உலகம்

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கடைசி சில மணித்தியாலங்கள்…

மத்திய கிழக்கின் அரசியல் சூழல் 2026 மார்ச் 22 அன்று மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு விடுத்த மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கையையடுத்தே இந்த நிலை உருவாகியுள்ளது.

மூன்று வாரங்களாக நீடிக்கும் போர் மோதல்களினால் பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தை கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள தருணத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 21 சனிக்கிழமை அன்று GMT நேரப்படி 23:44 மணிக்கு தனது ‘Truth Social’ கணக்கில் பதிவொன்றை வெளியிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகின் தீர்மானமிக்க எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை எந்தவித அச்சுறுத்தலுமின்றி உடனடியாக திறக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

திங்கட்கிழமை (இன்று – 23 ஆம் திகதி) இரவுடன் நிறைவடையும் இந்த 48 மணித்தியால காலக்கெடுவுக்குள் ஈரான் இதற்கு இணங்காவிட்டால், அந்நாட்டின் எரிசக்தி கட்டமைப்பை முழுமையாக அழிப்பதாக அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக, ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து ஆரம்பித்து அவர்களின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை தரைமட்டமாக்குவதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வார இறுதியில் ஈரான் நடத்திய முன்னோடியில்லாத ஏவுகணைத் தாக்குதல்களே இந்தத் தீர்மானத்திற்குக் காரணமாகின. ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் டிமோனா (Dimona) அணு ஆராய்ச்சி மையத்திற்கு அருகிலும், அராட் (Arad) நகரிலும் விழுந்து வெடித்தன. இதில் 180-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கூட தம்மால் தகர்க்க முடியும் என்பதை ஈரான் இதன் மூலம் நிரூபித்தது.

அத்துடன், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானிய இராணுவத் தளமான டியாகோ கார்சியா (Diego Garcia) மீது சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் பாயக்கூடிய நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதலை நடத்தவும் ஈரான் முயற்சித்தது. இது ஈரானின் தாக்குதல் எல்லை விரிவடைந்துள்ளதைக் காட்டும் பலமான சமிக்ஞையாக அமைந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையினால் பின்வாங்காத தெஹ்ரான் நிர்வாகம், பதிலுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அமெரிக்கா ஈரானின் மின் நிலையங்களைத் தாக்கினால், மத்திய கிழக்கு முழுவதும் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை முழுமையாக அழிப்பதாக ஈரான் கூறியுள்ளது. எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடியாக பாரசீக வளைகுடா பகுதி முழுவதும் கடல் கண்ணிவெடிகளை (sea mines) விரித்து, கப்பல் போக்குவரத்தை முற்றாக முடக்குவோம் என்றும் எச்சரித்துள்ளது.

ஈரானிய இராணுவமும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஈரானிய இராணுவப் பேச்சாளர் இப்ராஹிம் சொல்ஃபகாரி (Ebrahim Zolfaghari)  (22) எச்சரிக்கை விடுக்கையில், ட்ரம்ப் ஒரு “பயங்கரவாத ஜனாதிபதி” என்றும், அமெரிக்கா தனது அச்சுறுத்தலைச் செயல்படுத்தினால், சேதமடைந்த ஈரானிய மின் நிலையங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் வரை ஹோர்முஸ் நீரிணை ஒருபோதும் திறக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேலின் அனைத்து மின் நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து பாரிய தாக்குதல்களை நடத்துவதோடு, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பங்குரிமை கொண்ட அனைத்து நிறுவனங்களையும் அழிப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், ஈரானுடனான போர்ச் சூழலுக்கு நிதியளிக்க வொஷிங்டனிடம் முழுத் திறன் உள்ளதாகவும், அதற்காக வரிகளை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்றும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், உலகம் தற்போது பெரும் நிச்சயமற்ற தன்மையில் உள்ளது.

இதற்கிடையில், கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 112 டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், சந்தையில் கடும் தளம்பல் நிலை காணப்படுகிறது. சுமார் 1,000 கப்பல்களும் 20,000 மாலுமிகளும் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆயிரக்கணக்கான அமெரிக்க மெரைன் சிப்பாய்கள் பிராந்தியத்தை வந்தடைந்து கொண்டிருப்பதுடன், இஸ்ரேல் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில்,  (24) சூரிய உதயம் எத்தகைய விளைவுகளுடன் விடியும் என்பதை எவராலும் ஊகிக்க முடியாமல் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *