முச்சந்தி
அரபு நாடுகளுடன் முரண்படும் ஈரான்!… மத்திய கிழக்கின் வரலாற்று பகை… ஐங்கரன் விக்கினேஸ்வரா

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் இப்போது இடி முழக்கங்களாக மாறியுள்ளன. ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் அமெரிக்காவும், ‘ரோரிங் லயன்’ (Roaring Lion) என்ற பெயரில் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளைத் தாக்கி அழித்து வருகின்றன. முதல் நாள் தாக்குதலிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
வளைகுடாவும் ஹர்மூஸ் நீரிணையும்:
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையின் போக்குவரத்தை ஈரான் தொடர்ந்து கட்டுப்படுத்தி கண்காணித்து வருகிறது. ஈரானின் அச்சுறுத்தல் நீடித்தால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் முற்றாகச் சிதைந்துவிடும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

ஹர்மூஸ் நீரிணை ஈரானின் ஆளுகையில் உள்ளவரை வளைகுடாவில் உள்ள அமெரிக்க ஆதரவு அரபு நாடுகளால் ஈரானுக்கு எதிராக தாக்குப் பிடிக்கவே முடியாது. ஹர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) என்பது ஈரானுக்கு ஆயிரம் அணு குண்டுகளின் பலத்தை விட பலமடங்கு ஆபத்தான ஆயுதமாகும்.
இன்று அரேபிய வளைகுடாவில் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. அமெரிக்க பாதுகாப்பை நம்பி இருந்த நாடுகள் அனைத்தும் பாரிய தாக்குதல்களை எதிர்கொண்டு நிற்கும் நாடுகளாகவே உள்ளது. எவ்வளவு தான் இந்த வளைகுடா நாடுகளில் எல்லாம் கச்சா எண்ணெய் பெற்றோலியம் எரிவாயு என நிரம்பி இருந்த போதிலும் அது உலக சந்தைக்கு செல்ல வேண்டுமானால் ஈரானை கடந்துதான் போக வேண்டும். இல்லையேல் அவர்கள் உற்பத்தியை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது.
அரபு நாடுகள் ஏன் இலக்காகின?
கத்தாரில் அல் உதைட் விமான தளம் (Al Udeid Air Base) அமெரிக்காவின் மத்திய கிழக்கிற்கான பிரதான தளமாக அமைந்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (துபாய்- அபுதாபி) அல் தஃப்ரா தளம் உள்ளது. பஹ்ரைன் நாட்டில் அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம் அமைந்துள்ளது.
துபாய், அபுதாபி, கத்தார் போன்ற நாடுகள் ஈரானுடன் நேரடியாகப் போரிடவில்லை. இருப்பினும் இந்த நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த நாடுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளங்கள் உள்ளன என்பதே முக்கிய காரணமாகும்.
தங்கள் மீதான தாக்குதலுக்கு இந்தத் தளங்களே காரணம் என ஈரான் குற்றம் சாட்டி வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த உங்கள் மண்ணைப் பயன்படுத்த அனுமதித்தால், நீங்களும் எதிரிகளே என்ற ஈரானின் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போது ஈரான் ஏவுகணைகள் பலவும் துபாயின் பாம் ஜுமேரா மற்றும் அபுதாபி துறைமுகங்கள் அருகே விழுந்து வெடித்துள்ளன.
போரை அவசரமாக முடிக்க வேண்டாம்:
அதேவேளை ஈரான் மீதான போரை அவசரமாக முடிக்க வேண்டாம் என அமெரிக்காவிற்கு வளைகுடா நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புத் தொடர்பில் அமெரிக்காவிற்கும் அரபு நாடுகளுக்கும் இடையே சிக்கலான இராஜதந்திரப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வளைகுடா நாடுகளின் எண்ணெய் விநியோகக் கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார உயிர்நாடிகள் மீது ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் தாக்குதல் தொடுத்து வருவதால், இந்தப் பிரச்சினையை அரைகுறையாக விட்டுவிடக் கூடாது என அரபு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

அமெரிக்காவை ஈரானுடன் போருக்குச் செல்லுமாறு வளைகுடா நாடுகள் நேரடியாகக் கோரவில்லை. இருப்பினும், ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக நீக்கப்படாமல் போரை அவசரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என அவை வலியுறுத்துகின்றன.
மேலும் ஈரானுக்கு எதிரான போரில் வளைகுடா நாடுகளும் நேரடியாக இணைய வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக அரேபிய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். ஆறு வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வர்த்தக மையங்களை ஈரான் ஏற்கனவே ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளது.
ஈரானின் அச்சுறுத்தல் நீடித்தால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் முற்றாகச் சிதைந்துவிடும் என்ற அச்சம் காரணமாகவே, ஈரானின் இராணுவ பலத்தை முழுமையாகக் குறைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரபு நாடுகள் விரும்புகின்றன. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையின் போக்குவரத்தை ஈரான் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
நீடிக்கும் இந்த யுத்தத்தில் அமெரிக்காவின் கைகள் ஓங்கி இருந்திருந்தால் இந்த நேரம் இந்த அரபு நாடுகளான அத்தனை நாடுகளும் ஈரானை தாக்கி அழிக்க அமெரிக்காவை விட முன்னே நின்று இருப்பார்கள் என்பதே உண்மையாகும்.
வளைகுடாவில் எரிசக்திப் போர்:
இரு தினங்களுக்கு முன்னர் கத்தார் எரிசக்தித் தளங்கள் மீது ஈரான் பாரிய தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய கிழக்கின் போர் தற்போது ஒரு முழுமையான எரிசக்திப் போராக உருவெடுத்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் மிக முக்கியமான எரிவாயுத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தும் தாக்குதல்களை ஒரு அபாயகரமான விரிவாக்கம் என ஐக்கிய அரபு இராச்சியம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதேவேளை சவுதி, ஓமான் உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் ஏவுகணை தாக்குதலில் ஐக்கிய அரபு இராச்சிய எரிவாயு உற்பத்தி முடக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹப்ஷான் எரிவாயு நிலையம் மற்றும் பாப் எரிவாயு வயல் ஆகியவற்றின் மீது ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தளங்களில் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அபுதாபி அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அத்துடன் கத்தார் மற்றும் சவுதி மீதான தாக்குதல்களால் பாரிய சேதங்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. கத்தாருக்கும் ஈரானுக்கும் பொதுவான பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானின் ‘சவுத் பார்ஸ்’ கடலோர இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து பாரிய தாக்குதலை முன்னெடுத்திருந்தன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, கத்தாரில் உள்ள எரிவாயுத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
அதேவேளை, தமது நாட்டின் இயற்கை எரிவாயுத் தளங்களைக் குறிவைத்து இரவு முழுவதும் ஈரான் ஏவிய ட்ரோன்களைத் தமது வான்பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சவுதி அரேபியாவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு அரபு நாடுகள் துணைபோவதாகக் கருதியே ஈரான் இந்த அதிரடித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளமை சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயுச் சந்தையில் பாரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிழல் யுத்த அதிகாரப் போட்டி
இன்றைய நிலையில் வளைகுடா நாடுகளின் தர்மசங்கடமான நிலை தொடர்கிறது. வளைகுடா நாடுகள் இப்போது இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கின்றன. ஒருபுறம் பாதுகாப்புக்காக அமெரிக்காவை நம்பியிருக்க வேண்டிய சூழல், மறுபுறம் அமெரிக்காவுக்கு இடம் கொடுத்தால் பக்கத்து நாடான ஈரானின் ஏவுகணைகளுக்குப் பலியாக வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
துபாயில் நடந்த தாக்குதல்கள் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியுள்ளன. மசகு எண்ணெய் விலை உயர்வு முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து இரத்து வரை போர் இப்போது ஒவ்வொரு நாட்டின் கதவையும் தட்டத் தொடங்கிவிட்டது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஒரு தலைமைப் போட்டி, இன்று நவீன ஏவுகணைகளாக உருவெடுத்து மத்திய கிழக்கின் அமைதியைப் புதைத்து வருகிறது. இது வெறும் மதம் சார்ந்தது மட்டுமல்ல. யார் இந்தப் பிராந்தியத்தின் தலைவர் என்பதில் சுனி தலைமையிலான சவுதி அரேபியாவுக்கும், ஷியா தலைமையிலான ஈரானுக்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தம் இன்னும் தொடர்கிறது.
ஈரான் தனது செல்வாக்கை அதிகரிக்க லெபனானில் ஹிஸ்புல்லா ஏமனில் ஹூதிகள் போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கிறது. இது சவுதி போன்ற நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. முன்பெல்லாம் அனைத்து அரபு நாடுகளும் இஸ்ரேலை எதிரியாகப் பார்த்தன. ஆனால், ஈரானின் அச்சுறுத்தல் அதிகரித்ததால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் பஹ்ரைன் போன்ற நாடுகள் ஆபிரகாம் உடன்படிக்கை மூலம் இஸ்ரேலுடன் கைகோர்த்தன. இது ஈரானுக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் உடனான உறவு

சமீப காலமாக அரபு நாடுகளின் அரசுகள் இஸ்ரேலுடன் நெருங்கி வருகிறது. ஆகவே, அது ஈரானுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்குமா என்பது ஐயமே. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் அதன் உச்ச தலைவர் மட்டுமல்ல, ராணுவத் தளபதியும், அதன் இஸ்லாமிய புரட்சிப் படைப் பிரிவின் தளபதியும் கொல்லப்பட்டனர்.
கொமேனி மீதான தாக்குதல் துல்லியமாக நடந்திருக்கிறது. பல்லாண்டு காலப் பொருளாதரத் தடைகளால் சூழப்பட்டிருக்கும் ஈரானுக்கு இப்போது ரஷ்யா, சீனா உட்பட யாரிடமிருந்தும் உதவி எந்தளவில் கிடைக்கும் என்பது தெரியவில்லை. இப்படி தொடரும் அரபு நாடுகளுடனான முரண்பாடு ஈரானின் பொருளாதாரத்தை மேலும் கடுமையாக பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
![]()