முச்சந்தி

மொசாட்டின் நுண்ணிய உளவு வலையமைப்பு… தொடர்ந்து வீழ்த்தப்படும் ஈரானிய தலைமை!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் டேவிட் கீஸ் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்படுவார் என்பதை சில நாட்களுக்கு முன்பே சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது)
இஸ்ரேல் உளவு அமைப்பு எப்படி சிந்திக்கின்றது? எப்படி எல்லாம் ஈரானில் செயல்படுகின்றது ? என்பதற்கு இந்த ஒரு அதிரடி தாக்குதலே சான்றாகும். இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் டேவிட் கீஸ் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்படுவார் என்பதை சில நாட்களுக்கு முன்பே சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் நாள் போரின் போது, நிகழ்ந்த ஆயத்துல்லா அலி கொமனேயின் உயிரிழப்புக்கு பின்னர், இந்த போரில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஈரானிய உயர்மட்ட அதிகாரி அலி லரிஜானி ஆவார்.
இலக்கு தவறாத உளவுத்துறை
கடந்த மார்ச் 13-ம் தேதியன்று டேவிட் கீஸ் தனது எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, லாரிஜானி தான் அடுத்த இலக்கு. இது எப்படி அவருக்கு தெரியும்? அந்தப் புகைப்படத்தில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள ஹபா பேட்டர் மிகச்சிறந்த உளவாளிகளில் ஒருவர், அதோடு அவர் தனது நெருங்கிய நண்பர். ஹபா இன்று காலைதான் ஈரானிலிருந்து திரும்பினார் என்றும் குறிப்பிட்டார்.
மார்ச் 17 திகதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் லாரிஜானி கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, டேவிட் கீஸ் இதனைப் பகிரங்கமாக அறிவித்துள்ளது இஸ்ரேலிய உளவுத்துறையின் ஊடுருவலை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இஸ்ரேலை சுற்றிலும் பல இஸ்லாம் நாடுகள் எதிர்த்து நிற்கின்றன. அவர்களால் ஒரு இஸ்ரேலியன் கொல்லப்படால் அடுத்த நிமிடம் 10 எதிராளியை கொன்று உடனுக்குடன் பதிலடி இஸ்ரேல் கொடுக்கிறது.
இவ்வாறு எப்படி ஒரு சின்னஞ்சிறு நாட்டால் அரபு நாடுகளை கையாள முடிகிறது. இதற்கு எல்லாம் அவர்களின் உளவு அமைப்பான மொசாட்டே அடிப்படைக் காரணம் ஆகும்.
இஸ்ரேல் எந்த வளமும் இல்லாத பாலைவன நாடு. சுமார் 800 சதுர மைல் பரப்பளவே கொண்ட மிக சிறிய நாடு. மக்கள் தொகை சுமார் 90 லட்சம்தான்.இஸ்ரேலைச் சுற்றிலும் முஸ்லீம் நாடுகள்தான் இருக்கின்றன. எகிப்து, பாலஸ்தீனம், ஜோர்டான், சிரியா, லெபனான், அரேபியா, ஈராக்.
கடந்த காலங்களில் மேற்சொன்ன முஸ்லீம் நாடுகள் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இஸ்ரேலை அழிக்க பலமுறை முயன்று விட்டன. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்விதான்.
வளைகுடாவின் பரம எதிரிகள் :
ஒரு பக்கம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருக்கிறார்கள். அவர்களின் திட்டம், ஈரானை துண்டு துண்டாக உடைத்தல், அவர்களின் ஆயுத வளத்தை அழிப்பது, ஈரான் மக்களை ஒருவருக்கொருவர் எதிராகத் திருப்புதல் எனத் திட்டமிட்டுள்ளார்கள். மறுபுறம் ஈரான் இருக்கிறது. அவர்களின் திட்டம், அமெரிக்காவின் பொருளாதாரத்தை அழிக்க மலிவான ட்ரோன்களைப் பயன்படுத்தி இஸ்ரேலை தாக்கி வருகிறது. மேலும் முஸ்லிம் உலகத்தை ஒன்றிணைக்கவும், மேற்குலக பங்குச் சந்தையை நொறுக்கவும், அமெரிக்க ஆதிக்கத்திற்கு அவலங்களை ஏற்படுத்தவும் ஈரான் முயற்சிக்கிறது. அத்துடன் வளைகுடாவில் அமெரிக்காவை மண்டியிடச் செய்யவும் ஈரான் விரும்புகிறது.
