உலகம்

நிரந்தர குடியுரிமை பெறும் காலத்தை 10 வருடங்களாக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

பிரித்தானியாவின் குடியேற்றக் கொள்கையில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர் ஸ்டார்மரின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகளையும் ஆரம்பித்துள்ளது.

அதன்படி, பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை (ILR) பெற வேண்டிய காலத்தை தற்போதைய 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு, குடியேற்ற எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்படுவதாக அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்டகாலமாக நாட்டில் தங்கும் நபர்களின் தகுதிகளை கடுமையாக்குவதன் மூலம் குடியேற்ற அமைப்பை சீர்படுத்த முடியும் என அரசாங்கம் கூறியுள்ளது.

ஆனால், இந்த திட்டம் அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆளும் கட்சியிலேயே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) இந்த மாற்றத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

எதிர்ப்பாளர்கள் கூறுவதாவது,

நீண்டகாலம் உழைத்து வாழும் குடியேற்றவாசிகளுக்கு இது அநீதியிழைக்கும் செயல்பாடு என்பதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான திறமையான தொழிலாளர்களும் இதனால் பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன், குடும்பங்கள் மற்றும் சமூக நிலைத்தன்மை சீர்குலையும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முன்மொழிவு குறிதது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

நாட்டின் எல்லை பாதுகாப்பையும், குடியேற்ற கட்டுப்பாட்டையும் வலுப்படுத்த இந்த மாற்றம் அவசியம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

நிரந்தர குடியுரிமை காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தும் இந்த முன்மொழிவு, பிரித்தானிய அரசியலில் முக்கியமான விவாதமாக மாறியுள்ளதுடன், எதிர்காலத்தில் கடும் அரசியல் மோதலுக்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *