முச்சந்தி

அருச்சுனா எம்.பி. உட்பட 6 பேரை நவம்பர் 16-ல் மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜராக்குமாறு உத்தரவு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் குறித்து அவதூறாகச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ. தர்ஷினி முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா உட்பட 6 பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மீது முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பதிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம் மற்றும் சில யூடியூப், முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, குறித்த 6 பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவுகளை எழுதுவதற்கு கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்ததுடன், எதிராளிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தது. அதற்கமைய, தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், இம்முறை வழக்கு விசாரணை இன்று (02) எடுத்துக்கொள்ளப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றில் ஆஜராகினர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம் ஆகியோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கியாஸ் ஹிஸ்புல்லா தலைமையில் சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகினர்.

இவ்வேளையில், சில எதிர் தரப்பினர் நீதிமன்றில் காரணம் காட்டுவதற்கான அவகாசம் கோரியிருந்தனர். இதனிடையே, 5ஆவது எதிராளியான அஹமட் லெப்பை முகமது முத்தாருக்கு நீதிமன்ற அழைப்பாணை கிடைக்கப்பெறாவிட்டாலும், அவர் தாமாகவே முன்வந்து நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். மேலும், நீதிமன்றின் நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளைக்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும், அதற்கமைய தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் அவரது தரப்புச் சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

இதையடுத்து, எதிர்வரும் 16ஆம் திகதிக்குள் உரிய காரணங்களைக் காட்டுமாறு பணித்த நீதவான், வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக வழக்காளியான வைத்தியர் சுகுணன் தரப்பில் சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *