்.

மக்கள் கலை இலக்கியப்பேரவை யூலை 3, 4, 2026 திகதிகளில் யாழ்ஃபுனித பத்திரிசியார் கல்லூரியில் (சென்.பற்றிக்ஸ்) நடாத்திய ‘புத்தக அரங்கவிழா’ – ஈழத்து நூல்களை அறிவோம், நூல்களின் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வில், யூலை 4 சனிக்கிழமையன்று ‘கனகர்கிராமம்’ அரசியல் சமூக வரலாற்று நாவலினை கலாநிதி ந.இரவீந்திரன் (ஓய்வுநிலை விரிவுரையாளர், தேசிய கல்வியற் கல்லூரி) அவர்கள் அறிமுகம் செய்திருந்தார்.

No photo description available.

நாவலினுடைய முதற்பாகம் கதிர்காம பாதயாத்திரை பற்றிப் பேசுகிறது. கதிர்காமக் கந்தனுடைய திருவிழா ஒரு பள்ளிவாசலில் கொடியேற்றத்தோடு ஆரம்பமாகிறது என்பது எனக்குப் புதிய தகவல். இவ்வாறு ஏராளமான தகவல்கள் இந்த நூலெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. இன முரண்பாடுகளுக்கு முன் எவ்வாறு அனைவரும் ஒன்றாக இருந்தார்கள் என்றும் இன முரண்பாடுகள் ஏன் உருவாக்கப்பட்டன என்றும் தவறுகள் யாருடைய பக்கத்தில் உள்ளன என்றும் வெவ்வேறு தரப்பினரின் நியாயப்படுத்தல்களை இங்கு காணலாம்.

நூலை வாசித்தபோது கதிர்காம யாத்திரையில் நானும் சேர்ந்து நடந்ததைப் போன்ற உணர்வைப் பெற்றேன்.

நாவலுடைய இரண்டாவது பாகம் இலங்கையின் கட்சி அரசியலைப் பற்றிப் பேசுகிறது. அத்துடன் யாழ் மைய வாதம், பெரும்பான்மை அரசியல், தமிழ் முஸ்லிம் உறவு, கல்லோயா குடியேற்றம், அதில் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தூர நோக்கற்ற மற்றும் சுயநலமான செயற்பாடுகள் என்று விரிந்துகொண்டே செல்கின்றது. பல இடங்களில் தகவல்கள் ஒரு கட்டுரைப் பாணியில் வருகின்றன. அவை நாவலின் இலக்கிய நடையை விட்டு விலகி இருந்தாலும் ஆசிரியரின் நோக்கிற்கு அவை வலுச்சேர்க்கின்றன. ஆனால், என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் அந்தத் தகவல்கள் மிகவும் பயனுடைவையாகவும், சுயாதீனமான தேடலுக்கும், உறுதிப்படுத்தலுக்கும் வழி சமைத்தவையாக இருந்தன. குறிப்பாகச் சொல்லப்பட்ட நூல்கள் சிலவற்றை எதிர்கால வாசிப்புக்காகக் குறித்துக் கொண்டேன்.

நூலினுடைய இன்னொரு சிறப்பம்சம் கிழக்கின் வழிபாட்டு முறைகள் மற்றும் உணவு முறைகளை அறிமுகப்படுத்தியமையாகும்.

அதேபோல கிழக்கிற்கே உரிய சில பழமொழிகளையும் தெரிந்து கொண்டேன். “ஊரார் சோத்துக்குள்ள நாம மாங்காயப் போட்டுப் பினையப்படாது”

கிழக்கிலங்கையின் விசேடமாகப் பொத்துவில் பகுதியின் அரசியல், சமூக, வரலாற்றை அறிய விரும்பும் எவரும் தவறாது வாசிக்க வேண்டிய ஒரு அருமையான புத்தகம். அரசியலில் இருப்போர், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கின்றேன்.

நூலை அறிமுகப்படுத்திய “புத்தக அரங்க விழா” ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *