இலங்கை

மத்திய கிழக்கு பற்றி எரிகிறது உச்சக் கட்டத்தை அடையும் போர்?;  எண்ணெய் அழிப்பு யுத்தமாக மாறியது

வாஷிங்டன்: கட்டாரைத் தாக்கினால் ஈரான் பேரழிவைச் சந்திக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதனால் போர் உச்சக் கட்டத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28-ம் திகதி தாக்குதலை தொடங்கின.

இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு ராணுவ மோதலாக தொடங்கிய இந்தப் போர், தற்போது முழு அளவிலான எண்ணெய் அழிப்பு போராக மாறியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் மார்ச் 17 வரை ஈரானின் எரிசக்தி உற்பத்தி மையங்கள் மீது குறி வைப்பதை தவிர்த்தன.

ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா தாக்கிய போது கூட, ராணுவத் தளங்கள் மட்டுமே குறி வைக்கப்பட்டன. இந்நிலையில் ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. ஈரான் இதற்கு பதிலடியாக சவுதி அரேபியாவின் யான்பு துறைமுகத்தில் உள்ள அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் சாம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையம் மீது அன்று இரவு ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.

மேலும் கட்டார், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இயற்கை எரிவாயு மையங்கள் மற்றும் குவைத்தில் உள்ள 2 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ், இந்தியா உட்பட உலகளாவிய திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகத்தின் முதுகெலும்பாக உள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் நேரடியாகப் பாதிக்கும். இந்த விநியோகத்தில் நீண்ட கால பாதிப்பு ஏற்பட்டால் அது பல நாடுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்ததன் காரணமாக, மசகு எண்ணெய் விநியோகம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு உலகம் போராடி வரும் நிலையில், மசகு எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்கு ஏற்படும் எந்தவொரு சேதமும் பல ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வியாழனன்று வெளியிட்ட பதிவில், “ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு மையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. இஸ்ரேலின் தாக்குதலில் கட்டார் நாட்டுக்கு எந்த தொடர்பும் கிடையாது. இது ஈரானுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் இஸ்ரேலின் தெற்கு பார்ஸ் எரிவாயு மையம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக கட்டாரின் எல்என்ஜி எரிவாயு மையம் மீது ஈரான் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கிறது. கட்டார் எல்என்ஜி மையம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரான் பேரழிவைச் சந்திக்கும்” என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன.

இதேவேளை ஈரான் வான் பரப்பிற்குள் போர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் எப்-35 Lightning II ரக போர் விமானம் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க விமான தளம் ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளான போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, அமெரிக்காவின் எப்-35 ரக போர் விமானம் ஒன்று மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் ஒன்றில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என, இச்சம்பவம் குறித்து அறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button