இலங்கை

உள்ளூர் பொய்யர் ஜனாதிபதி சர்வதேசப் பொய்யரானார்; நாட்டை பாரிய சிக்கலுக்குள் தள்ளிவிடும் ஆபத்தான நிலை

ஈரானுக்குச் சொந்தமான மூன்று கப்பல்களுக்கும் இலங்கையே அழைப்பு விடுத்ததாக ஈரான் தூதுவர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதியின் பொய் அப்பலமாகியுள்ளது. ஜனாதிபதி தேசிய மட்டத்தில் பொய் சொல்லிவந்த நிலையில் தற்போது சர்வதேச ரீதியில் பொய் சொல் ஆரம்பித்திருக்கிறார். இது எம்மனைவரையும் பாரிய சிக்கலுக்கு தள்ளிவிடும் நிலையாகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து, தற்போதைய யுத்த நிலைமையில் பொய் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி எங்களை பார்த்து தெரிவித்தார். ஆனால் ஈரான் தூதுவர் நேற்று (நேற்று முன்தினம்) செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி, ஈரான் கப்பல் மூன்றுக்கும் இலங்கையே அழைப்பு விடுத்ததாக பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அப்படியானால் யார் பொய் சொல்வது என்பது தெளிவாகிறது.

ஜனாதிபதி தேசிய மட்டத்தில் பொய்சொல்லிவந்த நிலையில் தற்போது சர்வதேச ரீதியில் பொய் சொல் ஆரம்பித்திருக்கிறார். பொய் சொல்லி நாட்டு மக்களை ஏமாற்ற முடியும். ஆனால் சர்வதேசத்துக்கு பொய் சொல்லி அவர்களை ஏமாற்ற முடியாது. அவ்வாறு செயற்பட்டால் நாங்கள் அனைவரும் அதற்கு முகம்கொடுக்க நேரிடும். அதனால் நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் ஜனாதிபதி சர்வதேசத்துடன் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து, ஈரான் கப்பல் விவகாரம் தொடர்பில் கதைத்த மறுதினமே ஈரான் தூதுவர் செய்தியாளர் சந்திப்பை நடத்தி இந்த விடயங்களை வெளிப்படுத்தி இருந்தார். ஜனாதிபதி இது தொடர்பில் கதைக்காமல் இருந்தால். ஈரான் தூதுவரும் இந்த விடயம் தொடர்பில் கதைத்திருக்க மாட்டார். நாங்கள் அழைத்துதான் ஈரான் கப்பல் எமது நாட்டுக்கு வந்திருந்தால், அதனை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பில் இருந்து அரசாங்கத்துக்கு மீள முடியாது. என்னை பொறுத்தவரை, அரசாங்கத்தின் பிழையான தீர்மானத்தால், ஈரான் கப்பலுக்கு ஏற்பட்ட சம்பவத்துக்காக நாங்கள் எமது கவலையை தெரிவித்திருக்க வேண்டும். ஈரானுக்கு இவ்வாறான அசம்பாவிதம் ஏற்பட்ட பின்னரும் எமது நாட்டுக்கு எரிபொருள் வழங்க தயார் என தூதுவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த யுத்தத்தில் நாங்கள் நடுநிலை வகிப்பதாக ஜனாதிபதி தெரிவிக்கிறார். ஆனால் ஜனாதிபதியின் நடுநிலை தன்மையை ஈரான் தூதுவர் தற்போது வெளிப்படுத்தி இருகிறார். ஜனாதிபதி தொடர்ந்தும் பொய் சொல்லி வருகிறார்.

ஜனாதிபதி இறுதியாக கடந்த 5ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி இருந்தார். அதில் மார்ச் மாதம் 9 மற்றும் 13ஆம் திகதிகளில் ஈரான் கப்பல் நாட்டுக்குள் வர பெப்ரவரி 26ஆம் திகதி அனுமதி கேட்டிருந்ததாகவும் அது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதன்போது அவர் அமெரிக்காவும் கப்பல் ஒன்றை கொண்டுவர அனுமதி கேட்டதாக தெரிவிக்கவில்லை. அதேநேரம் நிராகரித்ததாகவும் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஜனாதிபதி அதன் பின்னர் 15 நாட்களுக்கு பின்னரே பாராளுமன்றத்துக்கு வந்து, அமெரிக்காவும் எங்களிடம் கப்பல் கொண்டுவர அனுமதி கேட்டது, ஈரானும் அனுமதி கேட்டிருந்தது. நாங்கள் இரண்டு தரப்பின் கோரிக்கைகளையும் நிராகரித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். இந்த விடயத்தை தெரிவிப்பதற்கு ஜனாதிபதிக்கு 15 நாட்கள் சென்றுள்ளன. அதுவரை தெரிவிக்கவில்லை. 5ஆம் திகதிக்கு பின்னரும் ஜனாதிபதி ஊடக சந்திப்பொன்றை நடத்தி இருந்தார். அப்போதும் இந்த தகவலை அவர் தெரிவித்திருக்கவில்லை. அதனால் ஜனாதிபதி கதைகளை ஏன் அடிக்கடி மாற்றுகிறார் என்பது எமக்கு புரியாமல் இருக்கிறது.

அத்துடன் ஈரான் கப்பல் இந்தியாவில் பயிற்சியை முடித்துக்கொண்டு வரும்வழியில் வருவதற்கே அனுமதி கேட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்கா யுத்தம் செய்வதற்கு தனது யுத்த விமானத்தை மத்தள துறைமுகத்துக்கு கொண்டுவரவே அனுமதி கேட்டிருக்கிறது. இந்த கோரிக்கைகள் இரண்டும், இரண்டு வகையானவையாகும். ஆனால் ஜனாதிபதி இந்த இரண்டு கோரிகைகளையும் ஒன்றாக இணைத்து ஜனாதிபதி அழகிய கதை ஒன்றை தெரிவித்து, தான் நிடுநிலையாக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் ஈரான் கப்பல் இலங்கையின் அழைப்பிலே வந்ததாக ஈரான் தூதுவர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் ஜனாதிபதி எவ்வாறு நிடுநிலை வகிப்பதாக தெரிவிக்க முடியும்? ஏனெனில்,கட்டார் மீது தாக்குதல் இடம்பெற்றபோது அதன் அமீருடன் ஜனாதிபதி கதைத்திருக்கிறார். ஐக்கிய இராஜ்ஜிய அமீருடன் கதைத்திருக்கிறார். ஆனால் ஜனாதிபதி ஈரானுடன் கதைத்தாரா? குறைந்தபட்சம் ஈரான் தூதுவரை அழைத்து விடயங்களை கேட்டறிந்தாரா?. ஈரான் எங்களுக்கு உதவி செய்துவரும் நாடு. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் எரிபொருள் கொள்வனவு செய்தமைக்காக நாங்கள் 250 மில்லியன் டொலர் இன்னும் கடன் செலுத்தாமல் இருக்கிறோம். ஜெனிவா மனித உரிமை பேரவையில் எமக்கு ஆதரவளித்த நாடு. எமது நாட்டில் அதிகமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு, அதனை நன்கொடையாக வழங்கி நாடு. எமது நாட்டின் தேயிலையை அதிகம் பெற்றுக்கொள்ளும் நாடு.

இதனால், ஜனாதிபதி குறைந்த பட்சம் ஈரான் தூதுவரை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து அங்குள்ள நிலைமைகளை கேட்டரிந்தாரா? அவ்வாறு இருக்கையில் எவ்வாறு ஜனாதிபதி இந்த யுத்தத்தில் தான் நடுநிலை என தெரிவிக்க முடியும் ? அதனால் ஜனாதிபதி தேசிய மட்டத்தில் பொய் சொல்லிக்கொண்டு, தற்போது சர்வதேச ரீதியில் பொய் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இது எம்மனைவரையும் பாரிய சிக்கலுக்கு தள்ளிவிடும் நிலையாகும். ஜனாதிபதி யாருடைய பக்கத்தையும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மாறாக இந்த யுத்தம் வேண்டாம் என்றுகூட தெரிவிப்பதற்கு இந்த அரசாங்கத்துக்கு தைரியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *