இலங்கை

அரசுக்கு எதிராகமே 22 இல் பேரணி – மொட்டுக் கட்சி அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக, எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை மே மாதம் முதலாம் திகதி வெசாக் தினமாக அமைவதனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மே தின ஊர்வலங்களை நடத்தப் போவதில்லை. அதற்குப் பதிலாக, உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு ஆசீர்வாதம் வேண்டி நாடு தழுவிய ரீதியில் விசேட ஆசீர்வாத பூஜைகளை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் முறையற்ற நிர்வாகத்தினால் மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மே மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் மக்கள் போராட்டத்தை நாம் முன்னெடுப்போம். இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள், இன்று தமது தீர்மானத்திற்காகப் பெரிதும் வருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் மார்ச் மாத காலப்பகுதிக்குள் அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரித்தமையானது பொதுமக்கள், வர்த்தக சமூகம், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்று முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

“உலகில் நிலவும் யுத்தச் சூழலை விட, தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகள் நிலவியபோது, சினோபெக் மற்றும் ஷெல் போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், சிபெட்கோ நிறுவனத்தின் விலைகளை அரசாங்கம் முறையாக நிர்வகித்தது.

அன்று தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலைகளை உயர்த்த இடமளிக்கப்படவில்லை. ஆனால் இன்று அரசாங்கம் திட்டமிட்டே மக்களைப் பாதிப்புக்குள்ளாக்குவதுடன், தனியார் நிறுவனங்களின் விலை நிர்ணயத்தில் தலையிடாமல் ஒதுங்கியிருக்கின்றது.

சிங்கப்பூர் சந்தை விலைக்கு ஏற்பவே எரிபொருள் விலை மாற்றப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுவது முற்றிலும் அப்பட்டமான பொய்யாகும்.

தரையிறக்கும் செலவு மற்றும் ஏனைய செலவுகளைப் பொய்யாகக் காட்டி அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகின்றது. உலக சந்தை நிலவரப்படி இதைவிடக் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியும்.

கடந்த ஆறு மாதங்களாக உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் எவ்விதமான திட்டமிடலும் இருக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

டொலர் மதிப்பு இரண்டு ரூபாவால் மட்டுமே அதிகரிக்கும் என ஜனாதிபதி ஒருபுறம் கூற, மறுபுறம் எரிபொருள் விலைகள் நூற்றுக்கணக்கில் உயர்த்தப்படுகின்றன. நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற பாரிய ஊழல் காரணமாகவே இன்று டீசல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஊழல் செய்த அமைச்சர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மக்கள் மீது சுமை ஏற்றப்படுகின்றது.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *