இலங்கை

எரிபொருள் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டதால் விண்ணை முட்டப் போகும் விலை உயர்வு!; அப்பாவி மக்கள் பெரும் திண்டாட்டத்தில்

எரிபொருள் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள், சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்கள் பெருமளவில் உயர்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் , டீசல் மற்றும் மண்ணெண்ணை விலைகள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் அதிகரிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 10ஆம் திகதியும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. இதன்படி கடந்த 10 நாட்களில் ஒரு லீட்டர் 92 ரக ஒக்டேன் பெட்ரோலின் விலை 105 ரூபாவினாலும், ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 115 ரூபாவினாலும் ஒட்டோ டீசலின் விலை 101 ரூபாவாலும் சுப்ப டீசலின் விலை 114 ரூபாவாலும், மண்ணெண்ணெய் விலை 73 ரூபாவாலும் அதிகரித்துள்ளன.

எரிபொருள் விலைகள் இவ்வாறாக அதிகரித்துள்ள நிலையில் இதற்கு சமாந்திரமாக பொருட்கள், சேவைகளின் விலைகளும் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக எரிபொருள் விலை அதிகரிப்புக்கு சமாந்திரமான கொள்கலன் வாகன போக்குவரத்து கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கு கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் கோட்டா முறையால் பல்வேறு நெருக்கடிக்குள் கொள்கலன் உரிமையாளர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் விலை அதிகரிப்பால் மேலும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் இதனால் தாம் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக கொள்கலன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொழும்பு உள்ளிட்ட இடங்களில் மொத்த வியாபார நிலையங்களில் இருந்து தூர இடங்களுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறி உரிமையாளர்களும் மரக்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகன உரிமையாளர்களும் தமது கட்டணத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளனர். இவ்வாறான நிலைமையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கப்படலாம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பஸ் கட்டணங்களை 15 வீதத்தால் அதிகரிப்பதற்கு பஸ் சங்கங்கள் முயற்சித்து வருவதுடன், ஆட்டோக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கம் தயாராகி வருகின்றது. இதன்படி முதலாவது கிலோ மீற்றருக்காக தற்போது அறவிடப்படும் 100 ரூபா கட்டணத்தை 120 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு அந்த ஆட்டோ உரிமையாளர்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று பாடசாலை போக்குவரத்து சேவை வான் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட சங்கங்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன. 500 ரூபா முதல் 1000 ரூபா வரையிலான தொகையில் கட்டணங்களை அதிகரிப்பதற்கு பாடசாலை போக்குவரத்து சேவை சங்கங்கள் எதிர்பார்த்துள்ள போதும் ஏப்ரல் விடுமுறையின் பின்னர் இது தொடர்பில் ஆராய்ந்த முடிவெடுப்பதற்கு அந்த சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அத்துடன் தூர இடங்களுக்கான வாடகை வாகன கட்டணங்கள் மற்றும் ஏனைய போக்குவரத்து சேவை கட்டணங்கள் என்பனவும் குறிப்பிட்டளவில் உயரும் நிலைமையே காணப்படுகின்றது.

இதேவேளை எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து அதிகரிக்கப்படும் விலைகள் மற்றும் கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கம் முறையான அவதானங்களை செலுத்தி முறையற்ற வகையிலான அதிகரிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முறைமைகளை தயாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *