கண்ணுக்குள் உயிருடன் நெளிந்த 11 புழுக்கள்

71 வயது விவசாயி ஒருவரின் இரு கண்களிலும் 11 உயிருள்ள ஒட்டுண்ணிப் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கண்புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற அவரைப் பரிசோதித்தபோதே இந்தப் புழுக்கள் இருப்பது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட விவசாயிக்குச் சுமார் இரண்டு மாதங்களாக இரு கண்களிலும் சிவப்பு நிறம், மங்கலான பார்வை மற்றும் கண்ணுக்குள் ஏதோ சிக்கியிருப்பது போன்ற உணர்வு இருந்துள்ளது. இதற்காக அவர் தென்கொரியாவிலுள்ள ‘காங்வான்’ தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்குச் சென்றபோது, மருத்துவர்கள் அவரது கண்களை நுணுக்கமாகப் பரிசோதித்தனர்.
அப்போது இமைகளுக்கும் விழிகளுக்கும் இடையிலான பகுதியில் சிறிய உயிரினங்கள் நகர்வதைக் கவனித்த மருத்துவர்கள், உடனடியாக உள்ளூர் மயக்க மருந்து செலுத்தி, அவரது கண்களிலிருந்த புழுக்களைக் கவனமாக அகற்றினர். அவரிடமிருந்து மொத்தம் 11 உயிருள்ள, ஒளிபுகும் தன்மை கொண்ட புழுக்கள் அகற்றப்பட்டன. அவை ஒவ்வொன்றும் சுமார் 11 முதல் 20 மில்லிமீட்டர் நீளம் கொண்டிருந்தன.
அவற்றை நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தபோது, அவை ‘தெலாசியா கலிபீடா’ (Thelazia callipaeda) எனப்படும் உருளைப் புழுக்கள் என்பது தெரியவந்தது. இவை பொதுவாக நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் கண்களில் காணப்படும் ஒட்டுண்ணிகளாகும்.
அரிதாகவே இவை மனிதர்களைப் பாதிக்கின்றன. அகற்றுப்பட்ட சில பெண் புழுக்களின் உடலில் கருவுற்ற முட்டைகளும், வளர்ந்து கொண்டிருந்த இளம் புழுக்களும் இருந்ததால், அவை அந்த விவசாயியின் கண்களிலேயே சில காலமாக உயிர்வாழ்ந்து இனப்பெருக்கம் செய்து வந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட வகை ஈக்கள் மூலம் பரவும் இந்த ஒட்டுண்ணிகள், பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது மனிதர்களின் கண்ணீரை உறிஞ்சும்போது கடத்தப்படுகின்றன. இந்தத் தொற்றால் கண் சிவத்தல், எரிச்சல், தொடர் கண்ணீர் வடிதல் மற்றும் மங்கலான பார்வை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எனினும், 11 புழுக்களும் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு அந்த விவசாயியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர் பரிசோதனைகளில் மீண்டும் புழுக்கள் எதுவும் தென்படவில்லை எனவும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
![]()