இரண்டு திட்டங்கள், இரண்டு கோணங்கள், முற்றிலும் எதிர்மாறானவை. மேலும் இந்த இரண்டு திட்டங்களும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. இதன் விளைவு ஈரான் அல்லது அமெரிக்காவை மட்டும் பாதிக்காது. இது இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும்.
ஈரானில் மொசாட்டின் ஊடுருவல்:
2025 ஆம் ஆண்டில், பன்னிரண்டு நாள் போருக்கு பிறகு மிகவும் துணிச்சலான ஊடுருவல் என்று உளவுத்துறை நிபுணர்கள் அழைக்கும் செயலை மொசாட் செயல்படுத்தியது. ஈரானில் மொசாட்டின் ஊடுருவலை ஒருபோதும் நிறுத்த முடியவில்லை.
ஈரானிய பாதுகாப்பு வழக்கமான பராமரிப்பு பிரச்சினைகள் என்று நிராகரித்த சிறிய தொழில்நுட்பக் குறைபாடுகள் போலத் தோன்றியவற்றுடன் இந்த நடவடிக்கை தொடங்கியது. ஆனால் பிப்ரவரி 2024இல் புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் உள்ள மென்பொருள் வழக்கமான விளக்கத்தை மீறும் முரண்பாடுகளைக் காட்டத் தொடங்கியது.
அப்போது தொழில்நுட்ப தற்செயல் நிகழ்வுகளாகத் தோன்றியவை உண்மையில் (ஆபரேஷன் ஷேடோ டான்ஸ்) கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை ஆகும். மொசாட்டின் பல அடுக்கு ஊடுருவல் தற்போது ஈரானின் முழு பாதுகாப்பு இயந்திரத்தையும் துவம்சம் செய்தது. மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகள் சைபர் போர் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பில் கவனம் செலுத்தியிருந்தாலும், மொசாட் மனித உளவியலை மையமாகக் கொண்ட மிக நீண்ட உளவு- தொழில்நுட்ப போரை கச்சிதமாக பயன்படுத்தி வருகிறது.
நுண்ணிய உளவுத் திறன்:
1967-ம் ஆண்டு முஸ்லீம் நாடுகள் அனைத்தும் இஸ்ரேலை எதிர்த்து போராடினார்கள். ஆனால் அதன் விளைவு என்ன ? இந்த நாடுகள் தங்கள் நாட்டின் சில பகுதிகளை இஸ்ரேலிடம் இழந்ததே மிச்சமாகும். அதன் பின்னர் பாலஸ்தீன போராளிகளின் தாக்குதலை திறம்பட எதிர் கொண்டது இஸ்ரேல். இன்று உலகிலேயே சிறந்த உளவு படை எதுவென்றால் அது இஸ்ரேல் நாட்டின் மொசாட் தான்.
1970களில் மொசாட்டின் கையோங்கிய நிலையில், உள்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாத காரணத்தால் வெளிநாடுகளில் இருக்கும் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகள்.1972-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற 11இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கறுப்பு செப்டெம்பர் (Black September) என்ற பாலஸ்தீன இயக்கத்தினர் தாக்கினர். அவர்களை சுமார் 20 ஆண்டுகள் உலகம் முழுவதும் தேடி வேட்டையாடி இறுதியில் அனைவரையும் கொன்றது இஸ்ரேலின் உளவு அமைப்பு.
இதையடுத்து 1976-ம் ஆண்டு ஜீன் 27ம் தேதி இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்விலிருந்து பாரிஸ் நகருக்கு சென்ற விமானத்தை பாப்புலர் ஃப்ராண்ட் என்ற பாலஸ்தீன தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பும் சேர்ந்து விமானத்தை கடத்தினார்கள். கடத்தப்பட்ட விமானம் உகாண்ட நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டது. அப்பொழுது உகாண்டாவை ஆட்சி செய்து கொண்டு இருந்தவர் இடி அமீன். இவர் பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவு கொடுத்து வந்தவர்.
அந்த விமானத்தில் மொத்தம் 316 பேர் இருந்தனர். தீவிரவாதிகளின் கோரிக்கை, இஸ்ரேல் சிறையில் உள்ள 40 தீவிரவாதிகளையும், கென்யா நாட்டில் உள்ள 13 தீவிரவாதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லை என்றால் அனைவரையும் கொன்று விடுவோம் என கோரிக்கை விடுத்தனர்.
இஸ்ரேலில் இருந்து 4000 கி.மீ.தொலைவில் உகாண்டா உள்ளது. தீவிரவாதிகளிடம் பேசிக் கொண்டே, நான்கு கனரக விமானங்களில் 100 ராணுவ வீரர்களும், ராணுவ தளவாடங்களும் ஆயுதங்களும் ஏற்றப்பட்டு, எந்த நாட்டு ரேடர்களிலும் படாமல், இரவு11 மணிக்கும் மேல் கடல்மார்க்கமாகவே சென்று உகாண்டா நாட்டிற்கே தெரியாமல் தீவிரவாதிகளையும் கொன்று, அனைவரையும் காப்பாற்றி, விடிவதற்குள் தன் நாட்டிற்கே வந்துவிட்டனர் இஸ்ரேலிய ராணுவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் உளவு பலவீனம்:
தற்போது நடக்கும் ஈரான் போரில் மொசாட் உளவுத்துறையின் மிகவும் நவீனமான கண்காணிப்பு அமைப்பை ஈரான் அரசால் தடுக்க இயலவில்லை. நேரடியாக உளவாளிகள் அளித்த தகவலாக இருக்கலாம். ஈரானிய தனிநபர்கள் குறித்து தொழில்நுட்ப முறையில் கண்காணித்ததன் மூலம் கிடைத்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில் ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளை இஸ்ரேல் குறிவைத்தது. அப்போது, தனிநபர்களின் நகர்வுகளை அறிய அவர்களின் தொலைத்தொடர்பு மற்றும் மொபைல்போன் சாதனங்களை ஊடுருவியதாக கூறப்படுகிறது.
சில சமயங்களில் முக்கிய அதிகாரிகளுடைய மெய்க்காப்பாளர்களின் நகர்வுகளை கண்காணிப்பதும் அடங்கும்.
நீண்ட காலமாக இவ்வாறு தகவல்களைச் சேகரிக்கும் போது, வழக்கமான நடத்தை மற்றும் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். இதன்மூலம், அவர்களின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கணிக்கவும், பலவீனமான தருணங்களை கண்டறியவும் முடியும்.
ஈரான் தனது எதிரிகள் அதிஉயர் தலைவரைப் பின்தொடர்வதை அறிந்திருந்தது. அடுத்தடுத்த மாதங்களில் இந்த பலவீனங்களை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்ய ஈரான் தவறியது பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவலை தடுப்பதில் ஈரானின் தோல்வியையோ அல்லது புதிய கண்காணிப்பு வழிகளைக் கண்டறிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ந்து தங்கள் உத்திகளை மாற்றிக் கொள்ளும் திறனையோ குறிக்கிறது.
இதன் விளைவாக தற்போது ஈரானின் முக்கிய தலைவரான அலி லரிஜானி இலக்கு தவறாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமனி கொல்லப்பட்ட பிறகு, மிக முக்கியமான பிரமுகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட அலி லரிஜானி (Ali Larijani), நாட்டின் மிகப்பெரிய அதிகார மையமாக உருவெடுத்தார்.
மார்ச் 18 இரவு, அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நிகழ்த்திய தாக்குதலின் போது, 67 வயதான அலி லரிஜானி உயிரிழந்துள்ளதாக, இஸ்ரேல் அறிவித்தது. இப்போது அவரும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்து விட்டார் என்பதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அலி லரிஜானி ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக இருந்தவர். இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை தெஹ்ரானில் அல்-குத்ஸ் தின பேரணியில் பொதுமக்கள் முன் அவர் தோன்றினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *